1971-ம் ஆண்டு, எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் முதலானோர் நடித்த படங்கள் வெளியாகின. ஆனாலும் அந்த ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த ’ஆதிபராசக்தி’ பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. பிற படங்களைவிட அதிகமான வசூலையும் கண்டது.
எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காலம் அது. அன்றைக்கும் வசூல் சக்கரவர்த்திகளாக இருந்தார்கள். இந்த வருடத்தில், எம்ஜிஆர் நான்கு படங்களில் நடித்தார். இந்த நான்கில் மூன்று படங்களை இயக்கியவர் யாரென்று சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குநர் ப.நீலகண்டன்தான்!
1971 ஜனவரி 26-ம் தேதி ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘குமரிக்கோட்டம்’ வெளியானது. கோவை செழியன் தயாரித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா,லட்சுமி, சோ, சச்சு, அசோகன், ஆர்.எஸ்.மனோகர் முதலானோர் நடித்தார்கள். ’எங்கே அவள்...’, ‘நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் என...’, ’என்னம்மா ராணி பொன்னான மேனி’ என்று பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசையமைத்தார். கலர்ப்படமாக வந்தது ‘குமரிக்கோட்டம்’.
அடுத்து, சத்யா மூவிஸ் தயாரிப்பில், எம்.கிருஷ்ணன் இயக்கத்தில், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் மே 29-ம் தேதியன்று ரிலீஸானது. மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் எனப் பலரும் நடித்திருந்தனர். ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’, ‘கடலோரம் வாங்கிய காற்று’, ‘அழகிய தமிழ் மகள்’, ’பம்பை உடுக்கை கட்டி’ என்ற பாடல்களும் மஞ்சுளாவின் கவர்ச்சியும் எனப் படத்தின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை எம்ஜிஆருக்குப் பெற்றுத்தந்த படம் இது.
1971 அக்டோபர் 18-ம் தேதி ப.நீலகண்டன் இயக்கத்தில், ‘நீரும் நெருப்பும்’ திரைப்படம் வெளியானது. தீபாவளி ரிலீஸ் படம். ஜெயலலிதாதான் ஜோடி. ரீமேக் படம் இது. இதிலும் பாடல்கள் சூப்பர். ஆனால் படம்தான் சறுக்கியது. எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். எம்.எஸ்.வி.தான் இசை. இதுவும் கலர் படம்.
பின்னர், ப.நீலகண்டன் இயக்கத்தில், எம்ஜிஆர், முத்துராமன், ஜெயலலிதா நடித்த ‘ஒருதாய் மக்கள்’ டிசம்பர் 9-ம் தேதி வெளியானது. இதிலும் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. கறுப்பு வெள்ளைப்படம். ஆக, எம்ஜிஆர் நடித்த 4 படங்களில் மூன்று படங்கள் ப.நீலகண்டன் இயக்கியவை. எம்ஜிஆருடன் ஜெயலலிதா மூன்று படங்களில் நாயகி. மூன்று படங்கள் வண்ணப்படங்கள். இதில், ‘ரிக்ஷாக்காரன்’தான் மிகப்பெரிய ஹிட்.
அடுத்து... சிவாஜி கணேசன்.
1971-ல், எம்ஜிஆருக்கு 4 படங்கள் வந்தன. ஆனால் சிவாஜிக்கோ 9 படங்கள் வெளியாகின. எஸ்.ராமநாதன் இயக்கத்தில், பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில், முத்துராமன், பத்மினியுடன் நடித்த ‘இரு துருவம்’ ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது இந்தப் படம்.
அடுத்து, முக்தா பிலிம்ஸில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சரோஜாதேவியுடன் நடித்த ‘அருணோதயம்’ வெளியானது. பாடல்களும் செம ரகம். ’உலகம் ஆயிரம் சொல்லட்டுமே’ ‘எங்கள் வீட்டு தங்கத்தேரில்’, ‘முத்து பவளம் முக்கனி’ என்று எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. இதில், ‘எங்கள் வீட்டுத் தங்கத்தேரில்’ பாடலை எஸ்பிபி பாடியிருந்தார். படமும் கலகலப்பாகத்தான் போனது. ஆனாலும் சுமாராகத்தான் ஓடியது. அதாவது எழுபது எண்பது நாள் படமாக அமைந்தது. மார்ச் 5-ம் தேதி வெளியானது இந்தப் படம்.
முன்னதாக, பிப்ரவரி 6-ம் தேதி, டி.யோகானந்த் இயக்கத்தில், ’தங்கைக்காக’ வெளியானது. சிவாஜியுடன் வெண்ணிற ஆடை நிர்மலா, முத்துராமன், லட்சுமி முதலானோர் நடித்தார்கள்.
மார்ச் 26-ம் தேதி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், ‘குலமா குணமா’ படம் வெளியானது. பாடல்கள் தேவலாம். படமும் பரவாயில்லை ரகம். இதில் சிவாஜியுடன் பத்மினி ஜெய்சங்கர் முதலானோர் நடித்தார்கள்.
