மற்றவை வெண்திரையில்-9: சாமானிய நாயகன்!


நாடகத்தின் மீது காதல் ஏற்பட்டபோது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி நாடகங்களின் தரம் அப்போது சபா நாடகங்களுக்கு நிகராக இருக்கும். பல ஆசிரியர்கள் அன்று பகுதி நேர சபா நடிகர்கள். பல ஒத்திகைகள் பள்ளியிலேயே நடக்கும். போதாக்குறைக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் ஒன்றை நேரில் பார்த்துவிட்டேன். தூர்தர்ஷன் நாடகங்களைக்கூட விடாமல் பார்ப்பேன். ரேடியோ நாடங்களையும் கேட்கும் பழக்கமும் வேறு உண்டாயிற்றே! ஒரு கதையை எழுதி நடித்தால் கைத்தட்டல் கிடைக்கும் என்று புரிந்துகொண்டு அந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். சரித்திர நாடகத்தைவிட சமூக நாடகங்கள் சுலபமாகப் பிடிபட்டன.

முதல் நாடகமே ரஷ்யன் கான்சலேட்டில் நடந்தது. நானே எழுதி இயக்கிய நாடகத்தில், தெலுங்கு பேசும் நாயுடு வேஷம் எனக்கு. கறுப்பு கோட், வேஷ்டி, நெற்றியில் நாமம், கையில் குடை என்று படு ஏற்பாடாகக் களம் சென்றேன். நினைத்த இடத்தில் எல்லாம் பார்வையாளர்கள் கைத்தட்டியது பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. நடிப்பிலே கரைந்துபோய் குடையை மேடையிலேயே விட்டுவிட்டு வந்ததால் என் அப்பா என்னை ‘குடை வள்ளல்’ என்று அழைத்து கேலி செய்ய ஆரம்பித்தார்.

அந்த வயதில் என் வசனத்தை நானே எழுதி இயக்கி நடிக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது? கண்டிப்பாக கே.பாக்யராஜிடமிருந்து தான்!

மெல்ல ஆட்கொண்ட பாக்யராஜ்

‘புதிய வார்ப்புகள்’ பார்த்தபோது என்னை நடிகர் பாக்யராஜ் ஈர்க்கவில்லை. வசனகர்த்தா பாக்யராஜ் தான் சுண்டியிழுத்தார். “அருட்ஜோதி, என்னிக்கு வந்து என்னை அணைச்சுக்கப் போறே?” என்பார் வில்லன் ஜி.ஶ்ரீனிவாசன். கடவுளைப் பார்த்தவாறு ஜோதி என்ற பெயர் கொண்ட கதாநாயகிக்குச் சொல்லும் வசனத்தின் சாமர்த்தியம் என்னை வியக்கவைத்தது. தவிர அது பாரதிராஜா படம். அதனால் அவர் காட்டிய கண்கட்டி வித்தைகளில் கிரங்கிப்போயிருந்தேன். சூரியகாந்தி மலர்கள் மத்தியில் நாயகி பல முறை எழுவது, ஓடையைக் கடக்கையில் நாயகன் கைகளில் விழும் நாயகிக்கு ராஜா தந்த பின்னணி இசை, வாத்தியார் ஊரைவிட்டுப் போகையில் ஜென்சி குரலில் எழும், ‘இதயம் போகுதே, எனையே பிரிந்து...’ பாடல் என்று என் ரசிப்புகளின் பட்டியலில் நீண்டது. ஆனால், நாயகனாக நடித்த பாக்யராஜ் அந்தப் பட்டியலில் வெகு கீழே இருந்தார்.

ஒரு நல்ல கதை வசனகர்த்தா என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவரை ஒரு சிறந்த இயக்குநர் மற்றும் நடிகர் என்று காட்டிய படம். ‘மெளன கீதங்கள்’. அவரின் முதல் இரண்டு படங்களையும் நான் அப்போது பார்த்திருக்கவில்லை. குமுதத்தில் தொடர்கதையாய் பாதி திரைக்கதை வந்தது. ஒரு வசனப் போட்டி வேறு அறிவித்தார்கள். படம் ரிலீஸானபோது தொடர் முக்கால் வாசியில் நிறுத்தினார்கள். நான் தொடரையும் படித்தேன். படத்தையும் பார்த்தேன்.

ஒரு ஆம்னி பஸ்ஸின் இரவுப் பயணத்தில் படம் தொடங்கும். தன்னைப் பிரிந்த மனைவியை எதேச்சையாகச் சந்திக்கிறான் நாயகன். அவளுடன் பாலகனாய் அவர்கள் மகன். அவனைக் கண்டதும் அவளுக்கும் அழுகை பொங்கிக்கொண்டு வருகிறது. உதட்டை கடித்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள். அவர்கள் எப்படி சந்தித்தார்கள், எப்படி பிரிந்தார்கள், எப்படி சேர்ந்தார்கள் என்பதுதான் கதை.

