குழந்தைகளுக்கும் பிடித்தமான ஹீரோவாக உருவாகிவிட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்த திரைப்படம், ஏவி. எம்மின் ‘ராஜா சின்ன ரோஜா’. பேபி ஷாலினி உள்ளிட்ட ஐந்து சிறார்களோடு ரஜினி நடித்த இந்தப் படத்தில் எந்த இந்தியக் கதாநாயகனுக்கும் கிடைத்திராத ஒரு பெருமை அவருக்குக் கிடைத்தது. ஆமாம்! ஒரேயொரு பாடல் காட்சிக்காக 84 ஆயிரம் அனிமேஷன் ஓவியங்கள் வரையப்பட்டு படமாக்கப்பட்டன. முதல் முறையாக, யானை, குரங்கு, முயல், மான், கரடி, நரி, அணில், இரண்டு குயில்கள், புறா, வண்ணத்துப் பூச்சிகள், குருவிகள், வண்டு, ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் ரஜினி நடித்தார். அந்தப் பாடல்தான் ‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்’.
வன விலங்குகளைக் குழந்தைகளுக்குக் காட்டுவதற்காக அவர்களைக் காட்டுக்குள் சுற்றுலா கூட்டிக்கொண்டு வருவார் ரஜினி. அவரையும் குழந்தைகளையும் வெள்ளை முயலும் அதன் கூட்டாளிகளான நரி, கரடி போன்றவை வரவேற்கும். அங்கே காலில் முள் தைத்து கிடக்கும் ஒரு யானையாருக்கு மூலிகைச் சாறு பிழிந்து வைத்தியம் பார்ப்பார் ரஜினி. அது குணாமாகி காட்டுக்குள் சென்றுவிடும். ரஜினியுடன் காட்டுக்குள் வந்த இரண்டு சிறுவர்கள் ஒரு குரங்கின் வாலில் துணியைச் சுற்றி அதற்குத் தீயை வைத்துவிடுவார்கள். குரங்கு மரம் விட்டு மரம் தாவி தீயைப் பரப்பும். இப்போது உதவி பெற்ற யானை திரும்ப வந்து, தன்னுடைய தும்பிக்கை வழியே ஓடையிலிருந்து நீரை உறிஞ்சி வந்து தெளித்து தீயை அணைத்து அனைவரையும் காப்பாற்றும். அப்போது ரஜினி குழந்தைகளைப் பார்த்து ‘நன்மை ஒன்று செய்தீர்கள்... நன்மை விளைந்தது... தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது’ என்று நீதி சொல்லி பாடி முடிப்பதாக அந்தப் பாடல் அமைந்தது. அந்தப் பாடலுக்காகவே குடும்பம் குடும்பமாக வந்து ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தைப் பார்த்தார்கள்.
தினசரி 5 காட்சிகள்
மாஸ்கோ சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்ட இந்திய மெயின் ஸ்ட்ரீம் படங்களில் ஒன்றாகத் திரையிடப்பட்டு பாராட்டப்பட்ட ‘ராஜா சின்ன ரோஜா’ படம், தமிழகத் திரையரங்குகளில் வெளியானபோது, மாஸ் ஹீரோ படங்கள் அனைத்தும் தினசரி 4 காட்சிகள் என்கிற வழக்கத்தை மாற்றி தினசரி 5 காட்சிகள் திரையிடப்பட்டது. ஏவி.எம் நிறுவனம் ‘மனிதன்’ படத்துக்குப் பிறகு அந்தப் படத்தில் பங்குபெற்ற அத்தனை கலைஞர்களையும் வைத்துகொண்டு, ரஜினிக்கு உருவாகியிருந்த சிறார் ரசிகர்களையும் கவரும் விதமாக ‘ராஜா சின்ன ரோஜா’வை ஒரு பிளாக்பஸ்டர் படமாகத் தயாரிக்க விரும்பிய ஏவி.எம்.சரவணன், அதில் இதுவரை சேர்க்கப்படாத ஒரு அம்சத்தைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். படத்தின் இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கு அவர் சொன்ன ஐடியாதான் ‘அனிமேஷன் வித் லைவ் ஆக்ஷன்’.
கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்தார். ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார்.
பாடலுக்கான கார்ட்டூன் அனிமேஷன் வரைகலையை மும்பையின் பிரபலமான அனிமேஷன் ஓவியரான ராம்மோகனிடம் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அவரோ, ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய 2டி அனிமேஷன் படங்களுக்கு அப்போது பிஸியாக வரைந்துகொண்டிருந்தார்.
