மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 05


மகா பெரியவா

அந்தக் காலத்தில் காவிரி நதி வளம் பெருக்கும் சோழ நாட்டுப் பகுதிகளில், குறிப்பாக கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு நடைமுறை உண்டு.

பொழுது விடிந்தவுடன் ஃபில்டர் காபி கையில் இருக்க வேண்டும் பல குடும்பங்களுக்கு! குறிப்பிட்ட நேரத்தில் இது இல்லாவிட்டால்,அவ்வளவுதான்! வீடே அதகளப்படும்.

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் நாலைந்து முறையாவது ஃபில்டர் காபி குடிப்பார்கள். அதிகபட்சம் ஏழெட்டுக்கு மேல் போகும்.

காரணம், உடலையும் உள்ளத்தையும் மயக்குகிற ஒரு சுவை. பக்கத்து வீட்டில் இருந்து காபியின் மணம் வந்தாலே, தானும் காபி குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

ஆனால், இந்த காபி பானத்துக்கு மகா பெரியவா எதிரி!

காபி குடிக்கிற வழக்கத்தைக் கடுமையாக எதிர்ப்பார். காரணம், இது சுதேசி அல்ல. விதேசி. அதாவது, அந்நிய நாட்டு இறக்குமதி!

அந்நிய இறக்குமதியை ஆதரிப்பதை விட, உள்ளூர் பானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று கஞ்சி, மோர் போன்றவற் றுக்காக மகா பெரியவா குரல் கொடுத்தார். அதில் ஆரோக்கியமும் சார்ந்திருந்தது. ‘‘அந்த நாட்டுக்கு, அவர்கள் சீதோஷ்ண நிலைக்கு காபி போன்ற பானங்களை அருந்துகிறார்கள். அதுபோல் நம் சீதோஷ்ண நிலைக்கு நமக்கு எது ஆரோக்கியமோ அதைத்தான் பருக வேண்டும்’’ என்பார்.

காபியை காஞ்சி சுவாமிகள் எதிர்ப்பதற்கு இன்னொரு காரணம், காபிக் கொட்டையில் அடங்கி இருக்கிற ‘கஃபைன்’ என்கிற நச்சு. இது உடல்

நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிற காரணத்தால்தான் காஞ்சி ஸ்ரீமடத்திலும், தான் ‘கேம்ப்’ செல்கிற ஊர்களிலும் காபிக்குத் தடை விதித்து விடுவார்.

காபி என்கிற பானத்தைக் குறித்து பெரியவா சொல்வதைத் தற்போது பார்க்கலாம்:

‘‘பசு தரக்கூடிய பொருட்களை வைதீக காரி யங்களிலும் (ஹோமங்கள்) தெய்வ காரியங்களி லும் (அபிஷேகம் போன்றவை) அதிகம் உபயோகப் படுத்தி வருகிறோம். தவிர, பசுவிடம் இருந்து பெறும் பால், தயிர் முதலியவற்றை மனிதர்களான நாம் சாப்பிட்டு ஆரோக்கியத்தை விருத்தி செய்து கொள்கிறோம். ஆனால், துர்பாக்கியவசமாக இன்று என்ன நடக்கிறது தெரியுமா? உடல் ஆரோக் கியத்துக்குத் தொந்தரவு தரக்கூடிய காபிக்குத்தான் பாலின் பெரும் பகுதி போகிறது.

உடம்பு, மனசு இரண்டையும் கெடுக்கும் ஒருவித நச்சான ‘கஃபைன்’ சேர்ந்த டிகாஷனோடு சுத்தமான பாலைச் சேர்த்து வீணடிக்கிறோம். எல்லோரும் உடல்நலனில் கவனம் செலுத்தி காபி குடிக்கிற கெட்ட வழக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். பல முறை காபி குடிப்பதற்குப் பதிலாக அந்தப் பாலின் ஒரு பகுதியைக் கோயில் அபிஷேகங்களுக்கும், இன்னொரு பகுதியை ஏழை நோயாளிகள் மற்றும் ஏழைக் குழந்தைகளின் வயிற் றுக்கும் போகுமாறு செய்ய வேண்டும்.

