இதே தேதி... முக்கியச் செய்தி: துப்பாக்கி சுமந்த சிறுவனின் துயரக் கதை!


இளமையில் வறுமை கொடுமை என்பார்கள். உள்நாட்டுக் கலகம், வன்முறை, பட்டினி என அல்லல்படும் சில ஆப்பிரிக்க நாடுகளின் சிறார்களின் வாழ்க்கை அதைவிட கொடுமையானது. புத்தகங்களை ஏந்த வேண்டிய வயதில் துப்பாக்கிகளை ஏந்திப் போரிடும் நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் அங்கு ஏராளம். உலகம் முழுவதும் 3 லட்சம் குழந்தைகள் கலகப் படைகளிலும் அரசுப் படைகளிலுமாகக் கட்டாயத்தின் பேரில் போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள் என்பது இன்னொரு கொடுமை. இப்படி இளம் வயதில் துப்பாக்கி ஏந்தும் சூழலை எதிர்கொண்ட ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனின் கண்ணீர்க் கதை இது!

அந்தச் சிறுவனின் பெயர் இஷ்மாயில் பியா. 1980 நவம்பர் 23-ல், தென்மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனின் தெற்கு மாகாணத்தில் உள்ள மோக்ப்வெமோ கிராமத்தில் பிறந்தவன். அந்தச் சிறிய கிராமத்தில் வசித்த மக்கள் மிக எளிமையானவர்கள். சிறுவன் பியா, ஷேக்ஸ்பியர் பாடங்களைப் படித்துக்கொண்டு, கால்பந்து விளையாடிக்கொண்டு, ராப் இசையை ரசித்தபடி மகிழ்ச்சியாக வாழ்ந்தான். ஆனால், அந்த சந்தோஷம் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1991-ல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. அரசுக்கு எதிராக, புரட்சிகர ஐக்கிய முன்னணி (ஆர்யுஎஃப்) எனும் கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்திவந்தது.

ஒருநாள் பியாவின் கிராமத்துக்கும் அந்தப் படை வந்தது. பலர் கொல்லப்பட்டனர். உயிருக்குப் பயந்து தப்பி ஓடிய பியாவைப் போன்ற பல சிறுவர்கள், புகலிடம் இன்றி சுற்றியலைந்தனர். கிடைத்த வேலையைச் செய்து பசியைப் போக்கிக்கொண்டனர். பல நேரங்களில் பசியில் வாடினர். தன் குடும்பத்தினர் இறந்துவிட்டதாகக் கருதியிருந்த பியாவுக்கு, அவர்கள் பக்கத்து கிராமம் ஒன்றில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அங்கு செல்வதற்கு முன்னர், அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான காஸெமு எனும் நபர், அவனது குடும்பத்தினரிடம் அவனை அழைத்துச் செல்வதாகக் கூறியதுடன், வாழைப்பழக் கூடைகளை அந்தக் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கேட்டுக்கொண்டார். பெற்றோரைச் சந்திக்கும் ஆவலில் அதற்கு ஒப்புக்கொண்டான் பியா. ஆனால், அவர்கள் அந்தக் கிராமத்தை அடைவதற்கு முன்னர் ஆர்யுஎஃப் கிளர்ச்சிக் குழுவினர் அங்கு தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றனர். தனது பெற்றோரின் உடல்கள் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்துகொண்ட பியா உடைந்துபோனான். காஸெமு தாமதம் செய்ததால்தான் தன் பெற்றோரைப் பார்க்க முடியவில்லை எனக் கோபமடைந்தவன், அவரைக் கொல்ல முயற்சித்தான். மற்ற சிறுவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆர்யுஎஃப் குழுவினர் அவர்களைத் துரத்திவந்தனர். காட்டுக்குள் தப்பி ஓடியபோது, ஆர்யுஎஃப் தாக்குதலில் காஸெமு பலியானார். பியா மேலும் உடைந்துபோனான்.

இஷ்மாயில் பியா

அண்டை கிராமம் ஒன்றுக்குச் சென்றபோது அங்கிருந்த சியரா லியோன் ராணுவத்தினர் அச்சிறுவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். அந்தக் கிராமத்தை ஆர்யுஎஃப் படையினர் தாக்கலாம் எனத் தகவல் கிடைத்தது. அப்போது, கிராமத்தைக் காக்க அங்கிருப்பவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என ராணுவத் தளபதி ஒருவர் வலியுறுத்தினார். வேறு வழியில்லாமல் துப்பாக்கி ஏந்தத் தொடங்கினான் பியா.

ஆயுதம் மட்டுமல்ல போதைப்பொருட்களும் அவனுக்கு அறிமுகமாகின. அப்போது அவனுக்கு 13 வயதுதான். போர்க் கைதிகளைக் கொல்லும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. குடும்பத்தை இழந்த வலி, மரிஜுவானா போதைப்பொருள் எல்லாம் ஒன்றுசேர அந்தச் சிறுவன் வன்முறைச் சம்பவங்களில் திளைக்கத் தொடங்கினான். எத்தனைப் பேரைக் கொன்றான் என அவனுக்கே தெரியாது. விவரம் அறியாத வயதில் வெறியாட்டம் ஆடினான்.

