வெப்ப அலையை நுட்பமாக எதிர்கொள்வோம்!


வெப்ப அலையின் உக்கிரத்தை எதிர்கொள்ளும் நபர்

இயல்பு வெப்பநிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக 5 தினங்களுக்கும் மேலாக நீடித்தால் அதனை கவலைக்குரிய வெப்ப அலையாக கணிக்கிறார்கள். நடைமுறையில், 3 டிகிரி செல்சியஸ் உயர்வு 3 நாட்களுக்கு நீடித்தாலே உஷாராவது அவசியம். தற்காலத்தில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்த வெப்ப அலையின் போக்கு உயிர்கள் அனைத்தையும் வாட்டி வதைக்க ஆரம்பித்திருக்கிறது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்த வெப்ப அலைக்கு எதிராக கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு எச்சரிக்கை, அதற்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை ஆகியவையும் விடப்பட்டுள்ளன. இந்தியாவின் இதர பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஒப்பீட்டளவில் சற்றே மாறுபட்டிருந்தாலும், எதிர்வரும் அக்னி நட்சத்திரத்தின் மத்தியில், வெப்ப அலை அல்லது அதற்கு நிகரான பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியாது. நடப்பாண்டு 90% இந்தியா வெப்ப அலையிடமிருந்து தப்பிக்க முடியாது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெப்ப அலை அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தி, மகாராஷ்டிர மாநிலத்தின் அரசு நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்களை வெயிலில் கூட்டியதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்; பலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, வெயில் தாக்கம் அதிகமிருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, உரிய ஆடைகள், தடுப்பு முறைகளை பின்பற்றுவது ஆகியவை அவசியமாகின்றன. குறிப்பாக, வயதில் முதியோரும், குழந்தைகளும் வெயிலுக்கு எளிதில் இலக்காவார்கள் என்பதால், அவர்களை பகல் 11 - 3 மணி இடைவெளியில் வீட்டோடு வைத்திருப்பது உசிதம்.

கோடை வெயில் பாதுகாப்பு

கோடை பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், குழந்தைகளுக்கு அலைச்சல் தராது பாதுகாப்பதும் இதில் சேரும். கோடை பயிற்சி வகுப்புகள் குழந்தைகளின் கோடை விடுமுறைக்கான நோக்கத்தையே பழுதாக்குகின்றன. அந்தச் செலவில் குழந்தைகள் நிழலில் அமர்ந்து விளையாடுவதற்கும், வாசிப்பதற்கும் உரிய வசதிகளை செய்து தருவோம். உடலின் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான உணவூட்டம், பழங்கள், கீரைகளை உட்கொள்வதை பழக்குவோம். வெயிலில் இருந்து தப்பிக்கும் உத்தி என்ற போர்வையில் எந்நேரமும் ஏசியில் இருப்பது, சிறுநீரகங்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

கொரோனாவின் புதிய திரிபுகள் படிப்படியாக பரவி வரும் சூழலில், வெப்ப அலை காரணமாக எழுந்திருக்கும் புதிய சவாலையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வோம். நம்மையும் நமது அன்புக்கு உரியோரையும் வெப்ப அலையில் இருந்தும் வெற்றிகரமாக காத்திடுவோம்!

x