அப்துல்கலாம்: ஆட்டோக்களிலும் சிரிக்கும் ‘ரோல்மாடல்’ நாயகன்!


எனக்குத் தெரிந்து ஒரு விஞ்ஞானியை, லட்சக்கணக்கான இளைஞர்கள் கொண்டாடியிருக்கிறார்களா... தெரியவில்லை. அதேபோல், ஜனாதிபதியாக இருந்தவர், மக்களின் மனங்களில் இப்படியொரு தனியிடம் பிடித்து கொண்டாடப்படுவது நம் நாட்டில் நிகழ்ந்திருக்கிறதா. அப்துல்கலாம் செய்த சாதனைகளையெல்லாம் கடந்து இவற்றையே மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.

இந்தியாவின் தென் கடைக்கோடி கடலோரப் பகுதியில் பிறந்த அப்துல்கலாம், கடந்த மற்றும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நாயகனாக, ‘ரோல்மாடலாக’ பார்க்கப்படுகிறார். இத்தனைக்கும் அவர் தன்னை ‘ஃபோகஸ்’ செய்துகொள்ளவில்லை. தன்னைப் பற்றி தாமே பிரசங்கப்படுத்திக் கொள்ளவில்லை. ‘நான் யார் தெரியுமா? நான் என்னெல்லாம் செஞ்சிருக்கேன் தெரியுமா?’ என்று சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. மாறாக, முகமூடி இல்லாத அவரின் பண்பும் எளியவர்களும் அவரை அணுகும் விதத்தில் நடந்துகொண்ட எளிமையும் இளைஞர்களிடம் ஈடுபாடும் குழந்தைகள் மீது பிரியமும் கொண்டிருந்ததில் நிஜம் காட்டினார், அன்புறவாடினார். இந்த அன்புக்கும் அவர் சொன்ன எளிய கருத்துக்களும்தான் அவரை எல்லோரிடமும் கொண்டுசேர்த்தது. எல்லோருக்குமானவர் கலாம் என்று நினைக்கவைத்தது. கலாம் ஒவ்வொருவரின் மனங்களிலும் ‘ஹீரோ’வானது இப்படித்தான்!

'கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே உன் கனவு. உன் லட்சியம்’ என்று கனவின் யதார்த்தத்தை, லட்சியத்தை, நோக்கத்தை மிக எளிதாகச் சொல்லி உணர்த்தினார். ’எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைச்சாப் போதும், ஜெயிச்சிருவேன்’ என்று நம்மில் பலரும் சொல்வோம்தானே. அதனால்தான் அவர் ‘வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்’ என நம் மனமறிந்து, நம் உணர்வறிந்து எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அப்துல்கலாம்

நான் பார்த்த வரையில், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அப்பா அம்மா, குழந்தைகள் படங்களைத் தாண்டி தமிழகம் முழுவதும் ஓடுகிற பல ஆட்டோக்களில், நம்மைப் பார்த்து ஸ்டிக்கராக, ஓவியமாக இருந்துகொண்டு சிரித்துக் கொண்டே இருப்பவர் அப்துல்கலாமாகத்தான் இருக்கும். ‘நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்துசேரும். நீ நீயாக இரு’ என்று பகவான் ரமணர் சொன்ன ‘நான் யார்?’ எனும் தத்துவத்தையும் சாக்ரடீஸ் சொன்ன ‘உன்னையே நீ அறிவாய்’ எனும் கொள்கையையும் சாறுபிழிந்து ஜூஸ் போட்டு நமக்குக் கொடுத்த வைட்டமின் நாயகன் அப்துல்கலாம்.

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில், அரசுப்பள்ளியில் படித்து, திருச்சி கல்லூரியில் படித்துவிட்டு, எங்கெல்லாமோ வேலை பார்த்து, ஏவுகணை நாயகன் என்கிற பட்டமெல்லாம் பெற்று, இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாகவும் பணியாற்றிய கலாம், நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார். அவர் அடிக்கடி சொல்லுகிற ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்’ என்று உலகமே வந்து ராமேஸ்வரம் வந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தியதை சொன்னதன்படி வாழ்ந்து காட்டிய தத்துவ விஞ்ஞானி என்பதையும் நாம் உணர்ந்ததால்தான் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

துக்கித்தும் விக்கித்துமாகவே கடக்கிற வாழ்க்கைதான் நம்முடையது. தோல்வியில் சுருங்கிப் போகிற நம் மன உணர்வை உணர்ந்த கலாம், ‘கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்றுவிடலாம்’ என்று சொல்லிவைத்தார்.

