கொடைக்கானல், ஊட்டிக்கும் நிலச்சரிவு அபாயம்: கேரளாவிடம் இருந்து தமிழகம் பாடம் கற்றுக்கொள்ளுமா?


மதுரை: தமிழக கோடை வாசஸ்தலங்களில் வயநாட்டைப் போன்ற பெரும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க, சுற்றுலா என்ற போர்வையில் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டாமல் சூழலியல் சார்ந்த தொலைநோக்குத் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசத்தை உலுக்கும் வகையில் கடந்த 30-ம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலா உள்ளிட்ட மலைப்பிரதேச அடர் வனம் மிகுந்த அழகிய கிராமங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுற்றுலா விடுதிகள், குடியிருப்புகள், தேயிலை எஸ்டேட்கள், சாலைகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியும், பாறைகள், கற்கள் தாக்கியும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்தையும், வாழ்விடங்களையும், உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கிறார்கள். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் அடக்கம். வயநாட்டை மறுசீரமைக்க, அம்மாநிலத்துக்கு பெரும் நிதி ஆதாரமும், ஆறுதலும் தேவைப்படுகிறது. வயநாடு, கேரளாவின் முக்கிய சுற்றுலாதலமாக திகழ்வதால், ஏராளமான சுற்றுலா விடுதிகள் மலைச்சரிவுகளில் கட்டப்பட்டிருந்தன. கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் முக்கியமாக வயநாடு செல்வது உண்டு.

வாகனங்கள் சென்று வருவதற்காக, அங்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்படி வனத்தை அதன் இயல்புக்கு மாறாக மாற்றி சுற்றுலா வளர்ச்சித்திட்டங்கள் என்ற போர்வையில் அழித்ததால் இம்முறை பெய்த தென் மேற்குப் பருவமழைக்கு, மண் தன்னுடைய பிடிமானத்தை விட்டதால் அதன் இடைவெளி விரிசல்களில் மழைநீர் புகுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக சுழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

வயநாட்டை போல், தமிழகத்தில் கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு, ஊட்டி, கொல்லிமலை போன்ற முக்கிய சுற்றுலா தளங்களிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு, ஊட்டியில் சுற்றுலா விடுதிகள், விஐபி-க்களின் பண்ணை வீடுகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன.

இவற்றுக்காக ஆழ்துளை கிணறுகள் முறைகேடாகப் போடப்படுகின்றன. கொடைக்கானல், சிறுமலை போன்ற கோடை வாசஸ்தலங்களில் சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. கொடைக்கானல் மலைச்சாலையில் அடிக்கடி பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதும் சிறு சிறு விபத்துகளும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

கொடைக்கானலில் 1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தொடர்ந்து விதிமுறை மீறல் கட்டிடங்கள் அதிகரிக்கின்றன.

அதுபோல், தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்தால் போடி மெட்டு மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழுகின்றன. மண் சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த விபத்துகள், மண் சரிவுகளை, திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகங்கள் அரசின் கவனத்துக்கு, உடனுக்குடன் கொண்டு சென்று, அதனை தடுக்க பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில் வளர்ச்சியை நோக்கி மட்டும் சிந்திக்காமல், வயநாடு போன்ற பேரழிவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என தமிழக அரசு விழித்துக்கொண்டு முக்கிய கோடை வாசஸ்தலங்கள் உள்ள மாவட்டங்களின் நிர்வாகங்களை அறிவுறுத்தி, அதற்கான சுழலியல் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

x