ரயில் நிலையம் அருகே மண் அரிப்பு: ஆபத்தான நிலையில் ரயில் இருப்புப் பாதை பகுதி @கடலூர்


கிள்ளை ரயில் நிலையம் அருகே தண்டவாளம் செல்லும் பகுதிக்கு மிக அருகே வெள்ளாறு உள்ளது.

கடலூர் மாவட்டம் கிள்ளை ரயில் நிலையம் அருகே வெள்ளாற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அருகே ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளம் செல்கிறது. வெள்ளாற்றின் கரை மண் அரிப்பை சரி செய்யாவிட்டால், இந்த வழியே தென் தமிழகம் செல்லும் ரயில்கள் நிறுத்தப்படும் நிலை ஏற்படும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், மடுவங்கரை கிராம பகுதியில் வெள்ளாற்றின் வலது புறகரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடம் கிள்ளை ரயில் நிலையத்துக்கும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.

வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதும், கடல் நீர் உட்புகும் போதும், வெள்ளாற்றின் வலது கரையில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆற்றின் நகர்வு: 1915-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வெள்ளாறு அதன் பாதையை விட்டு சுமார் 1,400 மீட்டர் வரை நகர்ந்து இருப்பு பாதையை ஒட்டி மிக அருகாமையில் செல்கிறது. வெள்ளாற்றின் வலது புற கரை பகுதிக்கும் இருப்புப் பாதைக்கும் இடையில் 12 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.

ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த மண் அரிப்பின் காரணமாக பு.முட்லூர், சி.முட்லூர், நவாப்பேட்டை, புஞ்சை மகத்து வாழ்க்கை, மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை ஆகிய 6 கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும்.

மேலும் இருப்புப் பாதை துண்டிக்கப்படக்கூடிய அபாய சூழ்நிலை உள்ளது. அப்படியொரு சூழல் ஏற்பட்டால், தென் தமிழகத்துக்கு இந்த மார்க்கமாக ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

கரையைப் பலப்படுத்த.. இதுகுறித்த தொடர் புகாரின் போரில் 2010-11 நிதியாண்டில் தற்காலிக வெள்ள தடுப்பு பணியாக ரூ.92 லட்சம் செலவில், ஆற்றின் மண் அரிப்பு பகுதியில், ‘ட்ரில்லிங்’ போட்டு, ஏறக்குறைய 20 அடி உயரம் உள்ள பனைமரத் தடிகளை அப்படியே கரையினுள் இறக்கி, கரையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அதே இடத்துக்கு தற்காலிக வெள்ளத் தடுப்பு பணியாக 2013-14 ஆண்டில் ரூ. 25 லட்சத்துக்கும், 2014-15 ஆண்டு ரூ.24 லட்சத்துக்கும், 2018-19 ஆண்டு 53.13 லட்சத்துக்கும் வெள்ள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐஐடி அதிகாரிகள் ஆய்வு: ஆனாலும், இப்பணிகளால் நிரந்தர தீர்வு எட்டப் படவில்லை. தொடர்ந்து ஆற்றின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் இந்திய தொழில்நுட்ப பயிலக (IIT) தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் தள ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வறிக்கை பெறப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், வெள்ளாற்றின் வலது கரையை பலப்படுத்துவதன் மூலம் உச்ச வெள்ள அளவான விநாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்லவும், சென்னை - தஞ்சாவூர் இடையிலான இருப்புப் பாதை மற்றும் 6 கிராமங்களையும் பாதுகாக்கவும் வெள்ளாற்றின் வலதுபுற கரையை ‘ஷீட் பைல்’ (Sheet Pile) என்ற முறை மூலம் பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2022-23 நிதியாண்டு நீர் வளத்துறையால் ரூ.73 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, திட்டம் பரிசீலனையில் இருந்து வந்தது. இந்த நிலையில் (2023-24-ம் ஆண்டு) தற்போதைய விலைப்பட்டியலுக்கு ஏற்ப ரூ.87.45 கோடிக்கு திட்ட அறிக்கை மாற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை - தஞ்சாவூர் இருப்புப்பாதையை காப்பாற்றவும், 6 கிராமங்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும் நிரந்தர தடுப்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து பணிகளை விரைவாக தொடங்கிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

x