வியக்கவைக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் நம்மிடையே தோன்றுவது உண்டு. சாமானியர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை அநாயாசமாகச் செய்துகாட்டும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். இந்தியாவில் அப்படியான அசாதாரண மனிதர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் சகுந்தலா தேவி. மனிதக் கணினி என அழைக்கப்பட்ட சகுந்தலா, 1982-ல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றவர். அசாதாரண மனிதர்களுக்கே உரிய அசாதாரண குடும்பச் சூழலிலிருந்து வந்தவர் இந்த சகுந்தலா!
1929 நவம்பர் 4-ல் பெங்களூருவில் ஒரு கன்னட பிராமணக் குடும்பத்தில் சகுந்தலா பிறந்தார். அவரது தந்தை சுந்தரராஜ ராவின் முன்னோரில் பலர் புரோகிதர்களாக, கோயில் பூசாரிகளாக இருந்தவர்கள். எனவே, சுந்தரராஜ ராவும் கோயில் பூசாரியாக வேண்டும் என்றே அவரது குடும்பத்தினர் விரும்பினர். அதில் ஆர்வம் காட்டாத அவர், வீட்டிலிருந்து வெளியேறி சர்க்கஸ் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அங்கு மாயாஜால நிகழ்ச்சி நடத்துவது, அந்தரத்தில் கட்டப்பட்ட கயிறு மீது நடப்பது, சிங்கங்களுக்குப் பயிற்சியளிப்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தார். திருமணமான பின்னரும் சர்க்கஸில் பணியாற்றிவந்த சுந்தரராஜ ராவுக்குச் சில வருடங்களில் புதிய விஷயங்கள் கிடைக்கத் தொடங்கின. ஆம். மூன்று வயதான தனது மகள் அபாரமான அறிவுக்கூர்மையுடன் இருந்ததை அவர் கவனித்தார்.
ஒருமுறை சகுந்தலாவுடன் சீட்டுக்கட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சகுந்தலா அவரை மிக எளிதாகத் தோற்கடித்துவிட்டார். இதனால் ஆச்சரியமடைந்த சுந்தரராஜ ராவ், தனது மகளின் புத்திசாலித்தனத்தைத் தெரிந்துகொள்ள சில சோதனைகளை வைத்தார். அப்போதுதான் சகுந்தலாவின் அபார அறிவுத் திறனை - குறிப்பாக கணிதத்தில் இருந்த ஞானத்தை அவர் உணர்ந்துகொண்டார். இத்தனைக்கும் முறையான பள்ளிக் கல்வி சகுந்தலாவுக்குக் கிட்டியிருக்கவில்லை. சீட்டுக்கட்டு விளையாட்டின் அடிப்படை விதிகூட அந்தச் சிறுமிக்குத் தெரியாது. ஆனால் அவரது கணினியைப் போல் செயல்பட்ட அவளது மூளை அவளுக்கு அந்த அரிய திறனைத் தந்தது.
பின்னர் சர்க்கஸிலிருந்து வெளியேறிய சுந்தரராஜ ராவ், தன் மகளின் கணிதத் திறனை ஒரு வித்தையாகவே முன்வைத்து சாலைகளில் நிகழ்ச்சிகள் நடத்தினார். எவ்வளவு கடினமான கணக்கைத் தந்தாலும் உடனடியாக அதற்கு விடை சொல்லி அசத்தினாள் சகுந்தலா. மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. பின்னர், மைசூரு பல்கலைக்கழகத்தில் தனது கணிதத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு சகுந்தலாவுக்குக் கிடைத்தது. கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில் தனது திறனை அச்சிறுமி நிரூபித்தாள். அப்போது சகுந்தலாவுக்கு 6 வயதுதான்.
அதன் பின்னர் அவரது புகழ் பரவத் தொடங்கியது. 1944-ல் தனது தந்தையுடன் லண்டனுக்குச் சென்றார். பிபிசி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கடினமான கணக்குகளைத் தந்து அவற்றுக்கு விடை காணுமாறு சகுந்தலாவைக் கேட்டுக்கொண்டார். எனினும் சகுந்தலா சொன்ன விடைகள் தவறானவை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறினார். அவை சரியானவைதான் என சகுந்தலா உறுதியாகச் சொன்னபோது, தொகுப்பாளர் அந்த விடைகளை மீண்டும் சரிபார்த்தார். சகுந்தலாவின் கணக்கு சரிதான் என உணர்ந்துகொண்டார்.
