புன்னகைப் பிரசவங்கள்!


ஒரு பெண் பிரசவிப்பது என்பது அந்தப் பெண்ணுக்கு மறுபிறப்பு என்று சொல்வதற்கு, பிரசவத்தின்போது ஏற்படும் வலியும் ஒரு காரணம். மனிதனுக்கு ஏற்படும் வலிகளுள் அதீத வலியை உண்டாக்கும் சிறுநீரகக் கல், எலும்பு முறிவு, சொத்தைப்பல் போன்றவற்றைக் காட்டிலும் இன்னும் கூடுதல் வலியுணர்வைத் தருவது பிரசவ வலி தான். ஆனால் அப்படிப்பட்ட வலியை வென்று உங்களால் புன்னகையுடன் பிரசவிக்க வழி உள்ளது என்றால்...? கேட்கவே இனிமையாக இருக்கிறதல்லவா? அறிந்துகொள்வோம் வாருங்கள், இந்த புன்னகைப் பிரசவத்தைப் பற்றி!

பிரசவ வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், பிரசவத்தின்போது கருப்பை சுருங்குதலும், கருப்பைவாய் விரிதலும்தான். நாம் அறிந்த ஃபெர்குஸன் வினை, ஆக்சிடோசின் சுரப்பு, கருப்பை சுருங்குதல் மற்றும் அதன் வாய் விரிதல் என அனைத்தும் ஒரேசமயத்தில் நிகழத் தொடங்கும்போது உடலில் நிகழும் இந்த மாற்றங்களைப் பற்றிய தகவல் தண்டுவட நரம்புகள் வழியாக மூளையை எட்டுகிறது, வலியும் அப்பெண்ணால் உணரப்படுகிறது.

பொதுவாக, பிரசவ வலி என்பது எல்லோருக்கும் ஒரேபோல் இருப்பதில்லை என்பதுடன், ஒருவருக்கே அடுத்தடுத்த பிரசவங்களில் ஒரேபோலவும் இருப்பதில்லை. கருவிலிருக்கும் குழந்தையின் நிலை, அதன் எடை, தாயின் இடுப்பு எலும்பின் தன்மை, கருப்பை சுருங்குதலின் அழுத்தம் மற்றும் அதன் வலிமை ஆகியன பிரசவ வலியையும் ஒவ்வொருவருக்கும் அதிகமாகவோ குறைவாகவோ உணரச் செய்கிறது.

நாம் ஏற்கெனவே பார்த்த பிரசவத்தின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் குழந்தையின் தலை நன்கு இறங்கி, கருப்பையின் வாய் விரியத் தொடங்கும்போதுதான் தாயினால் வலி அதிகம் உணரப்படுகிறது. Effective uterine contraction எனப்படும் இந்த வலி, மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறையும், ஒவ்வொரு வலியும் குறைந்தது ஒரு நிமிடம் வரையிலும், என உத்தேசமாக ஆறிலிருந்து இருபது மணிநேரம் வரைகூட நீடிக்கலாம். இரண்டாம் நிலையான கருப்பைவாய் முழுமையாக விரிவடைந்து குழந்தை பிறப்பது வரையிலான வலி அரைமணியிலிருந்து ஒரு மணிநேரம் வரை நீடிக்கலாம் என்பதுடன் இதில் வலி உணர்வு கூடுதலாக உணரப்படுகிறது. குழந்தை பிறந்தபின் நஞ்சு வெளியேறி கருப்பை சுருங்கும் மூன்றாம் நிலையில் பெரும்பாலும் அதிக வலி இருப்பதில்லை.

