திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள விஜயராஜ்குமார் இன்று (திங்கள்கிழமை) மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த உள்ள நிலையில், பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் நடந்தது போல ஒரு பெரிய இயற்கை பேரிடர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டால் பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற காரணத்தால் பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள விஜயராஜ்குமார் இன்று (ஆக.5) மாவட்டத்தில் பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், பாலாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாலாற்று நீர்வள ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயல் மாவட்டத்தில் தொடங்கி கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் பயணித்து ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் பயணிக்கும் பாலாறு தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது.
இது உற்பத்தியாகும் இடம் கடல் மட்டத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் உள்ளது. தமிழகத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் துனை ஆறுகளாக கல்லாறு, சரஸ்வதி ஆறு, மலட்டாறு என பல பெயர்களில் உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளும் இம்மாவட்டத்தில் அதிகம்.
இவைகளின் மொத்த வடிநிலமாக உள்ளது பாலாறு மட்டுமே. மேற்காணும் பாலாறு பயணிக்கும் மொத்தம் 348 கி.மீ.பயண தூரத்தில் மேற்கில் மேக வெடிப்போ அல்லது 30 சென்டி மீட்டருக்கு மேல் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தால் தமிழக பாலாற்றில் அதிக வெள்ளம் வர வாய்ப்பு உள்ளது.
பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ. பயணிக்கும் இருபுற கரையும் உயரம் குறைந்தவாரே உள்ளது. இங்கு பாலாறு முட்புதற்களாலும், ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளதால் பெருமழை வெள்ளம் வந்தால் பாலாற்று கரையோர கிராமங்களும் நகரங்களும் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பாலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். இதை கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள விஜயராஜ்குமார் அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த நாளை (இன்று) வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், பாலாற்றை நேரில் ஆய்வு செய்து, பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, கழிவுகள் கலப்பதை தடுத்து, பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி பாலாற்றை மீட்டெடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.