உடுமலை: திருப்பூர் மாவட்டம் உருவாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் கோவை மாவட்டத்தில் இருப்பதால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்துடன் இருந்த சில பகுதிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு கடந்த 2009-ல் திருப்பூர் மாவட்டத்தை ஏற்படுத்தியது. இம்மாவட்டம் உருவாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. திருப்பூர், பல்லடம், தாராபுரம், அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில், உடுமலை, மடத்துக்குளம் ஆகியவை மாவட்டத்தின் முக்கியமான தாலுகாக்களாக உள்ளன.
இதில் உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட பண்ணைக்கிணறு, அடிவெள்ளி, புதுப்பாளையம், உடுக்கம்பாளையம், அணிக்கடவு, எரிசினம்பட்டி, கொங்கல் நகரம், கொடுங்கியம், கொசவம்பாளையம், சர்க்கார்புதூர், சின்னப்பாப்பனூத்து ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொத்து தொடர்பான ஆவணங்களை பதிவு செய்ய கோவை மாவட்டத்துக்குட்பட்ட கோமங்கலம்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுக வேண்டியுள்ளது.
உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியபட்டி, வீ.வேலூர், ஆமந்தகடவு, விருகல்பட்டி, ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கோவை மாவட்டம், நெகமம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தையே நாட வேண்டும். மாவட்டம் பிரிக்கப்பட்ட போதும், அந்தந்த மாவட்டத்துக்கென அரசு துறைகள் முறையாக வரைமுறைப்படுத்தாததே இப்பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மின்வாரிய அலுவலகங்கள் சில இன்னும் மாற்றப்படாமல் இருப்பதை போலவே சார்பதிவாளர் அலுவலகங்களும் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் அலைக்கழிப்புக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாவட்டத்துக்கான பகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது எழுந்த இந்த சிக்கல்கள் 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. இதன் விளைவாக வருவாய் தொடர்பான ஆவணங்களுக்கு திருப்பூர் மாவட்ட அலுவலர்களையும், சொத்து பதிவு தொடர்பான பிரச்சினைகளுக்கு கோவை மாவட்ட அலுவலர்களையும் அணுக வேண்டியுள்ளது.
பதிவு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அந்தந்த மாவட்டத்துக்குட்பட்ட அலுவலகங்களையும், அலுவலர்களையும் அணுகும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. எனவே, அங்கு சார் பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். உடுமலை ஒன்றியத்துக் குட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை எரிசினம்பட்டி பகுதியை உள்ளடக்கி அங்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.