குறைமாதப்பேறு குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை!


எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச்‌ செய்யாமல், அவசர அவசரமாக... அரைகுறையாகச் செய்து முடிப்பவர்களை ‘குறைமாசத்துல பொறந்தவன் போல...’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். உண்மையில் குறைமாதப்பேறு என்பது என்ன?ஏன் இது ஏற்படுகிறது?

அப்படி குறைமாதத்தில் பிறப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்ன? இந்த வார 'அவள் நம்பிக்கையில்' இது தொடர்பான முக்கிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்வோம்..

முழுமையான... அதாவது நிறைமாத கர்ப்பம் எனப்படுவது ஒன்பது மாதங்கள் அல்லது 40 வாரங்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அப்படி இந்த 40 வாரங்கள் தாயின் கருவறைக்குள் முழுமையாக இருக்காமல், 37 வாரங்களுக்கு முன்பாகவே, அதாவது ஒன்பது மாதம் ஆரம்பிக்கும் முன்பே பிரசவிக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் என்றுகூறும் மருத்துவர்கள், அப்படிப் பிறக்கும் குழந்தைகளிலும் 32 வாரங்களுக்கு முன்பாக, அதாவது எட்டு மாதத்திற்குள்ளாகவே பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இன்னும் அதிக கவனம் தேவைப்படுகிறது என்கின்றனர்.

பொதுவாக, இப்படி முன்பாகப் பிறக்கும் குழந்தைகளின் தோல் சதைப்பிடிப்பில்லாமல் இருக்கும் என்பதால், சீதோஷ்ண உபாதைகளால் இந்தக் குறைமாதக் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன், உடலின் முக்கிய உறுப்புகளான நுரையீரல், இருதயம், மூளை மற்றும் நரம்புகள் ஆகியன முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே பிறந்துவிடுவதால் மூச்சுத்திணறல், சர்க்கரை அளவு குறைதல், கால்சியம் அளவு குறைதல், மஞ்சள் காமாலை, செரிமானமின்மை மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற உடல்ரீதியாகவும் பாதிப்புகளும், மனரீதியான வளர்ச்சிக் குறைபாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இன்றளவும் பிறந்த குழந்தை இறப்பின் முதல் முக்கியக் காரணமாக விளங்குவது குறைமாதப்பேறுதான் என்று கூறும் புள்ளிவிவரங்கள், ஒவ்வொரு வருடமும் உலகளவில் ஒன்றரைக் கோடி குழந்தைகள் இப்படிப் பிறக்கின்றன என்று தெரிவிக்கின்றன. இதில் கிட்டத்தட்ட கால்பங்கு அதாவது நிமிடத்திற்கு ஒரு குழந்தை என்ற கணக்கில் ஏறத்தாழ 35 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் மட்டும் பிறக்கின்றன என்பது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.

ஏன் குறைமாதப்பேறு ஏற்படுகிறது என்பதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை என்றாலும்... பதின்பருவ கர்ப்பம், கர்ப்பகால சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இரட்டைக் கர்ப்பம், கர்ப்பப்பை வாய் விரிதல், கட்டிகள் மற்றும் குறைபாடுகள், கருப்பை மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்றுநோய்கள் போன்றவற்றுடன் மன அழுத்தம், சத்துக் குறைபாடுகள், புகைப்பழக்கம், முந்தைய கர்ப்பத்தில் குறைமாதப்பேறு போன்ற பலவும் இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன.

