ஆசைகளை அழிக்க வேண்டும் என்றும் மனிதப் பிறவியின் நோக்கம் பற்றியும் மகான்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள். நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவாளும் ஏராளம் சொல்லி இருக்கிறார்.
நமது வாழ்க்கை உயர்வதற்கு காஞ்சி மகான் அருளிய அருளமுதத்தைப் பருகுவோமா?
‘எல்லோரும் ஆசைப்படுகிறபடி அவரவர்களுக்கு வசதிகளையும் சவுகரியங்களையும் செய்து கொடுத்தால், அதற்கு முடிவே இல்லாமல் போய்விடும். தேவையில்லாத ஆசைகள் மனசில் வேரூன்ற ஆரம்பித்துவிடும்.
கார், பங்களா, ரேடியோ, டெலிபோன் இருக்கிற அமெரிக்காவில் ஜனங்கள் திருப்தி அடைந்துவிட்டார்களோ? இல்லையே! அங்கே வாழ்கிற ஜனங்களுக்கு நம்மைவிட ஜாஸ்தி அதிருப்தி. இதனால்தான் கொலை அல்லது தற்கொலை, மயக்க மருந்து சாப்பிட்டுவிட்டுத் தன்னை மறந்து கிடப்பது என்றெல்லாம் அங்கே அதிகம் காணப்படுகிறது.
எல்லோருக்கும் கார் என்றாலும், இன்றைக்கு இருக்கிற கார் நாளைக்கு இல்லை. புதுசுபுதுசான ‘மாடல்’ கார்கள் இன்னும் நிறைய சவுகர்யங்களோடு நித்தமும் வந்தபடி இருக்கின்றன. புதுப்புது ‘மாடல்’ கார்களை வாங்குவதற்கு இப்போது சேர்த்து வைத்துள்ள ‘டாலர்’ (அமெரிக்க நாட்டு ரூபாய்) போதவில்லை.
ஆக, அவ்வப்போது வெளிவரும் புது ‘மாடல்’ கார் வாங்க இன்னும் சம்பாதிக்க வேண்டும். அப்புறம் அதை விட விலை ஜாஸ்தியாக இன்னும் கூடுதல் சவுகரியங்களோடு இன்னொரு ‘மாடல்’ கார் வரும்.
இப்படியே போனால் இது எங்கே போய் நிற்கும்? ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பறந்து செல்வதற்கு ‘ப்ளேன்’ வந்தாலும் வந்துவிடும் (அன்று மகான் சொன்னது பலித்துவிட்டது. இன்றைக்கு அமெரிக்காவில் வீட்டில் கார் வைத்திருப்பது போல் சிலர் குட்டி ‘ப்ளேனும்’வைத்திருக்கிறார்கள்).
வசிப்பதற்குத் தேவைப்படுகிற வீட்டை முதலில் எப்படிக் கட்டினோம்... ஓலைகளாலும், இன்ன பிறவற்றாலும் வெறும் குடிசையில் ஆரம்பித்தோம்.
அப்புறம் ஓலைகளை வீசிவிட்டு, ஓடு போட்டோம். அப்புறம் ‘சிமென்ட்’சுவர். ஒட்டுக் கட்டிடம். அதற்கு அப்புறம் ‘சிமென்ட்’டிலேயே பல நைஸ் ரகங்கள்.
சாணி போட்டு நித்தமும் மெழுகின மண் தரை காரையாகி, ‘சிமென்ட்’டாகி அப்புறம் ‘மொசைக்’ வந்தது. இப்ப அதையும் தாண்டி இன்னும் வழுவழுப்பான தரை என்று மாறிக் கொண்டிருக்கிறது. இது இப்படிப் போய்க்கொண்டே இருக்குமே தவிர, இதற்கு ஒரு முடிவு கிடையாது.
துணியை எடுத்துக் கொண்டாலும், தினமும் புதுப் புது ‘டிசைன்’கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டும். இப்போது இருப்பதே சவுகர்யம் என்றாலும், அதைவிட சவுகர்யத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலே மேலே எவ்வளவுதான் சம்பாதித்துக்கொண்டே போனாலும் திருப்தியோ நிம்மதியோ இல்லை.
எங்கோ தீப்பற்றி விடுகிறது... அதை அணைப்பதற்கு பெட்ரோலை ஊற்றலாம் என்று நினைப்பது எந்த அளவுக்கு ஆபத்தோ, அதுபோல்தான் புதுப்புது சாதனங்களைக் கண்டிபிடித்து மனிதர்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்துவிடலாம் என்று நினைப்பதும்.
எத்தனை எத்தனை பொருட்கள் புதிது புதிதாக வந்து அவற்றை மனிதன் அனுபவித்தாலும், அடுத்து இன்னொன்று, அதற்கடுத்து இன்னொன்று என்று பொருட்களும் புதிதாக வந்து, அதை அடை வதற்கு மனிதனுடைய ஆசைகளும் விரிந்து கொண்டே போகின்றன.
எனவே, அதிகமாக உயர வேண்டுமானால், அதற்குக் கடும் உழைப்பும் சிரமமும் வேண்டும். இதனால் ஏற்படுகிற அசவுகரியங்களைப் பொறுத்துக் கொள்கிற மனப்பான்மை வேண்டும்.
அதே சமயம் உழைப்பு இல்லாமல், சிரமப் படாமல் சுக ஜீவியாக இருந்தாலும் கண்டதை எல்லாம் நினைத்து அவற்றை எல்லாம் கேட்கத் துவங்கும் இந்த புத்தி.
இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லாவற் றையும் சமமாக பாவிக்கிற மனப்பான்மை வேண்டும். பணமும் வசதியும் எந்தத் தொழில்கார ருக்கும் அதிகம் இருக்கக் கூடாது. எவற்றை எல்லாம் பெற முடியவில்லையோ... ‘பரவா யில்லை... அது நமக்குக் கிடைப்பதற்கு விதி எழுதவில்லை போலிருக்கிறது’ என்று கருதுகிற ஆத்ம திருப்திதான், மன நிறைவுதான் மனிதனுக்கு வேண்டும். திருப்தி அடைகிற அந்த நிலை அமைந்தால்தான் ஆனந்தமாக பகவானைக் குறித்து தியானம் பண்ண முடியும். நமது சாஸ்திரங்கள் எளிமையான வாழ்க்கையை நமக்கு விதித்திருப்பதன் காரணமும் இதுதான்.’
-ஆசை பற்றியும், அதை வேரறுப்பதன் அவசியம் பற்றியும் இப்படிப் பல விஷயங்களை நமக்குத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் மகா பெரியவா!
இதில் இருந்து என்ன புரிகிறது?
எவ்வளவு கிடைத்தாலும், மனித மனம் விரும்பி அவற்றை சேர்த்துக்கொண்டே இருக்கும். தனக்கு, தன் குடும்பத்துக்கு என்று ஆசைகள் விரிந்துகொண்டே போகும்.
ஆக, ஆசைகளை அடக்க வேண்டும். போதும் என்கிற மனம் வர வேண்டும். இத்தகைய மனம் கிடைத்தால், பக்தியும் சுலபம். பலனும் அதிகம். ‘போதும்’என்று திருப்தி அடைகிற மனிதனிடம் தான் தானம், தர்மம் போன்ற எண்ணங்கள் ஏற்படும்.
தானம், தர்மம் செய்தால்தான் புண்ணியம் தேடி வரும். ஒருவர் சேர்த்து வைக்கிற புண்ணி யம்தான் அவருக்கு மோட்ச நிலையை அருளக் கூடியது.
இது தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வை இப்போது பார்க்கலாம். ஒருவருடைய மனதை எந்த அளவுக்குப் பக்குவப்படுத்த வேண்டும் என்று மகா பெரியவா விரும்புகிறார் என்பது இதைப் படிக்கிறபோது புரியும்.
மகான் அன்றைய தினம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்தார். அது ஒரு சாதுர்மாஸ்ய காலம்.
ஆடி மாத பவுர்ணமியை ஒட்டித் தொடங்குகிற விரதம், சாதுர்மாஸ்ய விரதம் எனப்படும். காஞ்சி காமகோடி பீடம் உட்பட எண்ணற்ற பீடாதிபதிகள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். வியாச பகவானை வணங்கி, இரண்டு மாதமோ அல்லது
நான்கு மாத காலமோ இந்த விரதத்தை மேற் கொள்வார்கள்.
காஞ்சி மகா பெரியவாளைத் தரிசித்து, ஆசி கள் பெறுவதற்கு மடத்தில் கூட்டம் கட்டுக் கடங்காமல் வந்திருந்தது. மகானுக்கு அர்ப்பணிப் பதற்கென்று பலரும் பல பொருட்களை வாங்கி வந்து குவித்தார்கள்.
சாதுர்மாஸ்ய காலத்தில் ஒரு துறவிக்கு நம்மால் ஆன பொருட்களை வாங்கிக் கொடுத் தால், புண்ணியம் சேரும்.
அன்று காலை மடத்தில் சந்திர மௌரீஸ்வரர் பூஜை வெகு நேரத்துக்கு நடந்தது. பூஜையை நேரில் தரிசித்த திரளான பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் போன்றவற்றை வழங்கிவிட்டு, அனைவருக்கும் தரிசனம் தந்து கொண்டிருந்தார் காஞ்சி ஸ்வாமிகள்.
ஆசி பெறுவது, திருமணப் பத்திரிகை வைத்து வணங்குவது, தங்களின் தனிப்பட்ட பிரார்த்தனையைத் தெரிவிப்பது என்று பக்தர்கள் வரிசையில் வந்துகொண்டிருந்தார்கள்.
ஒருவழியாக தரிசனமும் பூர்த்தி ஆயிற்று. தரிசித்து முடித்தவர்கள் அனைவரும் மடத்தை விட்டு அகலவில்லை. மகா பெரியவாளுக்கு எதிரில் அமர்ந்து அவரை ஆனந்தமாக தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க அன்பர் ஒருவர் சந்நிதானத்துக்குள் நுழைந்தார். நெற்றியில் திருநீறு கலைந்திருந்தது. சற்றுத் தொலைவில் இருந்து வருகிறார் போலும்.
அவரது தலையில் ஒரு சிறு மூட்டை.
பெரியவாளை, அமர்ந்து அனைவரும் தரிசித்துக்கொண்டிருக்கிற மதிய வேளையில், இந்த அன்பர் மட்டும் தனித்து வருவது பலரது பார்வையையும் ஈர்த்தது.
வந்தவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகானின் அருகே சென்றார். தன் தலையில் சுமையாக இருக்கும் சிறிய மூட்டையை இறக்கி, அவருக்கு எதிரே வைத்தார்.
பெரியவா அவரை அண்ணாந்து பார்த்தார்!
(ஆனந்தம் தொடரும்)