இதே தேதி... முக்கியச் செய்தி: மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி!


நாகரிக சமுதாயத்தில் தொடரக் கூடாது எனப் பலரும் நினைக்கும் விஷயங்களில் மரண தண்டனையும் ஒன்று. இன்றைக்கு இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், வங்கதேசம், ஈரான் போன்ற நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்கிறது. அதேவேளையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பெரும்பாலான நாடுகளில் தவிர்க்கப்படுகிறது. காலனிய ஆதிக்க நாடாகக் கடந்த கடந்த நூற்றாண்டு வரை இருந்துவந்த பிரிட்டனில் தற்போது மரண தண்டனை கிடையாது. இந்த இடத்தை அந்நாடு அடைவதற்கு முன்னால் லட்சக்கணக்கானோர் சட்டபூர்வமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் இணைந்து யுனைட்டட் கிங்டம் (யூகே) அல்லது பிரிட்டன் உருவாவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அப்பகுதிகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுவந்தது. நாம் இன்றைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறிய குற்றங்களுக்குக்கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடைகளில் புகுந்து திருடுவது, கால்நடைகளைத் திருடுவது போன்ற குற்றங்களை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வேலையின்மை, நாடோடியாகத் திரிதல்... ஏன் பிச்சை எடுப்பது கூட குற்றமாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் கொலை, தேசத்துரோகம் போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்குத்தான் பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிற சிறிய குற்றங்களைச் செய்தவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டது. 1823-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, தண்டனைக் குறைப்பு அதிகாரம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டது. 1832-ல் திருட்டு, கள்ளநோட்டு அச்சடித்தல், முறைகேடு போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை ரத்துசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இப்படிப் பல படிகளைத் தாண்டி, பிரிட்டனில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலைக் குற்றத்துக்கே மரண தண்டனை விதிக்கும் வழக்கம் 1965-ல் முடிவுக்கு வந்தது. முன்னதாக,1964-ல் கடைசியாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவழியாக, 1969-ல் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. வடக்கு அயர்லாந்தில் மட்டும் 1973 வரை அது தொடர்ந்தது.

மறுபுறம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் நிறுத்தப்பட்டதே தவிர, விதிக்கப்படுவது தொடர்ந்தது. குறிப்பாக, தேசத்துரோகம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவந்தது. கடைசியாக, 1946-ல் தேசத்துரோகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. 1998-ல் மொத்தமாக மரண தண்டனை பிரிட்டனில் ஒழிக்கப்பட்டுவிட்டது. போர்க் காலத்தில் அல்லது போருக்கான உடனடி அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் மட்டும் மரண தண்டனை விதிப்பது என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டின் 4-வது விதிமுறையின் கீழ் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மனித உரிமைகள் சட்டம் 1998 மே 20-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

1998 நவம்பர் 9-ல், அந்தச் சட்டத்துக்கு பிரிட்டன் அரச குடும்பத்தின் அனுமதியும் கிடைத்தது. அதன் தொடர்சியாக, 2000-ல் அக்டோபர் 2-ல் அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. விஷயம் அத்துடன் நின்றுவிடவில்லை. 2004-ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டின் 13-வது விதிமுறையின் கீழ், மரண தண்டனையை மீண்டும் பிரிட்டன் கொண்டுவரக்கூடாது எனும் நிபந்தனையும் அமலுக்கு வந்தது. பிரெக்ஸிட் தீர்மானத்துக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக பிரிட்டன் நீடிக்கவில்லை. எனினும், மரண தண்டனை விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவைத்தான் அந்நாடு பின்பற்றுகிறது. எனவே, இனி பிரிட்டனில் மரண தண்டனை எனும் பேச்சுக்கு இடமில்லை என்றே நம்பப்படுகிறது!

x