இதே தேதி... முக்கியச் செய்தி: சர்வாதிகாரிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த சகோதரிகள்!


உலகமெங்கும் உள்ள பெண்களில் 30 சதவீதம் பேர், உடலளவில் ஏதேனும் ஒரு வகையில் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒவ்வொரு நாளும் பெண்கள், சிறுமிகள், ஏன் குழந்தைகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு எதிர்கொள்கின்றனர். நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கிறது ஐநா. இந்தத் தேதியை ஐநா தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் ரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு இருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசு நாட்டை ஆண்டுவந்தவர் அதிபர் ரஃபேல் ட்ருஹியோ. அவரது கொடுங்கோல் ஆட்சி ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அந்த அவலத்துக்கு எதிராக ‘மிராபால் சகோதரிகள்’ என அழைக்கப்பட்ட பாத்ரியா, டெடே, மினேர்வா, மரியா தெரசா ஆகியோர் போராடினர்.

அவர்கள் சிபாவோ பிராந்தியத்தின் நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை என்ரீகே மிராபால் ஃபெர்னாண்டெஸும், தாய் மெர்சிடிஸ் ரெயெஸும் அவர்களை நன்கு படிக்கவைத்தனர். அநியாயத்தைக் கண்டு அஞ்சாத துணிவு கொண்ட அந்தக் குடும்பத்தினர், ட்ருஹியோவின் அடக்குமுறை ஆட்சியைக் கடுமையாக வெறுத்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ட்ருஹியோவின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவர்கள் அதை ஏற்கவில்லை. தேவாலயங்களில்கூட ‘சொர்க்கத்தில் கடவுள்; பூமியில் ட்ருஹியோ’ எனப் பதாகை வைக்கப்பட்டன. அந்த அளவுக்கு சுயமோகியாகவும் இருந்தார் ட்ருஹியோ.

மிராபால் சகோதரிகளில் பாத்ரியாதான் மூத்தவர். 17 வயதில் அவருக்குத் திருமணமானது. கணவர் பெத்ரோவும் ட்ருஹியோவை அடியோடு வெறுத்தார். அதேபோல், மினெர்வாவின் பள்ளித் தோழியின் உறவினர் ஒருவர் ட்ருஹியோவின் ஆட்களால் கொல்லப்பட்டார். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தங்கள் அரசியல் எதிரிகளைக் கொன்றழிக்கும் வேலைகளை ட்ருஹியோவின் அரசு செய்துவந்தது. அத்தகைய சர்வாதிகார அரசின் அவலங்கள் குறித்து அந்தச் சகோதரிகள் விவாதிக்கத் தொடங்கினர். டெடே மட்டும் அரசியல் விவாதங்களில் அதிகம் பங்கேற்றதில்லை.

பெண்களை அழைத்து விருந்துகளில் பங்கேற்கச் செய்து அவர்களை வன்கொடுமை செய்வது ட்ருஹியோவின் வழக்கம். 1949-ம் ஆண்டில் ஒருமுறை மிராபால் சகோதரிகள் விருந்துக்கு அழைக்கப்பட்டனர். தவிர்க்கவே முடியாது என்பதால், குடும்பத்துடன் அவர்கள் அங்கு சென்றனர். மினேர்வா ட்ருஹியோவுடன் வேண்டாவெறுப்பாக நடனமாடினார். எனினும், பாலியல் உறவுக்கு அழைத்த ட்ருஹியோவின் உத்தரவுக்கு உடன்படாமல் அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறினார். அதிபரை அவமதித்துவிட்டதாக அந்தக் குடும்பம் குறிவைக்கப்பட்டது. தந்தை என்ரீகே கைதுசெய்யப்பட்டார். அவரது சொத்துகள் அரசால் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே, சட்டக் கல்வி பயின்ற மினேர்வா, படிப்பை வெற்றிகரமாக முடித்தாலும் அவர் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்லூரிக் காலத்தில் மனோலோ தவாரிஸ் ஜுஸ்டோ எனும் இளைஞரைச் சந்தித்தார் மினேர்வா. இருவரும் காதலித்தனர். மனோலோவும் ட்ருஹியோவை வெறுத்தவர். 1955-ல் மினேர்வா - மனோலோ ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது.

