மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 03


மகா பெரியவா

திருமணத்தின்போது வரதட்சணையாகத் தருவதாகச் சொன்ன தங்க நகைகளுக்குப் பதில் ‘கவரிங்’ நகைகளைப் போட்டு அனுப்பிவிட்டார் மணப்பெண்ணின் தகப்பனார். காரணம், அவரது அப்போதைய சூழ்நிலை..!

இந்த விஷயம், அவரைத் தவிர யாருக்குமே தெரியாது. பெண்ணைப் பெற்றவருக்கு என்ன ஒரு நினைப்பு என்றால்,எப்படியும் கூடிய சீக்கிரம் பணத்தை உருட்டிப் புரட்டி தங்க நகைகள் வாங்கி மகளிடம் கொடுத்து, அவள் கழுத்தில் அணிந்திருக்கும் ‘கவரிங்’ நகைகளை வாங்கிச் சென்று விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், அதற்குள் கடவுள் இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்துவான் என்பது யாருக்குத் தெரியும்?!

‘‘அத்தனையும் ‘கவரிங்’... ஊர்ல ஜமீன்தாரா வெள்ளையும் சொள்ளையுமா இருக்கும் உம்மை நல்லா ஏமாத்திட்டாங்க’’என்று அடகுக் கடையில் மார்வாடி முகத்தில் அறைந்ததுபோல் சொன்ன பின், அவமானத்திலும் ஆத்திரத்திலும் துடித்துப்போனார் ஜமீன்தார். தலை கவிழ்ந்தபடி வீட்டுக்கு வந்தவர், இருந்த ஆத்திரத்தில் மருமகளை ‘பேக்’ பண்ணி பிறந்த வீட்டுக்கு

 அனுப்பிவிட்டார்.

கனிந்த குரலுடன் காரணம் கேட்ட மருமகளையும் கன்னாபின்னாவென்று பேசி

விட்டார். வீட்டில் மனசு கிடந்து அடித்துக் கொண்டது ஜமீன்தாருக்கு. அடுத்து என்ன

செய்வதென்று புரியவில்லை. கைகளைப் பிசைந்தபடி தன் அறையில் அமர்ந்திருந்

தார். ஒரு தவறைச் செய்துவிட்டால், அதன் தொடர்ச்சியாகச் செய்கின்ற அத்தனை காரியங்களும் தவறாகவே முடியும் என்பதை நன்றாகவே அறிந்திருந் தார் ஜமீன்தார். எனவே, ‘இனி செய்கின்ற எந்த ஒரு காரியத்திலும் பதற்றம் கூடாது’ என்று தெளிந்தார்.

இந்த வேளையில்தான், அந்தகாரத்தில் தெரியும் ஜோதியாய், குழம்பி இருண்டு கிடந்த அவரது மனம் காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிச் சிந்தித்தது.

குழம்பிய நிலையில் தவிக்கின்றபோது காஞ்சிபுரம் சென்று அந்த மகானின் திருச்சந்நிதியில் சிறிது நேரம் இளைப்பாறினால், மனம் அமைதியுறும், பிரச்சி னைகள் அனைத்தும் தீரும் என்று திடமாக நம்பினார். காரணம், இதுபோன்ற ஓரிரு சந்தர்ப்பங்களில் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு காஞ்சிக்குச் சென்று பலன் அடைந்திருக்கிறார்.

காஞ்சி மகானைப் பற்றி மனதில் நினைத்தவுடனே, தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். அன்றைக்கு மகா பெரியவா திருச்சந்நிதி யில் அவ்வளவாக பக்தர்கள் கூட்டம் இல்லை. எனவே, நேராக மகா ஸ்வாமிகள் அமர்ந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார் ஜமீன்தார். உடன் வந்த நண்பர்களும் தொடர்ந்து சென்றனர்.

மகானின் திரு உரு முன் அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தனர்.

எல்லோரையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தது முக்காலமும் உணர்ந்த அந்தப் பர பிரம்மம்.

அனைவரும் ஏற்கெனவே ஸ்ரீமடம் வந்தவர்கள். மகா பெரியவாளிடம் அறிமுக மானவர்கள். ஜமீன்தாருடன் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைத்து அவர்களின் குடும்ப நலன் பற்றி மிகவும் அக்கறையாக விசாரித்தார் காஞ்சி முனிவர்.

