மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 01


மகா பெரியவா

போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ‘கீதை’யை உபதேசித்தார் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதை சொன்ன நெறிப்படி ஒருவர் வாழ்ந்தால், மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பது கண்கூடு.

இன்றைக்கு உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களுள் ‘பகவத் கீதை’யும் ஒன்று.

‘பகவத் கீதை’யைப் போல் கலியுகவாசிகளான நம் அனைவருக்கும் அறநெறிக் கருத்துகளை ‘தெய்வத்தின் குரல்’ என்ற தொகுப்பின் மூலம் அள்ளித்தந்திருக்கிறார் காஞ்சி மகா பெரியவா.

நாம் வாழ்ந்துவருகிற இந்தக் காலத்தில் மிகச் சமீபத்தில் ஸித்தி (மறைவு) ஆனவர். இவரது காலம் 1894 - 1994. நூறு ஆண்டுகளுக்கு ஒருசில மாதங்கள் குறைவாக வாழ்ந்தவர்.

துறவு இலக்கணம் என்ன சொல்கிறதோ, அதன்படி இம்மியும் பிசகாமல், சமரசம் செய்துகொள்ளாமல் கடும் தவ வாழ்க்கை வாழ்ந்த மகா ஸ்வாமிகளை நாத்திகர்களும் ஏற்றுக்கொள்வதுதான் சிறப்பு.

இப்பேர்ப்பட்ட மகானை மையப்படுத்தி வெளியாகப் போகிற இந்தப் புதிய தொடரில் அவர் சொன்ன கருத்து முத்துக்களைப் பார்க்கப்போகிறோம் முதலில்.

கருத்து கண்களில் பட்டால் மட்டும் போதுமா? எனவே, அந்தக் கருத்தை ஒட்டி நடந்த ஒரு நிகழ்வும் அடுத்து வரும். இந்த நிகழ்வுகள் மகா பெரியவாளுடன் அவர்தம் பக்தர்களுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களாக இருக்கும்.

ஆக, மகான் சொன்ன உபதேசத்தைப் படிக்கப்போகிறோம். அதை அடுத்து, உபதேசத்தை ஒட்டி நடந்த ஒரு சுவையான சம்பவத்தையும் அனுபவிக்க உள்ளோம்.

அந்த மகான் தொடாத சப்ஜெக்ட் இல்லை. பேசாத விஷயம் இல்லை. ஆன்மிகம், பக்தி, வேதம், பசு, குடும்பம், பெண், சிறுவர்கள், வியாபாரம், சனாதன தர்மம் என்று எதையும் விடவில்லை.

காஞ்சி முனிவர் அவ்வப்போது சொன்ன இத்தகைய தத்துவக் கருத்துக்களைத் தொகுத்து எழுதியவர் அவருடைய அத்யந்த பக்தராக வாழ்ந்து மறைந்த ரா. கணபதி அண்ணா அவர்கள்.

மகா பெரியவா அவ்வப்போது பேசுகிற விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, அவற்றையெல்லாம் அருமையாகத் தொகுத்து, அவரின் ஒப்புதலையும் பெற்று வெளியிட்டிருக்கிறார் ரா. கணபதி அண்ணா. இதை எழுத்துப் பணி என்று சொல்லக் கூடாது. மிகப் பெரிய தவப் பணி என்றே சொல்ல வேண்டும்.

பெறற்கரிய தத்துவங்களையும் கருத்துக்களையும் கொண்டிருப்பதால் அந்த மகானின் இந்த உபதேச முத்துக்களை ‘ஐந்தாம் வேதம்’ என்று அவரது பக்தர்கள் கொண்டாடுவார்கள்.

வாருங்கள், காஞ்சி முனி அருளிய அமுதத்தைத் துளித் துளியாகப் பருகத் தொடங்குவோம்.

சுமார் நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது என்பது, எத்தனை சிரமமான காரியம் என்று அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

சிரமத்துக்கு ஒரே காரணம், வரதட்சணை. அதாவது பணப் பிரச்னை!

மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாரிடம் ‘இத்தனை பவுன் போட்டு உங்கள் மகளை எங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இத்தனை ரூபாய் கேஷாகக் கொடுக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு இன்னின்ன வசதிகளைச் செய்து வர வேண்டும்’ என்றெல்லாம் நேரடியாக நிர்பந்திப்பதுதான் வரதட்சணை. தங்கள் மகளுக்கு நல்லபடியாகத் திருமணம் ஆக வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் இதைப் பொருட்படுத்தாமல் மாப்பிள்ளை வீட்டார் என்ன கேட்கிறார்களோ அதைக் கஷ்டப்பட்டு, கடன்பட்டுக் கொடுத்துவிடுவார்கள் பெண் வீட்டார். மகள் கல்யாணத்துக்குப் பட்ட கடனை அடைக்க முடியாமல் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாவார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். இதனால், பரிதாப இறப்புகளும் அந்தக் காலத்தில் பெருகின.

வரதட்சணையை எதிர்த்து அதிக அளவில் குரல் கொடுத்தவர் காஞ்சி மகா பெரியவா. வசதி இருக்கிற பெண் வீட்டார் ‘தங்கள் மகள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமே’ என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் சொல்கிற வரதட்சணைக்கு உடன்பட்டுவிடுவதுண்டு. வசதி இல்லாத பெண் வீட்டார், ‘நல்ல சம்பந்தம் கைநழுவிப் போய்விடுமே’ என்கிற கவலையில் சம்மதித்துத் தலையாட்டிவிடுவார்கள், எப்படியேனும் பணத்தைப் புரட்டிச் சமாளித்துவிடலாம் என்று!