அந்தக் காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில், கொடுங்கோல் அரசுகளுக்கு எதிராகப் புரட்சி இயக்கங்கள் தோன்றின. டொமினிக்கன் குடியரசு நாட்டில் அவ்வாறு உருவான புரட்சிகர இயக்கத்தை ட்ருஹியோவின் படைகள் நசுக்கின. இதையெல்லாம் பார்த்த மிராபால் சகோதரிகள், ஒத்த கருத்தைக் கொண்டவர்களுடன் இணைந்து புரட்சி இயக்கத்தை 1959 ஜூன் 14-ல் தொடங்கினர். ‘லாஸ் மரிபோஸா’ (வண்ணத்துப்பூச்சிகள்) எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கத்தில் அவர்களது கணவர்களும் அந்த இயக்கத்தில் பங்கெடுத்தனர். ட்ருஹியோவின் அட்டூழியங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை, பொதுமக்களிடம் அந்த இயக்கத்தினர் விநியோகித்தனர். ரகசியக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

ஆனால், அவர்களின் செயல்பாடுகளை உளவுபார்த்துவந்த அரசு, மினேர்வா, மரியா தெரசா உள்ளிட்ட பலரைக் கைதுசெய்தது. அந்தக் காலக்கட்டத்தி, பாத்ரியா தான், சிறையிலிருந்த புரட்சிக்காரர்களுடன் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்தை மேற்கொண்டுவந்தார்.

இதற்கிடையே, நீண்டகாலமாக டொமினிக்கன் குடியரசு மக்களைப் பாடாய்ப் படுத்திவந்த ட்ருஹியோ குறித்து அமெரிக்கா அதிருப்தியடைந்தது. சுதாரித்துக்கொண்ட ட்ருஹியோ அரசு, மினேர்வா, மரியா தெரசா உள்ளிட்ட சிலரை விடுதலை செய்தது. ஆனால், அவர்களது கணவர்கள் விடுவிக்கப்படவில்லை. மிராபால் சகோதரிகளின் விமர்சனக் குரல்கள் ட்ருஹியோவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தன.

1960 நவம்பர் 25-ம் தேதி, சிறையில் இருந்த தங்கள் கணவர்களைச் சந்திக்க பாத்ரியா, மினேர்வா இருவரும் சென்றனர். மரியா தெரசாவும் அவர்களுடன் சென்றிருந்தார். காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது ட்ருஹியோவின் ஆட்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் ஜீப் ஓட்டுநர் உட்பட நான்கு பேரும் உயிரிழந்தனர். நடந்தது விபத்துதான் என நம்பவைக்க, சடலங்களுடன் ஜீப்பை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டனர் ட்ருஹியோவின் ஆட்கள். அத்துடன் தொல்லை ஒழிந்தது என்றுதான் ட்ருஹியோ நினைத்தார். ஆனால், அவரது நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்காவும் ரகசிய விசாரணையைத் தொடங்கியது. அந்நாட்டுடனான தூதரக உறவையும் முறித்துக்கொண்டது.

அதற்குப் பின்னரும் ட்ருஹியோவின் ஆட்சி தொடரத்தான் செய்தது. ஆனால், அவரது ஆட்டத்துக்கு ஒருநாள் கொடூரமான முடிவு ஏற்பட்டது. 1961 மே 30-ல் டொமினிக்கன் குடியரசு ராணுவத்தைச் சேர்ந்தவர்களே அவரைப் படுகொலை செய்தனர். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் பங்கு இதில் இருப்பதாக ஒரு பேச்சு உண்டு. எப்படியோ, சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தங்கள் சொந்த வாழ்க்கையைவிடவும், மக்களின் துயருக்கு விடிவுகாண வேண்டும் எனும் முனைப்புடன் போராடிய மிராபால் சகோதரிகளை மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்தனர்.

1999-ல், அவர்களது நினைவுதினத்தை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக அறிவித்தது ஐநா சபை. அவர்கள் வசித்த மாகாணத்துக்கு மிராபால் எனும் பெயர் வைக்கப்பட்டது. கரன்ஸி நோட்டில் அவர்களது படங்கள் இடம்பெற்றன. இன்னும் பல கெளரவங்கள் அந்தச் சகோதரிகளுக்குக் கிடைத்தன.

அடக்குமுறைக்கு அடிபணியாத சுயமரியாதைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது!

x