இதே தேதி... முக்கியச் செய்தி: அமெரிக்க – சோவியத் விண்வெளிப் போட்டிக்குப் பலியான ‘லைக்கா’


அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பனிப்போர், இரு வல்லரசுகளுக்கும் இடையிலான விண்வெளிப் போட்டியிலும் பலமாக எதிரொலித்தது. 1950-களில் இந்தப் போட்டி உச்சத்தில் இருந்தது. அப்போதுதான் ஸ்புட்னிக் 2 எனும் விணகலம் மூலம் லைக்கா எனும் நாயை, பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடிவெடுத்தது சோவியத் ஒன்றியம். சப்-ஆர்பிட்டல் விண்வெளி விமானங்கள் மூலம் இரு நாடுகளும் விலங்குகளை அனுப்பி சோதனை செய்ததுண்டு. எனினும், முதன்முறையாக புவியின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடைந்த முதல் உயிரினம் லைக்காதான். ஆனால், அந்தப் பயணம் அதன் இறுதிப் பயணம் என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதுதான் இதில் சோகம். அதேசமயம், அந்த உயிர்ப்பலி பின்னாட்களில் விண்வெளிக்கு மனிதர்கள் சென்றுவருவதற்கு வழிவகுத்தது.

1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக் 1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியிருந்தது சோவியத் ஒன்றியம். அந்தக் களிப்பில்,இருந்த அதிபர் குருச்சேவ் அக்டோபர் புரட்சி தினத்தை (நவ.7) ஒட்டி, இன்னொரு விண்கலத்தை ஏவ வேண்டும் என விரும்பினார். அத்துடன், “விண்வெளி அறிவியலில் நமது வலிமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். அதற்காக ஏதேனும் அதிசயத்தை நிகழ்த்த வேண்டும்” என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஆணையிட்டார்.

இதையடுத்து புதுமையாக என்ன செய்யலாம் என யோசித்த ரஷ்ய விஞ்ஞானிகள் விண்வெளிக்கு ஒரு நாயை அனுப்பலாம் என முடிவெடுத்தனர். அதுவரை எந்த உயிரினமும் புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டதில்லை என்பதால், அந்தச் சூழலைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு அந்த நாய் இருக்க வேண்டும் அல்லவா! அதற்காகவே தெரு நாய் ஒன்று தேர்வுசெய்யப்பட்டது. மாஸ்கோவின் தெருக்களில் வசிக்கும் நாய்கள் அதீத குளிரையும் பசியையும் தாங்கிக்கொள்ளக்கூடியவை என்பதாலேயே தெரு நாயைத் தேர்ந்தெடுத்தனர். உடல் வலு கொண்ட அந்த நாய், பிற நாய்களுடன் சண்டைக்குச் செல்லாத அமைதியான குணம் கொண்டது.

அதற்கு, என்ன பெயர் வைப்பது என யோசனை எழுந்தது. பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் லைக்கா எனும் பெயர் தேர்வானது. லைக்கா என்றால், ‘குரைக்கக்கூடியது’ என்று அர்த்தம். முதலில் குத்ர்யாவ்கா என அதற்குப் பெயரிடப்பட்டிருந்ததாகவும், அதிக சத்தத்துடன் குரைக்கும் தன்மை கொண்டிருந்ததால் லைக்கா என அதற்குப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஸ்புட்னிக் 2 விண்கலத்தைத் தயாரிக்கும்போதே அது விண்வெளியிலிருந்து திரும்ப வேண்டியதில்லை எனும் வகையிலேயே வடிவமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, லைக்காவும் பூமிக்குத் திரும்பாது என்பது இயல்பாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையே, லைக்காவுக்கு பதிலீடாக மேலும் இரண்டு நாய்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்று நாய்களுமே கடுமையான சூழலை எதிர்கொள்ளக்கூடிய அளவுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் உயிரினம் என்பதால், விண்கலத்தில் பயணிக்கும்போது அதன் உடல்நிலையில் ஏற்படும் மாறுதல்களைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் செய்துவைத்தனர்.

லைக்கா விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, டாக்டர் விளாதிமிர் யாஸ்டோவ்ஸ்கி எனும் விண்வெளி ஆய்வாளர் லைக்காவைத் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அங்கு அவரது குழந்தைகளுடன் அந்த நாய் விளையாடியது. 1957 நவம்பர் 3-ல் ஸ்புட்னிக் 2 விண்கலம், பைக்கானூர் ஏவுதளத்திலிருந்து ஸ்புட்னிக் 8கே71பிஎஸ் எனும் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

லைக்காவுக்கு என்னவாகும் என்பதை நன்கு அறிந்திருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதன் முகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர். அந்தக் காலகட்டத்தில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வசதிகள் இல்லை என்பதால், அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், சில மணி நேரத்திலேயே லைக்கா உயிரிழந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அது அவதிப்படக்கூடாது என்பதால் அதைக் கருணைக் கொலை செய்ய முன்பே ஏற்பாடு செய்யப்பட்டதாக சோவியத் அரசு ஆரம்பத்தில் தெரிவித்தது. எனினும், உண்மையான காரணம் பின்னாட்களில் தெரியவந்தது.

உண்மையில், ஒரு நாயின் உயிரைப் பணயம் வைத்து ஒப்படி ஒரு ஆராய்ச்சியை நடத்துகிறோமே எனும் குற்றவுணர்வு சோவியத் ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கவில்லை. அமெரிக்காவுடனான விண்வெளிப் போட்டிதான் அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைச் சேர்ந்த விலங்குநல ஆர்வலர்கள், இதைக் கண்டித்து ரஷ்யத் தூதரக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எப்படியோ, ரஷ்யாவின் விண்வெளிக் கனவில் லைக்காவின் உயிர்ப்பலி, விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. சோவியத் அரசும் லைக்காவின் பெருமையை உணர்த்தும் வகையில் தபால் தலை வெளியிட்டது. நினைவுச் சின்னம் அமைத்தது.

புவியின் சுற்றுவட்டப்பாதைக்குச் சென்ற முதல் உயிரினம் எனும் பெருமையுடன் வரலாற்றில் நிலைத்துவிட்ட லைக்கா, பிற்காலத்தில் காமிக்ஸ் கதைகள் முதல் திரைப்படங்கள் வரை பல சாகச நாய் கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டது.

x