இந்த மூன்று நிலைகளுள் வலி நீண்ட நேரம் உணரப்படும் முதல்நிலையை ஆரம்பப் பிரசவ வலி, தீவிரப் பிரசவ வலி மற்றும் மாற்ற நிலை (early labour, active labour, latent phase labour) என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கும் மருத்துவர்கள், இந்த நிலைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளும் மாறுபடுகிறது என்கின்றனர். இவற்றுள், மிதமான கருப்பை சுருங்குதல் மற்றும் 3-4 சென்டிமீட்டர் வரை கருப்பைவாய் விரிதல் நிலையான (early labour) ஆரம்பப் பிரசவ நிலையின்போது, மூச்சுப் பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள், மசாஜ், நீர் ஒத்தடம் ஆகியன பரிந்துரைக்கப்படுவதுடன், இந்த 6-10 மணிநேரத்தில் தாயின் வலியும் குழந்தையின் துடிப்பும் முறையாகக் கண்காணிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் active labour எனும் தீவிர வலியின்போதுதான் அந்தத் தாய்க்கு நிற்பது, நடப்பது, பேசுவது என அனைத்தும் சிரமமாகிறது. இது ஆறு மணிநேரம் வரை நீடிக்கும் என்பதால் இந்த நிலையில்தான் உண்மையிலேயே வலி நிவாரணிகள் தேவைப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் இரண்டாம் நிலையில் அது நீடிக்கும் நேரம் குறைவென்றாலும் வலியின் தன்மை மிகவும் கூடுதல் என்பதால் நிச்சயம் இங்கும் உதவி தேவைப்படுகிறது.

ஆக, தாய்க்குப் பிரசவ வலி அதிகமாகவும் அதிக நேரமும் இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், ஆரம்பத்தில் லேசான வலியாகத் தொடங்கி, பின்னர் மெதுமெதுவாக அதிகரித்து, ஒருகட்டத்தில் உச்சகட்ட வலியாக மாறுகிறது. நீண்ட நேரம் நீடிக்கும்போது பிரசவிக்கும் பெண்ணை வாய்விட்டுக் கதறவும் வைத்துவிடுகிறது.

இப்படி எவ்வளவுதான் சொன்னாலும் வார்த்தைகளால் விளங்கவைக்க முடியாத இந்த வலியைப் பெருமளவு குறைத்து, ஒரு தாயைத் தனது பிரசவத்தின் அழகை உணர்ந்து மகிழ வைப்பதுதான் Epidural labour analgesia என்ற வலியில்லாப் பிரவச முறை.

தேர்ந்த மயக்கவியல் நிபுணர்களால் தண்டுவடத்தின் எபிட்யூரல் ஸ்பேஸில், அதற்கென இருக்கும் பிரத்தியேக ஊசியின் உதவிகொண்டு மருந்தைச் செலுத்தி பிரசவத்தின் வலியை முற்றிலும் மட்டுப்படுத்தி, குழந்தைப் பிறப்பை ஒரு வலியாக இல்லாமல் ஓர் இனிய அனுபவமாக மாற்றுவதுதான் இந்த எபிட்யூரல் முறை ஆகும். இந்த முறை வந்தபின்னர் புன்னகையுடன் பிரசவிக்கும் கர்ப்பிணிகளைப் பார்க்கும்போது, அழுகைச் சத்தம் நிறைந்த பிரசவ அறைகளும் புன்னகைப் பிரசவங்களால் அழகாகின்றன என்று மகப்பேறு மருத்துவர்களும் மகிழ்கின்றனர்.

அதிலும் சமீபத்திய 'வாக்கிங் எபிடியூரல்' எனப்படும் நுட்பத்தால், பிரசவ வலி குறைந்த பெண்ணால் நடமாடவும், எளிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் இயலும் என்பதால் இது எளிதான பிரசவத்துக்கு வழிவகுக்கிறது. மேலும் எபிடியூரல் சிகிச்சையில் ஒவ்வொரு முறை கருப்பை சுருங்கி விரியும்போதும் வலியே தெரியாமல் குழந்தை பிறப்பதை அவர் சுயநினைவுடன் சுகமாக அனுபவிக்கவும் முடியும் என்பதுதான் இதில் இன்னும் சிறப்பு.

