தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்றாகத் திகழும் பெருமைக்குரியது நம் தமிழ்நாடு. நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயர் சூட்டப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறே ஆண்டுதோறும் அத்தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மெட்ராஸ் பிரசிடென்சியானது, மெட்ராஸ் மாகாணமாக மாற்றம் கண்டது. 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மதராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், தங்களது மாநிலம் வேறு மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட தினத்தை, அவர்களது மாநில தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு எந்த மாநிலத்திலிருந்தும் பிரிக்கப்படாத மாநிலமாக இருந்ததோடு, அதனோடு முன்பிருந்த சென்னை மாகாணத்திலிருந்தே வேறு சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலும் மாநில தினம் என்று எந்த நாளும் குறிப்பிடப்படாமலேயே பல்லாண்டுகளாக இருந்து வந்தது. இச்சூழலில், 2019-ஆம் ஆண்டில், ‘இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தினமாக கொண்டாடப்படும்’ எனும் அறிவிப்பை அன்றைய அதிமுக அரசு வெளியிட்டது.
தமிழ்நாடு தினம்: 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1-ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணாவால் 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டார்.
அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்று, ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்" என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். முன்னரே, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நவம்பர் 1-ஆம் தேதியினைத் தங்களது மாநிலத்தின் தினமாகக் கொண்டாடி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமான தெலங்கானா மாநிலம், தனது மாநில தினத்தை ஜூன் 2-ஆம் தேதி அன்று கொண்டாடி வருகிறது.
மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம்: 1956- இல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக, மாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்பட்டன. தமிழ் பேசும் பகுதியான கன்னியாகுமரி, முன்பு திருவிதாங்கூர் - கொச்சியின் ஒரு பகுதியாக இருந்த மெட்ராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, குடியரசாக உருவெடுத்தபோது, 28 மாநிலங்கள் இந்தியாவில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்கள், இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல முடியாது. ஆனால், தங்களுக்குள் பிரிந்துகொள்ளலாம், சேர்ந்துகொள்ளலாம். மாநிலங்களின் எல்லைகளைக் கூட மாற்றியமைக்கப்படலாம். மாநிலத்திற்குப் புதிய பெயர் சூட்டப்படலாம் என்பதற்கு மட்டுமே சட்ட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம்: சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1957-இல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் உயிரிழந்தார்.
அதன்பிறகு, தமிழ்நாடு என்று பெயரினை மாற்ற வேண்டுமென்கிற கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. பின்னர் தமிழில் மட்டும் ‘தமிழ்நாடு’ என்றும், ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும் குறிப்பிடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் இது அறிவிப்பாக வெளியிடப்பட்டது. 1967-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் அறப்போராட்டத்தைக் கவுரவிக்கும் வகையில், மாநிலத்தின் பெயரினைத் தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென ஒரே குரலில் கோரிக்கையை முன்வைத்தன.
அனைத்து கட்ட்சியினரின் ஆதரவு: இந்த நிலையில்தான் 1967-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், முழுமையாக தமிழ்நாடு எனும் பெயரைச் சூட்ட வேண்டுமென தீர்மானித்தது. அதன்படி, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை சட்டப்பேரவையில் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அனைத்துக் கட்சியினரின் பேராதரவுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தில் பேசிய அண்ணா, "நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகிவிடவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு இருக்கும். இதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது" என்று கூறினார்.
மேலும், "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறிவிட்டு, "தமிழ்நாடு" என மூன்று முறை குரல் எழுப்பினார் அண்ணா. சட்டப்பேரவையின் எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று 3 முறை பலமாக கோஷம் எழுப்பினர்.
இந்தியாவின் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு: தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டு 57 ஆண்டுகளைக் கடந்து, 58-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். இந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தமிழகம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சமூக, பொருளாதார, கல்வி, மருத்துவத் துறைகளில் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதோடு, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நீடித்த வளர்ச்சியினைப் பெற்றிருக்கிறது.
இதற்கு காரணம் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஆட்சி முறைதான். சமூக நீதியும், சமத்துவமும் இந்த கட்டமைப்புக்கு பெரிய தூண்களாக இருந்தன என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு சென்ற ஆண்டு மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தமிழகம் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு: தொழில்துறையில் இன்றைக்கு தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் வளர்ந்திருக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. தொழில் வளர்ச்சியென்பது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முகவரியாகவும், முகமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கென பல பகுதிகளிலும் நடைபெற்று வந்த தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பல தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
தமிழகத்தின் ஒவ்வொரு 50-ஆவது கிலோமீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, சென்னை தொடங்கி நாகர்கோவில் வரை பல தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. தொழிற்சாலைகளைத் தொடங்கும் நிறுவனங்களுக்கு மானிய விலையில் இடம், தடையில்லா மின்சாரம், விரைவான தொழில் ஒப்புதல் போன்றவற்றால் பல்லாயிரம் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்பட்டனர்.
மாநில – மத்திய – தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டம் எனும் புதிய செயல்திட்டத்தின்படி, தூத்துக்குடி ஸ்பிக், மதுரை தமிழ்நாடு கெமிக்கல்ஸ், காரைக்குடி டிசிஎல், மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் போன்றவை தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில் மட்டும் 207 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு செய்துள்ளது. இதன்மூலம் ரூ.2,23,209 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
3.44 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 207 தொழில் நிறுவனங்களில் கடந்த ஜனவரி மாதம் வரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, ரூ.13,726 கோடி முதலீடு வந்துள்ளது. 15,726 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் 14 -ஆவது இடத்தில் இருந்து தமிழகம் தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறி வந்துள்ளது.
தமிழகம் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உள்ள சூழலில், கடந்த 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பல்வேறு பிரபல முன்னணி தொழில் நிறுவனங்கள் உலகளவில் தமிழகத்தில் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டன.
தொழில் துறையில் மட்டுமல்லாது தமிழ்நாடு, கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை, போக்குவரத்து, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் பல சிறப்புமிக்க திட்டங்களை முன்னெடுத்து, அதனைச் செயலாக்கம் செய்து, நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
தமிழக அரசின் விரைவான செயல்பாடுகளாலும், நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களாலும் இந்திய மாநிலங்களில் துறை வாரியாக முன்னிலை பெற்றுவருகிற தமிழகம், அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் நிலையை நோக்கி செயல்பட்டு வருகிறது என்பது பாராட்டத்தக்க சாதனைகளாகும்.
இன்றைய சூழலில் இந்தியா முழுவதுக்குமான பண வீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் பணவீக்கம் குறைந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரமொன்று இதனைத் தெரிவிக்கிறது. தமிழக மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்திவரும் சமூக வளர்ச்சிக்கான மக்கள் நலத் திட்டங்களே இதற்கு காரணம். அனைத்து பிரிவு மக்களுக்கும் இந்த சமூக வளர்ச்சித் திட்டங்கள் குறிப்பாக, பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் இதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சியில் சிறப்பான குறியீடுகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளதால், பணவீக்கம் குறைந்துள்ளது. இந்த வேகம், தமிழகத்தை தன்னிகரற்ற மாநிலமாக உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
வாழ்க தமிழ்நாடு!
வளர்க மக்களின் முன்னேற்றம்!