சொந்த செலவில் இரவு பகலாக வாய்க்கால்களை தூர் வாரும் விவசாயிகள் @ நாகை


நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கருங்கண்ணியில் பாசன வாய்க்கால்களை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் இரவு பகலாக தூர் வாரி வருகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூலை 28-ம்‌ தேதி காவிரியில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கல்லணை வழியாக, காவிரி கடைமடையான நாகை மாவட்டத்துக்கு இன்னும் 2 தினங்களுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பொதுப்பணித் துறை மூலம், பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நிறைவு பெற்றது. இந்நிலையில், காவிரி நீர் தடையின்றி கடைமடை வரை வந்து சேர ஏதுவாக பல்வேறு இடங்களில் விவசாயிகள் சொந்த முயற்சியில் தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கருங்கண்ணி அருகே காவிரி கொண்டான் ஆற்றிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களை விவசாயிகள் சொந்த செலவில் இரவு பகல் பாராமல் தூர் வாரி வருகின்றனர். காவிரி கொண்டான் ஆற்றின் மூலமாக 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கருங்கண்ணி வழியாக பாயும் காவிரி கொண்டான் ஆற்றிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு தூர்வாரும் பணி ஆக.5-க்குள் நிறைவு பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கருங்கண்ணி விவசாயிகள் சங்கம் மற்றும் விழுந்தமாவடி இறவை நீர்ப் பாசன விவசாயிகள் ‌‌ சங்கத்தினர் இணைந்து இந்த தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீர் தடையின்றிவந்து சேர ஏதுவாக ஆகாயத் தாமரைகள் மற்றும் ‌ தேவையற்ற செடிகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் இரவிலும் தீவிரமாக நடைபெற்றது.

x