குமரியில் நல்ல மழை பெய்தும் உயராத பொய்கை அணையின் நீர்மட்டம்!


பொய்கை அணை போதிய அளவு நிரம்பாததால் விவசாயத்துக்கு தண்ணீர் செல்லும் மறுகால் பகுதியிலிருந்து நீர் வெளியேறவில்லை.

நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே பொய்கை மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பொய்கை அணை அமைந்துள்ளது. 2.10.2000-ம் ஆண்டில் அக்டோபர் 2-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இந்த அணை திறந்து வைக்கப்பட்டது. 31.58 ஹெக்டேர் (78.03 ஏக்கர்) நீர் பரப்பளவை கொண்ட இந்த அணை மூலம் 383.74 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டது.

ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குளங்களுக்கும், மேட்டுமதகு மூலம் நெல்லை மாவட்டத்தில் 8 குளங்களுக்கும் நீர் வழங்கும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணை மூலம் பாசனம் பெறாத பகுதிகளுக்கு பொய்கை அணை மிகவும் அவசியமானதாக விவசாயிகள் கருதுகின்றனர். மேலும் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும், நிலத்தடி நீரில் உவர் தன்மையினை அகற்றுவதிலும் இந்த அணை முக்கி பங்கு வகிக்கிறது.

42.45 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை திறக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆன போதிலும் இதுவரை ஒரு முறை மட்டுமே நிரம்பி உள்ளது. பருவமழை மற்றும் கன மழையிலும் கூட இந்த அணை நிரம்பவில்லை. விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பொய்கை அணை ‘பொய் ’அணையாக மாறிவிட்டது.

அணையின் முக்கிய நீர் ஆதாரமான சுங்கான் ஓடை, இரப்பையாறு ஓடைகளில் நீர்வரத்து தடைபட்டுள்ளதே இதற்கு முக்கிய காரணம். இதனால் பருவமழை நன்றாக பெய்தும் பொய்கை அணையில் தற்போது நீர்மட்டம் 15 அடியை கூட தாண்டவில்லை.

குமரி மாவட்டத்தில் கன மழை பெய்த போதும் பொய்கை அணை
நீர்மட்டம் உயரவில்லை .

ஏற்கெனவே தூர்ந்து போன பொய்கை அணையின் நீர் வழித்தடங்கள் பல கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இருந்தும் பலன் இல்லை. இதனால் சீரமைப்பு பணிகள் உரிய முறையில் செய்யப்படவில்லை என்பது புலப்படுகிறது. பொய்கை அணைக்கான நீராதாரங்கள் வனப்பகுதியில் உள்ளதால் இங்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்குவது இல்லை.

எந்த நோக்கத்துக்காக பொய்கை அணை கட்டப்பட்டதோ அது நிறைவேறாததால் காட்சி பொருளாகி விட்டது. எனவே இந்த குறையை நிவர்த்தி செய்திடும் வகையில் விவசாயிகளை உள்ளடக்கிய குழுவை அரசு அமைத்து இப்பகுதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

அவர்களது பரிந்துரையின் பேரில் நீர் வழித்தடங்களை புனரமைத்து அணைக்கு நீர் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர், குமரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக பொதுநல இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

x