1980 ஜூன் 18-ல், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், மிக மிகக் கடினமான கணக்கு ஒன்று அவருக்குத் தரப்பட்டது. 7,686,369,774,870 எனும் எண்ணுடன் 2,465,099,745,779 எனும் எண்ணைப் பெருக்கி விடை சொல்ல வேண்டும் என்றும் அக்கல்லூரியின் கம்ப்யூட்டிங் துறைப் பேராசிரியர்கள் கூறினர். வெறும் 28 வினாடிகளில் அதற்கான விடை 18,947,668,177,995,426,462,773,730 எனச் சொன்னார் சகுந்தலா. அந்தச் சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது.
1988-ல் அமெரிக்கா சென்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கல்விசார் உளவியல் துறைப் பேராசிரியர் ஆர்தர் ஜென்ஸன், சகுந்தலாவின் கணிதத் திறனைச் சோதித்தறிய பல கடினமான கேள்விகளைக் கேட்டார், அனைத்துக்கும் துல்லியமான விடை சொல்லி அசத்தினார் சகுந்தலா. இப்படிப் பல தருணங்களில் சகுந்தலா தனது அசாத்தியமான கணிதத் திறனை வெளிப்படுத்தி புகழ்பெற்றார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.
தனது மூளைத் திறனைத் தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. கணிதத்தில் தான் பயன்படுத்தும் உத்திகளை எளிமையாக விளக்கி, பள்ளி மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையிலான புத்தகங்களை எழுதினார். சோதிடத்திலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த சகுந்தலா, அது தொடர்பான புத்தகங்களையும் எழுதினார். குற்றச்சம்பவங்களை மையமாகக் கொண்ட நாவல்கள், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
1960-ல் கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஏஎஸ் பரிதோஷ் பானர்ஜியைத் திருமணம் செய்துகொண்டார். எனினும், சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 1977-ல் ‘வேர்ல்டு ஆஃப் ஹோமோசெக்சுவல்ஸ்’ புத்தகத்தை சகுந்தலா எழுதினார். இந்தியாவில் தன்பாலீர்ப்பாளர்கள் தொடர்பாக எழுதப்பட்ட முதல் புத்தகமாக அது கருதப்படுகிறது. அதில் தன்பாலீர்ப்பு தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் திரட்டிப் பதிவுசெய்திருந்தார் சகுந்தலா. அந்தப் புத்தகம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. எனினும், தன்பாலீர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் தொடர்ந்தார். தனது கணவர் ஒரு தன்பாலீர்ப்பாளர் என்பதை அறிந்திருந்ததாகவும், அவர் மூலம் தன்பாலீர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்துகொண்டதாகவும் சகுந்தலா குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியலிலும் சகுந்தலாவுக்கு ஈடுபாடு இருந்தது. 1980 மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தின் மேடக் தொகுதியில் (தற்போது தெலங்கானாவில் உள்ளது) இந்திரா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தன் வாழ்நாள் முழுவதும் பேசுபொருளாகவே இருந்தார்.
2013-ல் உடல்நலன் குன்றிய நிலையில், பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நடிகை வித்யா பாலன் நடித்த ‘சகுந்தலா தேவி’ எனும் திரைப்படம் 2020-ல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.
கணிதத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையையும் குறித்து தொடர்ந்து பேசிவந்தவர் சகுந்தலா.
ஒருமுறை, “ஏன் குழந்தைகள் கணிதத்தைக் கண்டு அச்சம்கொள்கின்றனர்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சகுந்தலா, “தவறான அணுகுமுறைதான அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாகவே பார்க்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது” என்றார். “கணிதம்தான் வாழ்க்கை. உங்கள் பிறந்த தேதி தொடங்கி, நீங்கள் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று என அனைத்திலும் கணிதம் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.