கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை சரிவு!


கொடைக்கானல்: வெளிமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் மலைப்பூண்டு விலை சரிவடைந்து ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது.

கொடைக்கானல் கிளாவரை, பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் சிங்கப்பூர், மேட்டுப்பாளையம் ரக மலைப்பூண்டு சாகுபடி நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் ரக பூண்டுக்கு மருத்துவ குணம் இருப்பதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பூண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். காரத்தன்மையும் அதிகம். 6 முதல் 10 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதே போல், மேட்டுப்பாளையம் ரகத்தை விதைப் பூண்டுக்காக பயிரிடுகின்றனர். இதனை, வெளி மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இம்மலைப்பகுதியில் விளையும் பூண்டை தேனி மாவட்டம் வடுபட்டி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

அறுவடை முடிந்து 2 மாதமான நிலையில், தற்போது அடுத்த நடவுப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சீசன் இல்லாததால் வரத்து குறைந்துள்ள நிலையில் வெளிமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் மலைப்பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனால் தற்போது ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.300 முதல் ரூ.400-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ‘மலைப்பூண்டு அறுவடை முடிந்து சேமித்து வைத்துள்ள பூண்டை பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகிறோம். சீசன் இல்லாததால் மலைப்பூண்டு வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தோம்.

ஆனால், வெளிமாநில பூண்டு வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்றால் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க மலைப்பூண்டுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய அரசு முன் வர வேண்டும்’ என்றனர்.

x