நாட்கள் கடந்தன. 1996 ஜனவரியில் யுனிசெஃப் (ஐநா சிறுவர் நிதியம்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் பியா உள்ளிட்ட சிறுவர்களைப் பிடித்து, தலைநகர் ஃப்ரீடவுனுக்குக் கொண்டுசென்றனர். அங்கு மறுவாழ்வு முகாமில் அந்தச் சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், கொலை உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்த அனுபவம் கொண்ட அந்தச் சிறுவர்களைக் கையாள்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. பியா மிகவும் உக்கிரமாக இருந்தான். ரத்தம் தோய்ந்த நாட்கள் குறித்த குற்றவுணர்வால் குமைந்துகொண்டிருந்தான். அப்போது எஸ்தர் எனும் செவிலியர் அவனது கடந்த காலம் குறித்துத் தெரிந்துகொண்டார். இசையில் அவனுக்கு இருந்த நாட்டத்தை வைத்தே அவனைப் பழைய பாதைக்குத் திருப்ப நினைத்தார். ராப் இசைப் பாடல்கள் அடங்கிய கேஸட்டுகளுடன், வாக்மேன் ஒன்றை அவனுக்குப் பரிசளித்தார். இசை அவனது மகிழ்ச்சியான பால்யப் பருவத்துடன் அவனைப் பிணைத்தது. ஃப்ரீடவுன் நகரைச் சுற்றிப்பார்க்க எஸ்தர் அவனையும் இன்னொரு சிறுவனையும் அழைத்துச் சென்றார். மெல்ல மெல்ல இயல்புக்குத் திரும்பினான் பியா.

பின்னர் அவனது தாய்மாமா ஒருவர் அவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தச் சூழலில், ஒரு குழந்தை வீரனாக அவனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வருமாறு ஐநா அவனுக்கு அழைப்பு விடுத்தது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்துக்குச் சென்றான். பிற நாடுகளிலிருந்து வந்திருந்த தன்னையொத்த பல சிறுவர்களைச் சந்தித்தான். அவர்கள் எதிர்கொண்ட துயரங்களை அறிந்தான். அங்கு லாரா சிம்ஸ் எனும் பெண்மணியைச் சந்தித்தான்.

சியரா லியோனுக்குத் திரும்பிய பின்னர் அவனது நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆர்யுஎஃப் படையினர், ஏஎஃப்ஆர்சி எனும் இன்னொரு குழுவுடன் இணைந்துகொண்டு ஃப்ரீடவுனைத் தாக்கினர். இனி அங்கு இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்த பியா அங்கிருந்து தப்பி கீனி நாட்டுக்குச் சென்றான். அங்கிருந்து எப்படியோ அமெரிக்காவைச் சென்றடைந்தான். நியூயார்க் சென்று லாரா சிம்ஸைச் சந்தித்தான். அவனை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அவன் வாழ்க்கை புத்துயிர்ப்பு பெற்றது.

ஐநா சர்வதேசப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தான். பின்னர் ஆபெர்லின் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியல் படித்தான். குழந்தைப் பருவத்திலேயே படைவீரர்களாக்கப்படும் அவலம் குறித்து பல இடங்களுக்குச் சென்று உரையாற்றினான். இருள் நிறைந்த தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றிப் பேசினான். 2007-ல் தனது வாழ்க்கைக் கதையை ’எ லாங் வே கான்’ எனும் பெயரில் புத்தகமாக எழுதினான். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. சிறந்த அறிமுக எழுத்தாளருக்கான குயுல் விருது அவனுக்குக் கிடைத்தது. 2007-ம் ஆண்டின் அபுனைவு புத்தகங்களில் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாக டைம் இதழ் அங்கீகரித்தது. பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன.

இன்று குழந்தை வீரர்கள் எனும் கொடுமையை நீக்க யுனிசெஃபுடன் இணைந்து பணியாற்றுகிறார் பியா. அவரது புத்தகத்தில் தகவல் பிழைகள் இருப்பதாக விமர்சனங்கள் உண்டு. அரசுப் படையில் வீரனாக இருந்தபோது பாலியல் வன்கொடுமைகளில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு உண்டு. அதைப் பதிவுசெய்தால் சர்வதேசப் போர் சட்டங்களின்படி தண்டிக்கப்படலாம் என்பதால் அதுகுறித்து அவர் அதிகம் பேசுவதில்லை என்றும் பலர் விமர்சிக்கின்றனர்.

எல்லாவற்றையும் கடந்து குழந்தை வீரர்கள் எனும் கொடுமையின் ரத்த சாட்சியமாக வாழ்கிறார் பியா.

இந்த அவலத்திலிருந்து உலகம் மீளட்டும்!

x