நண்பர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

‘அடுத்து தன் பக்கம் திரும்புவார். தன்னைப் பற்றி விசாரிப்பார்’ என்று கைகளைக் கூப்பிய வண்ணம் காத்திருந்த ஜமீன்தாரைப் பெரியவா கண்டுகொள்ளவே இல்லை. அவ்வளவு ஏன், ஜமீன்தார் அமர்ந்திருக்கிற பக்கம் தன் பார்வையைக்கூடத் திருப்பவில்லை.

உடன் வந்த நண்பர்களுக்கும், அன்று மகானுக்கு சேவை செய்துகொண்டிருந்த காஞ்சி  மடத்துச் சிப்பந்திகளுக்கும் நடமாடும் தெய்வத்தின் இந்த அணுகுமுறை ஆச்சரியமாக இருந்தது. காரணம்  ஜமீன்தாரிடம் எப்போதும் மகா பெரியவா நன்றாகப் பேசுவார்.

ஆனால், இந்த முறை அவருடன் வந்த நண்பர்களுடன் தானே வலிய வலியப் பேசுகிறார்... அன்புடன் குலாவுகிறார்... அன்றலர்ந்த தாமரையாய் புன்னகை தவழும் திருமுகம். ஆனால், ஜமீன்தார் இருக்கும் பக்கம் தப்பித் தவறிக்கூடப் பார்வையைத் திருப்பவில்லை!

இந்தக் காட்சிகளைப் பார்த்த பின் ஜமீன்தாரின் கண்கள் பனிக்க ஆரம்பித்தன. ‘கலியுக தெய்வத்தைத் தேடி கவலைகளை மறப்பதற்காக வந்தேன்... ஆனால், கருணை கொண்டு என் மேல் தன் பார்வையைப் பதிக்க மாட்டேன் என்கிறாரே... என்ன தவறு செய்தேன்? தாயைத் தேடி வரும் குழந்தையை அரவணைக்க வேண்டிய அன்னை அல்லவா அவர்? வலியுடனும் வேதனையுடனும் வரும் குழந்தையைப் பார்த்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறாரே’ என்று உள்ளுக்குள் மருகினார். ‘தங்கள் திருப்பார்வை என் பக்கம் திரும்பாதா?’ என்று மகா பெரியவாளின் திருமுகத்தையே ஜமீன்தார் ஏக்கத்துடனும் கெஞ்சலுடனும் பார்த்துக்கொண்டிருந்தபோது பொசுக்

கென்று எழுந்து உள்ளே சென்று விட்டது அந்த நடமாடும் தெய்வம்!

துடித்துப்போனார் ஜமீன்தார். ‘குருவிடம் கேட்டதெல்லாம்

கிடைக்கும் என்றுதானே இங்கே வந்தேன்? ஏன் இந்தப் பாராமுகம்? இது போன்ற அனுபவம் எனக்கு இதற்கு முன் ஏற்பட்டதில்லையே’ என்று மனதுக்குள் அரற்றினார்.

இதற்கு மேல் ஜமீன்தாரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிற சிப்பந்தி ஒருவர் அங்கே நின்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். மெல்ல அவரிடம் சென்றார். ஜமீன்தார் பக்கம் திரும்பினார் சிப்பந்தி. சம்பிர

தாயத்துக்கு நலம் விசாரித்தார்.

ஜமீன்தாரால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘மகா பெரியவா தன்னைப் பார்க்கவே இல்லை... பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்... ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன் என்கிறார்’ என்று உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை தனக்குப் பரிச்சயமான இந்த சிப்பந்தியிடம் கொட்டலாம் என்று வாயைத் திறந்தார். வார்த்தைகளைக் கூட்டினார்.  துக்கம் தொண்டையை அடைக்க... வார்த்தைகள் வெளியே வர மறுத்து, வெறும் கேவலாக வெளிப்பட்டது.

அந்தச் சிப்பந்தியும் ஜமீன்தாரை நன்றாக அறிந்தவர்

தான். எனவே, தவிப்புடன் காணப்படுகிறவரைக் கனிவுடன் பார்த்தார். வார்த்தைகளால் அவரைச் சமாதானப்படுத்தி, ‘விஷயம் என்ன?’ என்று மெதுவாகக் கேட்டார்.

ஓரிரு விநாடிகளுக்குள் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு, விஷயம் எல்லாவற்றையும் கடகடவென்று ஒப்புவித்தார் ஜமீன்தார். ஆனால், கவரிங் நகை விஷயத்தையோ, மருமகளை அவள் பிறந்த வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்த விஷயம் பற்றியோ மூச்சு விடவில்லை. பாவம், கண்களில் நீர் தளும்ப ஜமீன்தார் சொன்ன விஷயம் அனைத்தையும் கேட்ட ஸ்ரீமடத்துச் சிப்பந்திக்கே பரிதாபமாக இருந்தது. ‘ஏன் மகா பெரியவா இவரிடம் பாராமுகமாக இருக்கிறார்?’ என்று யோசித்தவர், ‘‘சித்த இருங்கோ... நான் உள்ள போயி பெரியவாகிட்ட உங்களுக்காகப் பேசிட்டு வரேன்’’ என்று உள்ளே போனார்.

தனக்கு சிபாரிசு செய்வதற்காக உள்ளே செல்லும் சிப்பந்தியையே நம்பிக்கையுடன் பார்த்தபடி இருந்தார் ஜமீன்தார்.

உள்ளே போன சிப்பந்தி, மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். பிறகு, ‘‘பெரியவா....’’ என்று நிதானமாக ஆரம்பித்து,வெளியே நடந்த சம்பாஷணை முழுக்கச் சொன்னார். ஜமீன்தார் முகம் சுண்டி இருப்பதையும், தேம்பித் தேம்பி அவர் குரல் இறுகி இருப்பதையும் சொன்னார். அவ்வளவுதான்... பரிந்து பேசிய சிப்பந்தியைக் கோபமாகப் பார்த்தார் காஞ்சி மகான்.

பிறகு, ‘‘அவனுக்காக நீ பரிஞ்சுண்டு வரியோ? அவன் செஞ்சிருக்கிற காரியம் என்னன்னு ஒனக்குத் தெரியுமா?

அவன் வீட்டுல தப்பைப் பண்ணிட்டு அதுக்குப் பிராயச்

சித்தம் தேட எங்கிட்ட வந்து நிக்கறான். கூட, துணைக்கு

இருக்கட்டும்னு தன் சிநேகிதாளை எல்லாம் அழைச்

சிண்டு வந்திருக்கான். இவன் பண்ணின தப்புக்கு அவனோட சிநேகிதாள்லாம் என்ன பண்ணுவா? அதுக்காக அவாகிட்ட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினேன். அது இவனுக்குப் பொத்துண்டு வருது. இவன் பண்ணின காரியத்துக்கு இவன்கிட்ட எப்படி என்னால சிரிச்சுப் பேச முடியும்? அவன் செஞ்சிருக்கிறது சாதாரண காரியமா?’’ என்று மகா பெரியவா படபடப்பாகப் பேசி முடித்த

போது சிப்பந்தி வெலவெலத்துப் போனார்.

‘‘என்னை மன்னிக்கணும் பெரியவா... விஷயம் என்னன்னு தெரியாம நான் ஏதேதோ பேசிட்டேன்... என்னை மன்னிச்

சிடுங்கோ’’ என்று மீண்டும் நமஸ்காரம் செய்தார் சிப்பந்தி. தொண்டையை ஒருமுறை கனைத்துக்கொண்டு மகா பெரியவா பேசலானார்.

‘‘அவா ஆத்துக்கு வந்திருக்கிற மகாலட்சுமியை, மாட்டுப்பொண்ணை அடிக்காத குறையா வெளில அனுப்பிச்சிருக்கான். வாழவந்த பொண்ணை  அவளோட துணிமணி எல்லாம் பொட்டியில வெச்சு அடைச்சுக் கொடுத்து, ‘நீ உங்க அப்பா வீட்டுலயே இரு’ன்னு அனுப்பிச் சிருக்கான். எல்லாம் வரதட்சணை பண்ற வேலை...’’ என்று மகா பெரியவா நீளமாகச் சொல்லிக் கொண்டே போனபோது, சிப்பந்தி விதிர்விதிர்த்துப் போனார்.

எங்கோ இருக்கக்கூடிய ஜமீன்தார் வீட்டில் நடக்கிற காரியத்தை இங்கிருந்தபடி மகா பெரியவா எப்படிச் சொல்கிறார் என்று வியந்து சிப்பந்தி பார்த்தபோது, சர்வேஸ்வரனாகத் தெரிந்தார் மகான். சாஷ்டாங்கமாக விழுந்து சிப்பந்தி மீண்டும் நமஸ்கரித்தார்.

‘‘அவன் பண்ணின காரியத்தைச் சொல்றேன், கேளு’’ என்று ஆரம்பித்தார் மகான்.

(ஆனந்தம் தொடரும்...)

x