பால் ருசியே காணாமல் நோஞ்சான்களாக லட்சக் கணக்கான ஏழைக் குழந்தைகள் இருக்கும்போது நினைத்தபோதெல்லாம் பலர் காபி ருசி பார்ப்பது பெரிய துரோகம். ஏன் காபி காபி என்று அதற்கு அடிமையாகி உடல்நிலைக்கும் கெடுதலை நாமே தேடிக் கொள்ள வேண்டும்?காபிக்குப் பதில் மோர்க் கஞ்சி சாப்பிடலாம், மோரே அமிர்தம் என்று சாஸ்திரம் சொல்லி இருக்கிறது.

ஒரு பங்கு பாலில் இருந்து இரண்டு மூன்று பங்கு மோர் பெறலாம் (பாலில் இருந்து பெறப்படும் தயிரைக் கடைந்து தண்ணீரும் சேர்த்தால் மோர்) என்பதால் இது சிக்கனத்துக்கும் உதவுவதாக இருக்கிறது. சிலருடைய உடல்வாகுக்கு பால் ஒப்புக் கொள்ளாது. ஜீரணம் ஆகாது. அப்படிப்பட்டவர் களுக்கும் ஏற்றதாக அந்த கோமாதாவே பாலில் இருந்து மோரை அருள்கிறாள்.

உணவில் கொழுப்புச் சத்தே சேர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் உத்தரவிட்டிருக்கிற ஆசாமி கள்கூட, வெண்ணெய் கடைந்து எடுத்துவிட்ட மோர் சேர்த்துக் கொள்ளலாம்’’

இப்படி காபி வேண்டாம் என்பது பற்றி பெரியவா நிறைய சொல்லி இருக்கிறார்.

மகா பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்டவர் களில், படித்தவர்களில் காபியை முற்றிலும் துறந்து வாழ்கின்றவர்களும் உண்டு என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், ‘காபியை என்னால் விட முடியவில் லையே...’ என்று பலரும் இன்றைக்குத் தவிக்கி றார்கள்.

‘‘காபியை விட‘ டீ’ உத்தமம். அதற்காக, ‘டீ’யை யும் தொடர்ந்து  குடித்துக் கொண்டிருக்கக் கூடாது. காபியில் இருந்து ‘டீ’க்கு வந்து மெள்ள மெள்ள ஒரு கட்டத்தில் அதையும் விட்டு விட வேண்டும்’’ என்று சொல்வார் மகா பெரியவா!

காபி தொடர்பான மகான் சம்பந்தப் பட்ட ஒரு நிகழ்வை இப்போது பார்க் கலாம்.

காஞ்சிபுரத்துக்கும் ஸ்ரீபெரும்புதூ ருக்கும் இடையே உள்ள ஒரு கிராமம்.. சந்தவேலூர்.

ஒரு முறை பெரியவா இங்கே முகா மிட்டிருந்தார். இதுபோன்ற கிராமங் களைத் தேடித் தேடி மகான் ‘கேம்ப்’ போடுவார். அந்தக் கிராம மக்களுக்குத் தன்னால் ஆன உபதேசங்களைக் கொடுத்து, அவர்களையும் நல்வழிக்குத் திருப்பி முக்தியை அருளலாமே என்பதுதான் காரணம்.

உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளைத் தலையில் சுமந்தும், வண்டிகளில் எடுத்து வந்தும் ஸ்ரீமடத்தின் முகாமில் அர்ப்பணித்தார்கள். ஸ்ரீமடத்துக்குத் தங்களால் ஆன பொருட்களை வழங்குவதில் பலருக்கும் ஆனந்தம்.

சந்தவேலூருக்குப் பக்கத்து ஊர் ஒன்றில் இருந்து ஒரு வியாபாரி, மகா பெரியவாளைத் தரிசிக்கத் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். அவர் ஒரு மார்வாடி. வட இந்தியர்.

