மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 06


மகா பெரியவா

காஞ்சிபுரத்துக்கும் வேலூருக்கும் இடைப்பட்ட சந்தவேலூர் என்கிற கிராமத்தில் முகாமிட்டிருந்தார் மகா பெரியவா.

மகானைத் தரிசித்து ஆசி பெறுவதற்குத் திரளான பக்தர்கள் சாதாரணமான அந்த ஊரில் கூடி இருந்தனர். பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு மார்வாடி வியாபாரி தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். சும்மா வெறுங்கைகளோடு வரவில்லை. ஏராளமான மளிகை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கூடை கூடையாகக் கொண்டு வந்திருந்தார்.

அதில் ஒரு குறிப்பிட்ட அட்டைப் பெட்டியைக் காண்பித்து, ‘‘அதற்குள் இருப்பது என்ன பொட்டலங்கள்?’’ என்று கேட்டார் காஞ்சி மகான்.

அதற்கு மார்வாடி, அந்த அட்டைப் பெட்டியில் இருக்கிற பொட்டலங்கள் அனைத்தும் தரமான காபிக் கொட்டைகள் மற்றும் டீத்தூள் என்று சொன்னதும், ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் சற்று அதிர்ந்துதான் போனார்கள்.

‘மகா பெரியவா காபி குடிப்பதை நிறுத்துமாறு பக்தர்களுக்கு உபதேசிப்பவர். அவரது திருச்சந்நிதியிலே மளிகை சாமான் கொண்டு வந்து கொடுக்கலாம். அரிசி மூட்டை கொண்டு வரலாம். காய்கறிகள் தரலாம்... இவர் என்னடான்னா எல்லாத்தையுமே கூடை கூடையா கொண்டு வந்துட்டு, திருஷ்டிப் பரிகாரம் போல் காபி கொட்டையைக் கொண்டு வந்து மகானுக்கு முன்னாலேயே வெச்சிருக்காரே.. ’என்று சிப்பந்திகள் நெளிந்தனர்.

மகான் ஏதும் பேசவில்லை. சிறு புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

‘காபி கொட்டை என்று சொன்னதும், இந்த சபை சில நிமிடங்களுக்கு அமைதியாக இருக்கிறதே... யார் முகத்திலும் எந்த ஒரு ரியாக்‌ஷனையும் காணவில்லையே... என்னவாக இருக்கும்?’ என்று மார்வாடி கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டும். அதுவாவது பரவாயில்லை... அதற்கு மேல் பேசாமலாவது இருந்திருக்கலாம் அல்லவா?

தொண்டையைக் கொஞ்சம் கனைத்துக்கொண்டு மகா பெரியவாளைப் பார்த்து, ‘‘இதில் இருக்கிற காபி கொட்டை மற்றும் டீத்தூளைப் பயன்படுத்தி ஸ்வாமிஜி காலைல எழுந்தவுடன் காபியோ, டீயோ அருந்தினால் எனக்கு பரம பாக்கியம்’’ என்று சொல்லி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பினார்.

மடத்து சிப்பந்திகளுக்கோ தர்மசங்கடம். பெரியவா என்ன சொல்லப் போறாரோ என்ற எதிர்பார்ப்பு!.

சர்வலோக ரட்சகரான அந்த நடமாடும் தெய்வம், மார்வாடியைப் பார்த்துப் புன்னகைத்தது.

பிறகு தன் இரு திருக்கரங்களையும் விரித்து, ‘‘ஆசை ஆசையா கொண்டு வந்திருக்கே நீ... ஆனா, இன்னும் இதெல்லாம் சாப்பிட நான் ஆரம்பிக்கலை’’ என்று காபி கொட்டை பொட்டலங்களைப் பார்த்துச் சொன்னார்.

மார்வாடிக்கு அப்போதுதான் விவரம் புரிந்தது ‘அடடே... இந்த ஸ்வாமிஜி காபி சாப்பிட மாட்டார் போலிருக்கு.’

அதற்குள் மகானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த ஒரு சிப்பந்தி பொறுமை இழந்து, மார்வாடி வியாபாரியைப் பார்த்துச் சற்று உரக்க, ‘‘பெரியவா இதையெல்லாம் சேர்த்துக்க மாட்டார்’ என்று குரலில் ஆத்திரம் தொனிக்கச் சொன்னார்.

அன்பே வடிவான காஞ்சி முனிவர் கோபப்படவில்லை. ‘‘வாசல்ல போய் அங்கே இருக்கிற பாராக்காரா எல்லாரையும் கூட்டிண்டு வா’’ என்று அந்தச் சிப்பந்தியிடம் அமைதியாகக் கூறினார்.

‘பாராக்காரர்’ என்றால், மடத்தில் காவல் பணி செய்யக் கூடியவர்.

மடத்தின் வெளியூர் முகாம்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி விடுகின்ற காரணத்தாலும், திருட்டு போன்றவை அங்கே நிகழ்ந்து விடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதையினாலும், பாராக்காரர்கள் காவல் காப்பது வழக்கம். அப்படி இந்த சந்தவேலூர் முகாமுக்குக் காவலாக இருந்து வரும் காவல்காரர்களைத்தான் அழைத்து வரச் சொல்லி சிப்பந்திக்கு உத்தரவிட்டார் மகா பெரியவா.

‘சாமி நம்மளைக் கூப்பிடுறாரே... ஏதேனும் முக்கிய விஷயமா இருக்கும்’ என்று தங்களுக்குள் பேசியபடி பாராக்காரர்கள் பரபரப்புடன் உள்ளே நுழைந்தனர். பெரியவாளைப் பார்த்ததும், கைகூப்பி வணங்கினர்.