பொதுவாக, கருப்பை அடுத்தடுத்து இறுக்கமாக உணர்தல் (contractions), அடிவயிற்று வலி, இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் திடீரென்று ஏற்படும் பனிக்குட நீர் அல்லது இரத்தக்கசிவு, பிறப்புறுப்பில் ஓர் அழுத்த உணர்வு போன்ற அறிகுறிகளைக் கருவுற்ற பெண்கள் உணர்ந்தால், அது குறைமாதப் பிரசவத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அவர்கள் காலதாமதமின்றி மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

அவ்வாறு அறிகுறிகளுடன் மருத்துவமனை செல்லும் பெண்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தக்க சிகிச்சையும் வழங்கப்படுகிறது. எந்தக் குழந்தைக்குமே தாயின் கருவறைதான் வளரச் சிறந்த இடம் என்பதால் குறைமாதப்பேற்றைத் தவிர்க்கவும், பிரசவத்தைத் தள்ளிப்போடவும்தான் இங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

முக்கியமாக, பிரசவ வலியைக் குறைக்கும் மருந்துகள், குழந்தையின் நுரையீரல் முதிர்வைக் கூட்ட, மூளை மற்றும் நரம்புகள் வளர்ச்சிக்கான மருந்துகள், தொற்றுநோய்க்கான ஆன்டிபயாடிக்குகள், கருப்பைவாய் தையல் போன்றவற்றுடன்... குறைமாதப்பேறுக்கான காரணங்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் முழுமையான ஓய்வு, ஊட்டச்சத்து மிகுந்த உணவுவகைகள், மன அழுத்தம் குறையும் வழிமுறைகள் ஆகியனவும் குறைமாதப்பேற்றைத் தவிர்க்கும் முறைகளாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தாய்சேய் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், இப்படி பிரசவத்தைத் தள்ளிப்போடும் அனைத்து உபாயங்களும் உதவாமல் முன்கூட்டியே பிரசவம் நிகழும்போது, குழந்தையின் வாரங்கள் மற்றும் எடையைக் கொண்டு, பச்சிளம் குழந்தைக்கான சிகிச்சைப் பிரிவில் இந்த குறைமாதக் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். NICU எனப்படும் இப்பிரிவில், குழந்தையின் உடல் வெப்பநிலை, மூச்சு அளவு, சர்க்கரை மற்றும் கால்சியம் அளவு ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்து, பிறக்கும் குழந்தைக்கு கருவறை போன்ற ஒரு சூழலை வெளியே உருவாக்கி அதன் அனைத்துச் செயல்பாடுகளையும் நிறைமாதக் குழந்தைக்கு நிகராகக் கொண்டுவரும் முயற்சிகளை Neonatologists எனும் சிறப்பு மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர்.

தற்போதைய நவீன மருத்துவத்தால் 28 வாரங்களுக்குக் குறைவாகப் பிறக்கும் வெறும் 700 கிராம் எடையுள்ள பச்சிளம் குழந்தைகளைக்கூட சாதாரணக் குழந்தைகள் போல நமக்குத் திருப்பித் தருகின்றனர் இந்த சிறப்பு மருத்துவர்கள் என்பதுதான் இதில் சிறப்பு.

பிறக்கும்போதே சவாலுடன் பிறக்கும் இந்தக் குழந்தைகளும் சாதாரண குழந்தைகளைக் காட்டிலும் சாதிக்கும் குழந்தைகளாக இருக்கிறார்கள். அதற்கு இன்றைய அறிவியலும் மருத்துவமும் உதவுகின்றன என்றாலும், இந்தக் குறைமாதப்பேறைத் தவிர்ப்பதே குழந்தைக்கும் பெற்றோருக்கும் எளிதான வழிமுறையாக இருப்பதால் அதற்கான முன்னெடுப்புகளை நாம் எடுப்பதே நலமாகும்.

குறைமாதக் குழந்தைகள் அவசரத்தில் பிறந்தவர்கள் அல்ல. அக்குழந்தைகள் தங்கள் தாயையும் அவர்கள் மூலமாக இந்த உலகையும் சீக்கிரமே பார்க்கும் ஆர்வத்தில் பிறந்தவர்கள். அவர்களுக்கு நமது அன்பு சாதாரண குழந்தைகளின் காலத்தைவிட ஓரிரு மாதங்கள் அதிகமாகக் கிடைக்கிறது என்பதுதான் உண்மை என்ற புரிதலுடன் 'அவள் நம்பிக்கைகள்' தொடர்கிறது!

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com

x