வெகு எளிமையான கதை, எல்லோரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய பிரச்சினை, படு சுவாரசியமான காட்சிகள், நகைச்சுவை வசனங்கள், அளவான நடிப்பு என கட்டமைப்பட்ட படத்தைக் கண்டு பிரமித்தேன். குறிப்பாக பாக்யராஜின் பாத்திரப் படைப்பு இந்த படத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. இதே பாக்யராஜ் பாத்திரம் தான் பிறகு அவரின் எல்லா வெற்றிப் படங்களிலும் பயன்படுத்தப்பட்டது. சின்னஞ்சிறு வேறுபாடுகள் தவிர பெரும்பாலான படங்களில் அவர் பாத்திரம் ஒன்றே தான். அப்பாவி. ஆனால் தான் படு விவரம் என்று எண்ணிக்கொண்டு சொதப்புவார். கொஞ்சம் திருட்டுத்தனம் இருக்கும். ஆனால் எல்லை மீறாது. சபல புத்தி. ஆனால் திருமணம், குடும்பம் போன்ற பாரம்பரிய ஸ்தானங்களில் பெரும் மரியாதை /அடிபணிதல் உண்டு. இப்படி ஒரு பாத்திரம்தான் பாக்யராஜ்.

சுவாரசியமான காட்சியமைப்புகள்

அவரின் அபார நகைச்சுவை குணம் அவர் எழுத்தில், திரையில், நடிப்பில் படம் நெடுக பளிச்சிடும். பல நகைச்சுவைக் காட்சிகளுக்கு கைதட்டல் கிடைப்பது இயல்பு. ஆனால் சிரித்து சிரித்து கண்களில் நீர் வழிய ரசிகர்கள் கைத்தட்டுவதை நான் பல படங்களில் பார்த்திருக்கிறேன்.

‘மெளன கீதங்க’ளில் அப்படி ஒரு காட்சி. கொஞ்சம் பிசகினாலும் விரசமாகியிருக்கும் அதை பாக்யராஜ் அவ்வளவு லாவகமாய் செய்திருப்பார். வேலை நிமித்தமாக வெளியூர் செல்கையில் ஒரு இரவு லாட்ஜில் தங்க நேர்கிறது. அது தரக்குறைவான இடம்; அங்கு விபச்சாரம் நடப்பது அவருக்குத் தெரியாது. ஆனால் அழைப்புகள் பலமாக இவரும் சபலப்பட்டு உரையாடச் செல்வார். அதற்குள் மனைவியிடமிருந்து போன் வந்ததால் இவர் செல்ல, மற்றவர்கள் ரெய்டில் மாட்டிக்கொள்வார்கள். இதுதான் காட்சி. இரு பெண்கள் இவரை அழைக்கும்போது ஒருவரை கை காட்டிவிட்டு, பின் அடுத்தவரைப் பார்த்து பரிதாபமாக “ஸாரி!” என்பார். தியேட்டரே அதிரும்! அது தான் பாக்யராஜ். அந்த ஒரு காட்சியில் அவர் நாயகனின் குணம், பின் வரும் சம்பவங்களுக்கான முன்னோடி எனப் பல விஷயங்களை அதில் ஒளித்து வைத்திருப்பார்.

திரைக்கதை வித்தகர்

‘சிட்பீல்டும் மூன்று கட்டு திரைக்கதை அமைப்பும்’ படிப்பதற்கு முன் எனக்கு அறிமுகமானவர் பாக்யராஜ். அவர் கதைகளை அணுகும் விதமும், திரைக்கதை அமைக்கும் நேர்த்தியும், நறுக்குத் தெறிப்பான வசனங்களும் ஒரு முழுமையான நாடகத்திற்கான சத்து கொண்டவை. பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளை நீக்கி விட்டாலும் ஒரு நல்ல நாடகம் பார்த்த உணர்வு இருக்கும். இதனால்தான் பாடல், நடனம், இசை, ஒளிப்பதிவு என எதற்கும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. கதாபாத்திரங்களும் காட்சி மாறுதல்களும் உங்களைக் கட்டிவைத்துவிடும். எனக்கு அடிக்கடி தோன்றும் எண்ணம் இது. சினிமா பயிலும் மாணவர்களும் உதவி இயக்குநர்களும் முதலில் தங்கள் கதையைக் கோவையாகச் சொல்ல வைக்க வேண்டும். கதை மனதில் ஒட்டவில்லை எனும்போது எத்தனை தொழில்நுட்ப சாகசம் காட்டினாலும், எத்தனை பெரிய நடிகர் நடித்தாலும் படம் படுத்துவிடும். கதையில் ஆழமாகக் காட்டிய ஈடுபாட்டால்தான் பாக்யராஜால் அத்தனை தொடர் வெற்றிகள் கொடுக்க முடிந்தது.