இதனால் ராம்மோகனின் குழுவிடம் இந்தப் படத்துக்குத் தேவையான வேலையை வாங்க முடியுமா என்பதில் ஏவி.எம்.சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் முத்துராமனை அழைத்து, “எவ்வளவு செலவானாலும் பிரச்சினையில்லை. அனிமேஷன் பாடலைச் சிறப்பாக எடுக்க வேண்டும். அதற்காகவே குழந்தைகள் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும். எனவே அனிமேஷன் நிபுணர் ராம்மோகனை மும்பை சென்று சந்தித்து எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டு வந்து, அதன்பிறகு அப்பாடல் காட்சியைப் படம் பிடியுங்கள்” என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் படத்துக்குப் பூஜை போடப்பட்ட அன்றே மும்பை விமானத்தில் பறந்தார். ராம்மோகனைச் சந்தித்து, பாடல் காட்சியின் சூழலைச் சொன்னார். ராம்மோகனோ, “நீங்கள் சொல்லும் பாடல் சீக்குவென்ஸுக்கு மட்டுமே 84 ஆயிரம் படங்கள் வரைய வேண்டும். எங்கள் குழுவுக்கு நேரமில்லை” என்று மறுத்தார். ஆனால், முத்துராமன் அவரை விடுவதாக இல்லை. “ஏவி.எம் நிறுவனம் எதைச் செய்தாலும் திட்டமிட்டு படமாக்கும் தொழில்முறையைக் கொண்டது. இந்த பாடல் காட்சியை முதலில் படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உடனடியாக நீங்கள் அனிமேஷன் ஓவியங்களை வரையத் தொடங்கிவிடுங்கள். படத்தின் மற்ற வேலைகள் முடிய 6 மாதம் ஆகும். அதற்குள் உங்கள் வேலைகளை முடித்துக்கொடுத்துவிடுங்கள்” என்றார். “எல்லாம் இருக்கட்டும் இதில் யார் கதாநாயகன்?” என்று கேட்டார் ராம்மோகன். ‘ரஜினிகாந்த்’ என்று முத்துராமன் சொன்னதும், “வாவ்! கண்டிப்பாகச் செய்து தருகிறோம்” என்று ஒப்புக்கொண்டார்.
சூழ்ந்துகொண்ட பள்ளிக் குழந்தைகள்
இந்த அனிமேஷன் பாடல் காட்சியை கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இல்லாமல் இயக்குநர் எப்படி படம் பிடித்தார்? அதையும் பகிர்ந்துகொள்கிறார் எஸ்பிஎம். “ரஜினி, கௌதமி ஆகியோருடன் ஐந்து சிறார் நடிகர்களும் படப்பிடிப்பில் பங்கு கொண்டார்கள். அவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான விலங்குகள் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும், எப்படி ரஜினிக்கு பூச்செண்டு கொடுக்கும்... யானையின் காலில் எப்படி ரஜினி முள் எடுப்பார் என்பதையெல்லாம் ‘மார்க்’ செய்துகொண்டு, என்னுடைய உதவி இயக்குநர்கள் விளக்கி, நடித்துக் காட்டினார்கள். விலங்குகளும் பறவைகளும் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கள். இதை நாங்கள் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்களை வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம். சிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது. குழந்தைகளை பெற்றோர்கள் பொறுப்போடு வளர்க்க வேண்டும். என்கிற கருத்தை இந்தப் படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.
இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒருமுறை மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியுடன் படப்பிடிப்புக் குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகள் கூடி நின்றார்கள். அனைவரும் பள்ளிச் சீருடை அணிந்திருந்தார்கள். அவர்கள், ‘ரஜினி அங்கிள் இந்த வழியாக வருவதாகக் கேள்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பள்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கள். அவர்களுடன் ரஜினி ஒரு மணிநேரம் செலவிட்டார். அத்தனை பேருக்கும் அலுக்காமல் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். ‘நன்றாகப் படிக்க வேண்டும்’ என்று வாழ்த்தினார்” என்று எஸ்பி.முத்துராமன் கூறினார்.
அந்தப் படம் ஒரு வெள்ளிவிழா படமாக அமைந்ததில் ஆச்சரியம் இல்லைதானே!
(சரிதம் பேசும்)