திருமண நாள் நெருங்குகிற தருணத்தில் உருண்டு புரண்டு, பணத்தைப் புரட்டி வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றிவிடுகிற பெண் வீட்டாரும் உண்டு. அதே சமயம், சமாளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு, ‘நீங்க கேட்டதை இப்ப என்னால செய்ய முடியல சம்பந்தி... எம் பொண்ணு கழுத்துல தாலி ஏறட்டும்... கூடிய சீக்கிரமே நீங்க கேட்டதைக் குந்துமணி குறைவில்லாம செஞ்சு போட்டுடறேன். கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதீங்க’ என்று சபையிலேயே, மணமகனின் பெற்றோர் காலில் விழுகிறவர்களும் உண்டு.

மகா பெரியவா சொல்வார்:

“ ‘திருமணம் ஆகப்போகிற பெண்ணின் குணம் எப்படி இருக்கிறது? அவள் சார்ந்த குலம் எப்படி இருக் கிறது? ‘நம்முடைய இல்லத்தை ஒளிரச் செய்யப்போகிற கிரஹ லட்சுமியாக இவள் அமைய வேண்டும்’ என்று சந்தோஷமாக நினைத்து, எந்த கண்டிஷனும் போடாமல், அதாவது வரதட்சணையே வாங்காமல், பணம் காசைப் பற்றி நினைக்காமல் கல்யாணம் செய்துகொள்கிற நல்ல மனம் பிள்ளை வீட்டாருக்கு வர வேண்டும்” என்று வலியுறுத்துவார்.

அதோடு, அகிம்சாவாதியான மகான் இன்னொன்றையும் சொல்வார்: “வைர ஆபரணத்திலும் பட்டுத் துணியிலும் நம் பெண்களுக்கு இருக்கிற மோகம் எப்படியாவது போய்விட்டால் போதும். குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை மட்டுமல்லாமல் பெண் தர்மமே பிழைத்துவிடும். லட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரம் தேவையா என்று பெண்கள் யோசிக்க வேண்டும். சாப்பாட்டில் நாம் சைவம் என்று சொல்லிக்கொண்டால் போதுமா? ‘இத்தனை பட்டுப்பூச்சிகளைக் கொலை செய்த பாவத்துக்கு ஆளாகிறோமே’ என்கிற எண்ணம் பெண்களுக்கு வர வேண்டும். இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது, வைரத்துக்கும் பட்டுக்கும் இவர்கள் ஆசைப்படுவதோடு மட்டுமல்லாமல் வசதி இல்லாதவர்களுக்கும் இந்த ஆசையைத் தூண்டுவிடுகிறார்கள். ‘இத்தனை பட்டுப் புடவை வேண்டும். வைரத் தோடு போட வேண்டும்’ என்றெல்லாம் நிர்பந்தப்படுத்தினால் ஏழைப் பெண்களுக்கு எப்படி திருமணம் ஆகும்? இப்படிப் பல பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் நிறுத்தி வைக்கும்படி வரதட்சணை டிமாண்ட் செய்வது பாவம்” என்று சாடுகிறார் அந்த மகான்.

மேலே சொன்ன இந்த உபதேசத்தை ஒட்டி மகானின் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போமா?

அவர் ஒரு ஜமீன்தார். நஞ்சை, புஞ்சை என்று விளைச்சலுக்கும் வாழ்வாதாரத்துக்கும் எந்த விதமான குறைவும் இல்லாமல் வாழ்ந்துவந்தவர்.

எப்போதெல்லாம் மகா பெரியவா நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாகப் பயணப்பட்டுச் சென்று மகானை வணங்கி ஆசி பெற்று வரக்கூடியவர். திருமண வயதை நெருங்கிவிட்ட அவரது மகனுக்கு மணப்பெண் தேடினார். நற்குணம் நிரம்பிய ஒரு பெண்ணும் அமைந்தாள். ஆனால், மணப்பெண்ணின் குடும்பம், ஜமீன்தார் குடும்பம்போல் அத்தனை வசதி இல்லை. என்றாலும், தங்கள் சக்தி யையும் மீறிக் கல்யாணத்தைச் சிறப்பாகச் செய்துவைப்பதாக ஒப்புக்கொண்டனர் பெண்ணின் பெற்றோர். சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமே என்று மணப்பெண்ணின் தகப்பனார் தனக்குத் தெரிந்த இடங்களில் பணம் கடன் கேட்டு அப்ளிகேஷன் போட்டு வைத்தார்.

திருமண நாள் நெருங்க நெருங்க மணப் பெண்ணின் தந்தைக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. வேறென்ன, பணப் பிரச்சினைதான்! கடன் தருவதாக வாக்குறுதி கொடுத்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பின்வாங்கி விட்டார்கள்.

‘இத்தனை பவுன் நகைகளைத் திருமணத் தின்போது போடுகிறேன்’ என்று மணமகனைப் பெற்றோரிடம் வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், சொன்ன வார்த்தைகளைப் பெண் ணைப் பெற்றவரால் காப்பாற்ற முடியவில்லை.

தங்க நகை வாங்குவதற்குப் பணத்தைப் புரட்ட முடியவில்லை. திக்குமுக்காடிப் போனார். என்றாலும், திருமணம் ஆக வேண்டுமே! செய்யக் கூடாத அந்தக் காரியத்தைச் செய்யத் துணிந்தார்.

என்ன செய்தார் தெரியுமா?

(ஆனந்தம் தொடரும்...)

x