தன் படத்தின் முத்திரைக் காட்சியில் எல்லோரும் கண்டிப்பாகத் கைத்தட்டும்போது அங்கு ‘கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் K. பாக்யராஜ்’ என்று கார்டு போடுவார்! கமலும் ரஜினியும் கோலோச்சிய காலத்தில் அவர் படங்கள் வசூலில் அள்ளும். ‘முந்தானை முடிச்சு’ அடைந்த வெற்றி எந்த நடிகரும், எந்த இயக்குநரும் காணாத வெற்றி. கேரளத்தில் ‘முந்தானை முடிச்சு’ ஓடிய ஓட்டம் எந்த மலையாளப் படமும் ஓடவில்லை.

ரசிகைகளை வசீகரித்தவர்

‘முந்தானை முடிச்சு’ படம் வெளியானபோது நான் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸில் ஸைக்காலஜி படித்துக்கொண்டிருந்தேன். வெள்ளி ரிலீஸ். சனி மாலை காட்சி வரிசையில் நின்றவன் இரவுக் காட்சியில் பார்த்து வந்தேன். கேஜியில் படம் பார்ப்பது சொர்க்கத்துக்குப் போய் வருவது போல. அதுவும் ‘பாக்யான்’ (கோவை slang) படமென்றால் திருவிழாக் கோலம்தான். அப்போதெல்லாம் சுமாரான படத்தையே இரண்டு முறை பார்ப்போம். பாக்யராஜ் படமென்றால் கணக்கெல்லாம் கிடையாது.

அப்போதே பாடல் காட்சிகளில் உடற்பயிற்சி செய்வது போல அவர் ஆடும் நடனத்தை வயிறு வலிக்க கிண்டல் செய்வோம். அது போல முருங்கைக்காய் சமாச்சாரம் போல ஏதாவது ஒன்று வைத்து அனைவரையும் பேச வைத்துவிடுவார். அவர் படங்களுக்கு ஆண்கள் கூட்டத்தைவிட பெண்கள் கூட்டம் அலைமோதும். நாலைந்து சீன்கள் தான் என்றாலும் சென்டிமென்டில் அனைத்துத் தொகுதி பெண்களையும் அள்ளிக்கொண்டு வந்து டிக்கெட் கவுன்டரில் விட்ட வசூல் மன்னன் பாக்யராஜ்.

தன் தங்க விதியைத் தானே மீறியபோது பாக்யராஜும் தோல்விகளைச் சந்தித்தார். முதல் தோல்வி “விடியும் வரை காத்திரு”. அற்புதமான த்ரில்லர் படம். ஆனால் படம் படுதோல்வி. மனைவிக்காகக் காத்திருக்கற ஆள் பாக்யராஜ், அவர் போய் மனைவியைக் கொல்வது போல நடிக்கலாமா? தாய்மார்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

பாக்யராஜ் கதை மாந்தர்கள் பழமைவாதிகள். பெண்கள் உட்பட அனைவரும் ஆணாதிக்கவாதிகள். பெண்களை அறிவு குறைந்தவர்களாக மட்டும் தான் அவர் சித்தரித்திருந்தார். பாலினக் கவர்ச்சியையும் தாம்பத்திய உறவில் உள்ள அரசியலும் அவர் பேசுபொருள்களாக இருந்தன. தமிழ் சமூகத்தின் பொதுப் புத்திக்கு எட்டும் வண்ணமாகவும் அதை புனிதப்படுத்திச் சொன்னார். இப்படி எத்தனை முரண்கள் அவர் படங்களில் எனக்கு இருந்தாலும், அவரைப் போன்ற சிறந்த கதை சொல்லியைத் திரையில் அதற்குப் பின் நான் காணவில்லை.

‘முந்தானை முடிச்சு’ பார்க்கையில் எனக்கு அடுத்த சீட்டில் ஒரு வயதான அரசாங்க அதிகாரி மிடுக்காய் அமர்ந்திருந்தார். சிரிக்க காசு கேட்பார் போல தெரிந்தது. ‘கண்ணத் தொறக்கணும் சாமி’ பாடலின்போது ஊர்வசியின் அசைவுகளுக்கு வாயில் கையைப் பொத்தி இருக்கையில் குலுங்கி குலுங்கிச் சிரித்தார். படம் முடிந்த செல்கையில் எதுவும் நடக்காதது போல இறுக்கமாக வெளியேறினார்.

பார்வையாளனின் உளவியலை முழுவதும் புரிந்துகொண்ட ஒரு ‘திரைக்கதை சொல்லி’ இயக்குநர் கே.பாக்யராஜ்!

(திரை விரியும்...)

x