மகானைத் தரிசிக்க சந்தவேலூர் வருகி றபோது எண்ணற்ற மளிகைப் பொருட்களை யும் கொண்டு வந்தார். மூங்கில் கூடைகளிலும், மூங்கில் தட்டுக்களிலும் அவற்றை எடுத்து வந்திருந்தார்.

ஸ்ரீமடத்தின் ‘கேம்ப்’புக்குள் நுழைந்ததும் தான் கொண்டு வந்திருந்த பொருட்களை உள்ளே எடுத்து வந்தார். அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் ஆளுக்கு ஓரிரண்டு தட்டுகளை யும் கூடைகளையும் சுமந்து வந்தனர். மகா பெரியவாளுக்கு முன்னால் அனைத்தையும் பரப்பி வைத்தனர்.

கிட்டத்தட்ட ஸ்ரீமடத்தின் நித்திய தேவைக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களும், பூஜைப் பொருட்களும், இன்னபிற அத்தியாவசியப் பொருட்களும் இருந்தன.

ஸ்ரீமடத்து சிப்பந்திகள் ஒவ்வொரு கூடை யிலும் தட்டிலும் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தனர். ‘ஆஹா... இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் இவர் ஒருவரே கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரே’ என்று அந்த மார்வாடியை சந்தோஷத்துடனும் நன்றியுடனும் பார்த்தார்கள்.

மகா பெரியவாளும் தனக்கு முன்னால் பரப்பி வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையால் அப்படியே துழாவினார்.

அவற்றுள் ஒரு குறிப்பிட்ட மூங்கில் தட்டின் மீது மகா பெரியவாளின் பார்வை நிலை குத்தி நின்றது. அருகே இருந்த சிப்பந்தியை அழைத்து, குறிப்பிட்ட அந்தத் தட்டை அடையாளம் காண்பித்தார். அதை எடுத்து வருமாறு சொன்னார்.

பொருட்கள் கொண்டு வந்த மார்வாடிக்கு சந்தோஷம். ‘ஆகா!... தான் கொண்டு வந்தவற்றை இந்த மகான் இந்த அளவுக்கு ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு தட்டை மட்டும் கொண்டு வரச் சொல்கிறாரே’ என்று புளகாங்கிதப்பட்டார்.

அடுத்த ஒரு சில விநாடிகளில் சிப்பந்தி, அந்தத் தட்டைக் கொண்டு வந்து மகா பெரியவா முன்னால் வைத்தார்.

அதில், இருந்தவை, பேக் செய்யப்பட்ட சில பொட்டலங்கள்! அந்தப் பொட்டலங்களை மார்வாடியிடம் அடையாளம் காண்பித்து,‘‘அதெல்லாம் என்ன?’’ என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டார் மகான்!

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நடக் கின்ற விஷயத்தை இருந்த இடத்தில் இருந்து துல்லியமாகச் சொல்லக்கூடிய ஞானிக்கு, தன் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற பொட்டலங்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாதாம்!

எல்லாம் ஒரு விளையாட்டு... தனக்கு ஒன்றுமே தெரியாது என்று காட்டிக்கொள்கிற நாடகம்..!

தான் கொண்டுவந்த பொருட்களை மகா பெரியவா ஒவ்வொன்றாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்... அதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது மார்வாடிக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

மகான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் மார்வாடி: ‘‘இந்தப் பெரிய பேக்கிங்ல இருக்கிற பொட்டலங்கள்ல ‘ஸ்பெஷல் வெரைட்டி’ காபிக் கொட்டையும், அஸ்ஸாமில் இருந்து வரவழைக்கப்பட்ட ‘டீ’ பொடியும் இருக்கு.’’

பெரியவாளுக்கு காபி என்றாலே பிடிக்காது என்கிற விஷயம் மார்வாடிக்குத் தெரியாது போலும்!

(ஆனந்தம் தொடரும்)

x