இதன் பிறகு, ஏப்ரல் 14-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், இரண்டு சிவாஜி படங்கள் வந்தன. சாவித்திரி நடித்து, தயாரித்து, இயக்கிய ‘பிராப்தம்’ வெளியானது. படம் படுதோல்வி. மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது சாவித்திரிக்கு! ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதேநாளில், சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், ‘சுமதி என் சுந்தரி’ வெளியானது. ஜெயலலிதா நாயகி. எல்லாப் பாடல்களும் ஹிட். சிவாஜிக்கு ‘பொட்டு வைத்த முகமோ’ பாடினார் எஸ்பிபி. கலர்ப்படமாக அமைந்தது. படமும் விறுவிறுப்பாகத்தான் இருந்தது.
ஜூலை 22-ம் தேதி பி.மாதவன் இயக்கத்தில் சிவாஜி, கே.ஆர்.விஜயா. பத்மினி நடித்து, பி.மாதவன் இயக்கத்தில் ‘தேனும் பாலும்’ வெளியானது. பாடல்களும் பரவாயில்லை. படமும் சுமார் ரகம். கையைக் கடிக்காமல், ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
ஆகஸ்ட் 14-ம் தேதி, சிவாஜி, நாகேஷ், முத்துராமன் நடித்த ‘மூன்று தெய்வங்கள்’ ரிலீஸானது. தாதா மிராஸி இயக்கினார். கலர்ப்படம் இது. சிவாஜி மேக்கப் இல்லாமல் நடித்திருந்தார். படமும் ரசிகர்களால் பேசப்பட்டது. வெற்றியையும் பெற்றது. ஜூலை மாதம் 3-ம் தேதி, மல்லியம் ராஜகோபால் இயக்கி, சிவாஜி - ஜெயலலிதா நடித்த ‘சவாலே சமாளி’ வெளியானது. இந்தப் படத்தில் அமைந்த ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது’, ‘சிட்டுக்குருவிக்கென கட்டுப்பாடு’ உள்ளிட்ட பாடல்கள் மனதைத் தொட்டன. வெற்றிப் படமாகவும் அமைந்தது. சிவாஜியின் 150-வது படம் எனும் பெருமை கொண்ட வண்ணப்படம் இது.
‘இதோ எந்தன் தெய்வம்’ என்ற பாடலைக் கொண்ட ‘பாபு’ திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதி வெளியானது. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். தீபாவளி வெளியீடாக வந்தது. ரீமேக் படம். சிவாஜியின் நடிப்புக்குத் தீனி போடுவது போல் அமைந்த இந்தப் படம் வெகுவாகப் பேசப்பட்டது.
ஆக, 1971-ம் ஆண்டில், சிவாஜி நடிப்பில் ’அருணோதயம்’, ’இருதுருவம்’, ‘குலமா குணமா’, ‘சவாலே சமாளி’, ‘சுமதி என் சுந்தரி’, ‘தங்கைக்காக’, ‘தேனும் பாலும்’, ‘பிராப்தம்’, ‘மூன்று தெய்வங்கள்’ என ஒன்பது படங்கள் வந்தன. இதில், ‘அருணோதயம்’, ‘தங்கைக்காக’, ‘தேனும் பாலும்’ ஆகிய படங்கள் சுமாராக ஓடின. ‘குலமா குணமா’, ’சவாலே சமாளி’, ’சுமதி என் சுந்தரி’, ‘மூன்று தெய்வங்கள்’ வெற்றிப்படங்கள். ‘பிராப்தம்’ மிகப்பெரிய தோல்வி. ’பாபு’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.
1971 அக்டோபர் 18- ம் தேதி, தீபாவளி வெளியீடாக, சிவாஜி நடித்த ‘பாபு’, எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’, ஜெய்சங்கர் நடித்த ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மேலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘ஆதிபராசக்தி’ திரைப்படமும் வெளியானது.
ஜெமினி கணேசன், பத்மினி, ஜெயலலிதா, எஸ்.வரலட்சுமி, எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, பேபி ஸ்ரீதேவி முதலானோர் நடித்தார்கள். வண்ணப்படம். கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.
ஜெய்சங்கர், உஷா நந்தினி முதலானோர் நடித்து டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ திரைப்படமும் தீபாவளித் திருநாளில் வெளியானது. ஆனால், ’ஆதிபராசக்தியே’ முதலிடத்துக்கு வந்தாள். வெற்றி வாகை சூடினாள். மிகப்பெரிய வசூலும் குவித்தாள்!
’தாய்ப்பால் கொடுத்தாள்’, ’ஓம் ஆதி பராசக்தி’, ஆயிமகமாயி’, ’வருகவே வருகவே’, ‘ஆத்தாடி மாரியம்மா’, ‘சொல்லடி அபிராமி’ என்று எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன.