இதே தேதி... முக்கியச் செய்தி: நவீன ஒடிசாவின் தந்தை!


“சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் அவர். காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராகவும் இருந்தார். எனினும், பின்னாட்களில் நெருக்கடி நிலையை எதிர்த்ததால் அவர் கைதுசெய்யப்பட்டார். நாட்டைக் சுதந்திரத்துக்காகச் சிறை சென்றவர், அரசியலைக் காக்கவும் சிறை சென்றார்” - ஒடிசாவின் முக்கிய அரசியல் தலைவரான ஹரேகிருஷ்ண மஹதாபின் நினைவுதின உரையின்போது பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள் இவை.

மோடியின் பேச்சு வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைக் கட்சித் தலைமை நடத்தும் விதம் குறித்த விமர்சனம்தான் என்றாலும், ஹரேகிருஷ்ண மஹதாபின் அரசியல் வாழ்க்கை குறித்த சுருக்கமான, சிறப்பான விவரணை என்றே சொல்லலாம்.

ஆம், நவீன ஒடிசாவின் தந்தை எனப் போற்றப்படும் ஹரேகிருஷ்ண மஹதாப், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் தலைவர், சிறந்த ஆட்சி நிர்வாகி எனப் பன்முகம் கொண்ட ஆளுமை. மாநில எல்லைகளைத் தாண்டி மக்கள் அறிய வேண்டிய வாழ்க்கை வரலாறு அவருடையது!

1899 நவம்பர் 21-ல், ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள அகர்படா கிராமத்தில் கிருஷ்ண சரண் தாஸ் - தோபஹா தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் ஹரேகிருஷ்ண மஹதாப். செல்வாக்கு மிக்க ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்வியிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். பத்ரக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் குறித்த பாடங்கள் அவருக்குப் பெரும் தாக்கம் தந்தன. பின்னர் கட்டாக்கில் உள்ள ரவேன்ஷா கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆனால், சுதந்திரப் போராட்டம் அவரைப் பொதுவாழ்க்கையை நோக்கி ஈர்த்தது. மாணவப் பருவத்திலேயே இலக்கியம், வரலாறு என ஆர்வம் காட்டினார். ஒருகட்டத்தில் படிப்பைப் பாதியில் கைவிட்டுவிட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். ஜமீனை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தனது தந்தை விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்தார்.

காந்தியின் தீவிரத் தொண்டர். 1922-ல் தேசத்துரோக வழக்கில் அவரைக் கைதுசெய்தது பிரிட்டிஷ் அரசு. அதன் பின்னரும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவர் அவர், 1927-ல் ஒடிசாவில் காந்தி மேற்கொண்ட பயணத்தின்போது அவருடன் இணைந்து பயணித்தார். 1930-ல் உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தை காந்தி தொடங்கியபோது அதில் உத்வேகத்துடன் பங்கெடுத்தார். தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்றவர், தனது முன்னோர்கள் உருவாக்கிய கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைய வழிவகுத்தார்.

இளம் வயதிலேயே திருமண பந்தத்துக்குள் நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் மஹதாபுக்கு ஏற்பட்டது. அவரது மனைவி சுபத்ரா பொதுவாழ்வில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைப் புரிந்துகொண்டார். அனைத்து விதமாகவும் துணை நின்றார்.

காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்புடனான செயல்பாடு அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. ஒடிசா மாகாணத்தின் பிரதம அமைச்சராக 1946 ஏப்ரல் 23-ல் பொறுப்பேற்றார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒடிசாவின் வளர்ச்சிக்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை எனத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அவரது புகாரில் இருந்த நியாயத்தை உணர்ந்த மவுன்ட்பேட்டன் பிரபு ஒடிசாவின் வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் உருவாக வழிவகுத்தார். மஹதாபின் வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றால் கவரப்பட்ட மவுன்ட்பேட்டன் பிரபு அவரது நெருங்கிய நண்பராகவும் ஆனார்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் பிரதம அமைச்சர் பதவி முதல்வர் பதவியானது. ஆக, சுதந்திர இந்தியாவில் ஒடிசா மாநிலத்தின் முதல் முதல்வர் எனும் பெருமையும் மஹதாபுக்குக் கிடைத்தது. சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலில், சமஸ்தானங்களை இணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.

உத்கல் என்று அழைக்கப்படும் ஒடிசாவைச் சீர்திருத்த முயற்சித்த அனைவரையும் பின்பற்றி ஆட்சி நடத்தினார். மாநில வளர்ச்சி, சமூகச் சீர்திருத்தம் என இரண்டிலும் தனது அபார உழைப்பைச் செலுத்தினார். கட்டாக்கிலிருந்து புவனேஸ்வருக்குத் தலைநகரை மாற்றினார். மகாநதியில் ஏற்படும் வெள்ளம் குறித்த கவலை அவருக்கு உண்டு. அவரது முயற்சியின் காரணமாகவே ஹிராகுட் அணைக்கட்டு உருவானது.

பன்முகம் கொண்ட ஆளுமையாகத் திகழ்ந்தவர் மஹதாப். பிரஜாதந்திரா பிரச்சார் சமிதி எனும் இயக்கத்தைத் தொடங்கினார் மஹதாப். ‘பிரஜாதந்திரா’ எனும் வார இதழைத் தொடங்கி நடத்தினார். பின்னர் அது நாளிதழாகவும் வெளிவந்தது. ‘ஜங்கர்’ எனும் மாத இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருந்தார். ‘ஈஸ்டர்ன் டைம்ஸ்’ எனும் வார செய்தித்தாளையும் நடத்தினார். புனைவிலக்கியத்திலும் தனது முத்திரையைப் பதித்தார். இலக்கியம் என்பது வெகுமக்களுக்கானது என்பதில் உறுதியாக இருந்தார். 1983-ல் ‘காவோ மஜ்லிஸ்’ எனும் அவரது நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கப்பட்டது.

1950-ல் மத்திய அமைச்சரானார். 1952 முதல் 1955 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கட்சித் தலைமையுடனான கருத்துவேறுபாடு காரணமாக, காங்கிரஸிலிருந்து விலகி ஒடிசா மக்கள் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். 1967-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி, கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை அவரது கட்சிக்குத் தந்தது. எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் அவரது கட்சிக்குத் தோல்விகளே கிடைத்தன. பின்னர் ஜனதா கட்சியுடன் ஒடிசா மக்கள் காங்கிரஸை இணைத்தார்.

இதற்கிடையே, 1975-ல் இந்திரா காந்தி அரசு அமல்படுத்திய நெருக்கடி நிலையைக் கண்டித்துக் குரல் கொடுத்ததால் கைதுசெய்யப்பட்டார். பிரிட்டிஷ் அரசானாலும் சரி, காங்கிரஸ் அரசானாலும் சரி, நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் தயங்கியதில்லை. அந்த நேர்மையின் காரணமாகவே அவர் என்றென்றைக்குமாகக் கொண்டாடப்படுகிறார்.

மஹதாபின் 51-வது பிறந்தநாளில் அவரை வாழ்த்திய படேல், ‘நவீன ஒடிசாவை உருவாக்கியவர் என வரலாறு உங்களை எப்போதும் நினைவில் கொள்ளும். துணிவும், அர்ப்பணிப்பும் மிக்க புதல்வர்களில் ஒருவராக நாடு உங்களைப் போற்றிக் கொண்டாடும்’ எனப் புகழாரம் சூட்டினார். அந்த வாழ்த்துரைக்கு முழுத் தகுதியும் கொண்டவர் மஹதாப்.

x