அவர்கள் அனைவரையும் தன் அருகே வரவழைத்து, ‘‘பார்த்தேளா... பக்கத்து ஊர்லேர்ந்து இந்த சேட்ஜி ஒங்களுக்காக இத்தனையையும் கொண்டு வந்திருக்கார். இதெல்லாம் ஒங்களுக்கு ரொம்பப் புடிக்குமே... எல்லோரும் எடுத்துக்குங்கோ’’ என்று காபி கொட்டை மற்றும் டீத்தூள் பொட்டலங்களைக் காண்பித்துக் குதூகலமாகப் பேசினார் பெரியவா!

சந்தோஷமான பாராக்காரர்கள் அனை

வரும் ஆளாளுக்கு எத்தனை தேவையோ, அத்தனை பொட்டலங்களை அள்ளிக் கொண்டு போனார்கள்.

‘என்னடாது... காபியே குடிக்காத இந்த மகானுக்கு ஆசைப்பட்டு இத்தனை காபி பொட்டலங்கள் கொண்டு வந்து விட்டோமே’ என்று ஒரு கணம் மனம் கலங்கிக் காணப்பட்ட மார்வாடி, மகா பெரியவா உத்தரவின்படி பாராக்காரர்கள் அள்ளிக்கொண்டு போவதைப் பார்த்ததும் உற்சாகமானார்.

‘‘பாத்தியா... இவா அத்தனை பேருக்கும் இன்னிக்கு நீ பெரிய உபகாரம் பண்ணி இருக்கே...’’ என்று மார்வாடியின் இந்தச் சேவைக்கு ஒரு பாராட்டும் தெரிவித்து, அவரைக் குளிர்வித்தார் மாமுனிவர்.

மகானைப் பார்த்துக் கை கூப்பியபடி எழுந்த மார்வாடி, சாஷ்டாங்கமாக நமஸ்

காரம் செய்தார். குடும்பத்தினரும் நமஸ்

கரித்தனர். அவர்களுக்குப் பிரசாதம் தந்து ஆசிர்வதித்து அனுப்பினார் கலியுக தெய்வமான காஞ்சி பெரியவா.

காபிக்கு எதிராக பெரியவா பேசிய சம்பவங்கள் அதிகம் உண்டு!

இன்னும் ஒரு சுவாரசியமான சம்பவத்

தைப் பார்ப்போம்.

காஞ்சி மடத்தில் மகா பெரியவா இருக்கின்றபோது காபிக்கு அனுமதி இல்லை. காபி பவுடரே மடத்துக்குள் வரக் கூடாது. அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தார்.

வாரத்துக்கு ஒருமுறை மடத்தின் மேனேஜர், மகா பெரியவாளிடம் வந்து கணக்கு வழக்கு விவரங்களைப் படித்துக்காட்ட வேண்டும். இது ஒரு நடைமுறை. என்னென்ன வரவு, எத்தனை செலவு போன்ற விவரங்களை எல்லாம் கேட்டு, தேவைப்பட்டால் மகான் அறிவுரை வழங்குவார்.

அப்படி ஒரு முறை மேனேஜர் கணக்கு வழக்குகளைப் படித்துக்காட்டிக் கொண்டிருந்தபோது, கோசாலை பசுக்களுக்குப் புண்ணாக்கு வாங்கிய வகையில்  செலவு  என்று ஒரு தொகையைக் குறிப்பிட்டு படித்தார். அவர் சொன்ன தொகை கொஞ்சம் பெரிய தொகையாக இருந்தது.

‘‘நிறுத்து... நிறுத்து’’ என்று மேனேஜருக்கு வலக்கரத்தை அபய ஹஸ்தம் போல் காண்பித்து, ‘‘என்னது... ரெண்டு மூணு வாரமா மடத்து கோசாலை மாடுகளுக்குப் புண்ணாக்கு நிறைய வாங்கிப் போடறியோ... வழக்கத்தை விட அதிகமா இருக்கே... இத்தனை புண்ணாக்கை பசுக்களால தொடர்ந்து சாப்பிட முடியாதே’’ என்றார்.

மேனேஜர் மென்று விழுங்கினார். ‘‘அது

வந்து... பெரியவா... என்னை மன்னிக்கணும். இந்த மடத்துல இருக்கிறவா சிலருக்கும், மடத்துக்கு விருந்தினரா வர்ற சிலருக்கும் காலங்கார்த்தால காபி குடிக்காம இருக்க முடியலை. அதனால, காபி பொடி வெளில கடைல காசு கொடுத்து வாங்கறோம். காபி பொடி செலவுன்னு கணக்கு எழுதினா, பெரியவா கோபிப்பேள்கிற காரணத்துனால ‘புண்ணாக்குச் செலவு’னு எழுதிச் சரிக்கட்டிடறோம்’’என்றார் தயங்கித் தயங்கி.

‘‘காபி பொடி வாங்கற கணக்கை வாயில்லா பசு மாடுங்க பேர்ல எழுதறேளே...

அதுங்களுக்குத் துரோகம் பண்ணாதீங்கோ... இனிமே யார் யாருக்கு காபி வேணுமோ சாப்டுங்கோ. கணக்குல ‘காபி பொடி வாங்கின செலவுன்னே காட்டுங்கோ. நான் ‘அலவ்’ பண்ணிடுறேன்’’ என்றார்  மகான்.

‘காபி இல்லாமல் என்னால் முடியவே

முடியாது’ என்று அடமாக இருக்கின்றவர்

களை சற்று விட்டுத்தான் பிடிப்பார் காஞ்சி முனிவர்!

(ஆனந்தம் தொடரும்)

x