‘இருபது இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். புதிய பாரதத்தைப் படைத்துக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமி விவேகானந்தர். அப்துல்கலாமும் விவேகானந்தராலும் மகாத்மா காந்தியாலும் ஈர்க்கப்பட்டவர்தான். ஆனால் இளைஞர்களைக் கொடுங்கள் என்று அவர் கேட்கவில்லை. மாறாக, இளைஞர்களை நோக்கி அவர் பயணித்தார். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று யார் பேச அழைத்தாலும், எங்கே பேசக் கூப்பிட்டாலும் மிகுந்த உற்சாகத்துடன், குதூகலத்துடன், மகிழ்ச்சியுடன் மாணவர்களை சந்தித்து, ‘நாளைய இந்தியா இளைஞர்களின் கைகளில்’ என்று எல்லோரும் சொல்லும் இனிய வாசகத்தை, இன்னும் இன்னுமாக, அழுத்தம் திருத்தமாக, அதேசமயம் மிக மிக எளிமையாக, வார்த்தை ஜாலங்களில்லாமல் சொல்லி மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணினார்.

அவர் எங்கே பிறந்தார், எப்படி வளர்ந்தார், என்னென்ன சோதனைகளையும் சாதனைகளையும் சந்தித்து ஜெயித்தார் என்பதெல்லாம் இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கும் அடுத்தடுத்த தலைமுறை நாயகர்களுக்குமான பாடம். சரித்திரப் பாடம். வாழ்வியல் பாடம்.

அப்துல்கலாம் அடிக்கடி சொல்கிற வார்த்தைகள்தான்... ‘வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம்; நழுவவிடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை; நிறைவேற்றுங்கள். வாழ்க்கை என்பது, ஒரு லட்சியம்; சாதியுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சோகம்; தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்; வென்றுகாட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம்; நடத்திமுடியுங்கள்’ என்கிறார்.

கொஞ்சம் அப்துல்கலாமை, அவர் வாழ்வை, அவரின் செயல்களை, அவருடைய கருத்துகளைப் பார்த்தால், அவர் சொன்ன இந்த எண்ணங்களின்படியே அவர் நிறைவுற வாழ்ந்திருக்கிறார். வாழ்ந்துகாட்டுதல் மூலம் நமக்கு நம் சக்தியை, நம் தேச ஒற்றுமையை வலியுறுத்தி வழிகாட்டியிருக்கிறார் என்பதை உணரலாம்.

நவீன உலகில் பொருட்களை நேசித்துவிட்டு, மனிதர்களை புறந்தள்ளிக்கொண்டே இருக்கிறோம். அக அழகை விட்டுவிட்டு, புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ‘அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது, உங்கள் வாழ்க்கையை அழகாக்கிவிடும்’ என்பதை நமக்கு அழகாக எடுத்துரைத்த அப்துல்கலாம் பிறந்தநாள். 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறக்கும்போது அந்த ஊருக்கும் பெற்றோருக்கும் கூட, அப்துல்கலாம் எனும் சாதனை நாயகனை அறிந்திருக்கமுடியாதுதான். ஆனால் இன்றைக்கு... அகிலத்துக்கே தெரிந்திருக்கிறது அப்துல்கலாம் எனும் சாதனை நாயகனை!

‘இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒருபக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்கவப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது’... இதுவும் அப்துல்கலாம் சொன்ன மந்திர வார்த்தைகள்தான்!

இந்த 91வது பிறந்தநாளில், கலாம் வழிநடக்க உறுதியெடுப்போம்! அதுதான் அவருக்கு நாம் செய்யும் சல்யூட்!

x