கோவையில் நூதன முறையில் கஞ்சா விற்கும் கும்பல்: சமூக வலைதளம் மூலம் தகவல் பரிமாற்றம்


பிரதிநிதித்துவப் படம்

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள், உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

போதைப் பொருட்கள் விற்பனையை போலீஸார் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்டாலும், கால மாற்றத்துக்கு ஏற்ப கடத்தல் கும்பலும் நவீன முறைகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனையை தொடர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறியதாவது: பெரும் சதவீத மாணவர்கள், இளைஞர்கள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதள பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள், இத்தளத்தை தங்களது வியாபார தளமாக பயன்படுத்து கின்றனர். கஞ்சா வியாபாரிகள் தங்களது முகவர்களாக உள்ள இளைஞர்கள் மூலம், போதைப் பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்களை அணுகுகின்றனர்.

கஞ்சா கேட்பவரிடம், அதற்கான தொகையை முதலில் ‘ஜி பே’ மூலம் பெற்று விடுகின்றனர். குறியீடு வார்த்தைகளில் இரு தரப்பினரும் பேசிக் கொள்கின்றனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் வாயிலாக போதைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு கஞ்சாவைக்கப்பட்டுள்ள இருப்பிடம் (லொகேஷன்) அனுப்பப்படுகிறது.

கஞ்சா பயன்படுத்துவோர் அந்த லொகேஷனுக்கு சென்று, மறைத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவை எடுத்துக் கொள்கின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர் போலி பெயரை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பயன்படுத்துவதோடு, பொது இடங்களிலுள்ள ‘வை-ஃபை’ வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

காவல் துறையினர் கூறியதாவது: கஞ்சா விற்பனை தொடர்பாக மாநகரில் கடந்தாண்டு 284 வழக்குகள் பதியப்பட்டு, 485 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். நடப்பாண்டும் கஞ்சா விற்பனை தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட பகுதியிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்ஸ்டா கிராமில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய ரகசியமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை தொடங்கி கண்காணித்து வருகிறோம், என்றனர்.

மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ‘‘கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகள், மேன்ஷன்களில் தங்கியுள்ள மாணவர்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? போதைப் பொருட்களின் புழக்கம் உள்ளதா? சர்ச்சைக்குரிய முன்னாள் மாணவர்கள், சந்தேக நபர்கள் வந்து செல்கின்றனரா? என ஆய்வு செய்கிறோம். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

x