பொதுவாகப் பிரசவ வலி தொடங்கி, முறையான பிரசவத்திற்கான அறிகுறிகள் தெரிந்தாலன்றி இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை என்பதுடன் இதில் உள்ள பக்கவிளைவுகளையும் தெளிவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு விளக்கிச் சொல்லி அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த வகை சிகிச்சையில், சமயங்களில் வாக்யூம் பயன்படுத்தி பிரசவத்தை மேற்கொள்ள வேண்டியும் வரலாம் என்பதுடன் ரத்த அழுத்தக் குறைவு தலைவலி, முதுகு வலி போன்றவை 2 சதவீதத்தினரில் தற்காலிகமாக ஏற்படக்கூடும் என்றும் வெகு அரிதாக ஒருசிலரில் ஒவ்வாமை அல்லது நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்றுகூறும் மயக்கவியல் நிபுணர்கள், என்றாலும் இவை எளிதில் குணப்படுத்தத்தக்கதுதான் என்கின்றனர். பொதுவாக தண்டுவட ஊசி என்றவுடன் எல்லோரும் பயப்படுத்துவது போல பிரசவத்திற்குப் பின்பு இந்த ஊசியின் காரணமாக எந்த முதுகு வலியும் ஏற்படாது என்றும் இவர்கள் உறுதியளிக்கின்றனர். மேலும் அதிமுக்கியமாக, இந்த வலியில்லாப் பிரசவ முறை, 'abnormal uterine action' காரணமாக மேற்கொள்ளப்படும் சிசேரியனைத் தவிர்த்துவிடுவதால் பெரும்பாலும் சுகப்பிரசவத்திற்கே வழிவகுக்கிறது என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்பட்டு ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் இயல்புநிலைக்குத் திரும்பிவிடுகிறது என்றாலும், நம்மிடையே இதன் பக்கவிளைவுகள் குறித்த வதந்திகளைக் கருத்தில் கொண்டு இதைத் தவிர்த்துவிடவே விரும்புகிறார்கள். இதனாலேயே இது இன்னும் சரியான முறையில் பரவவில்லை என்று சொல்லலாம். உண்மையில் பிரசவ வலியுடன் ஒப்பிடும்போது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட பக்கவிளைவுகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்றுகூறும் மருத்துவர்கள், முதல் பிரசவத்திற்கு எபிடியூரல் முறையை உபயோகித்த யாரும் இரண்டாவது பிரசவத்திலும் இதே முறையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், இது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உணரலாம்.

எபிடியூரல் என்ற இந்த வலியில்லா ஊசியைப் போலவே Entonox எனப்படும் சிரிக்கும் வாயு மற்றும் ஆக்சிஜன் கலந்த வாயுவைத் தரும் சிகிச்சை, பெத்தடின், மார்ஃபீன் போன்ற போதை மருந்துகள் உபயோகம், TENS எனும் சருமத்தின் நரம்புகளைத் தூண்டும் முறை, அக்குபஞ்சர் போன்ற இன்னும் சில வலி நிவாரணி முறைகளும் உள்ளன என்றாலும், பக்கவிளைவுகள் கூடுதல் அல்லது செயல்திறன் குறைவு என்பதால் இந்த முறைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது இங்கு கூடுதல் தகவல்.

மேலும் இந்த வலியில்லாப் பிரசவ முறை, அதன் நிறைகுறைகள் ஆகியவற்றைப் பற்றி கருவுற்ற தாய்க்கு மருத்துவர் எவ்வளவுதான் ஆலோசனைகள் வழங்கினாலும், இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் அந்தத் தாயின் முடிவு மட்டுமே. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வலி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அதன் வேதனையை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்ததாகும்.

ஒரு பெண் தாயாவதும், அந்தத் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுப்பதும் அற்புதமான தருணங்கள்தாம். அந்த அற்புதத் தருணங்களை இன்னும் அழகாக்குகிறது இதுபோன்ற வலியில்லாப் பிரசவம் எனும் புன்னகைப் பிரசவங்கள் என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது..!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

x