சிறகை விரி உலகை அறி - 69: வாஸ்கோடகாமாவின் வெற்றிச் சின்னம்!


ஜெரோனிமஸ் துறவுமடத்தின் ஒரு பகுதி

ஒப்புதல் தரும் ஒருவர் எல்லாருக்கும் தேவைப்படுகிறார். நன்மை செய்வதற்கு மட்டுமல்ல, தவறு செய்வதற்கும்! நண்பர்கள், கணவர், மனைவி, கடவுள், உறவினர்கள் என பலரை அதற்காகவே வைத்திருக்கிறோம். தவறு எனத் தெரிந்தாலும், ஒப்புதல் கிடைத்துவிட்டால் குற்றவுணர்வு அற்றுப்போகிறது. சாமானியர்கள் மட்டுமல்ல, அன்றைய அரசர்களும் இன்றைய தலைவர்களும்கூட அப்படித்தான்.

நாடு பிடிக்க, போர் தொடுக்க, புரட்சியாளர்களை ஒடுக்க கடவுள் தரும் ஒப்புதல் முக்கியமானது. கிரேக்கத்தில் டெல்பி மலையில் அப்பல்லோ கோயிலும், யூத அரசர்களுக்கு ‘இறைவாக்கினர்களும்’, போர்ச்சுக்கல் அரசர்களுக்குக் கிறிஸ்தவ துறவிகளும் ‘கடவுளின் உத்தரவு’ சொல்பவர்களாக இருந்துள்ளார்கள்.

காலம் கடந்த சுவை

லிஸ்பன் நகரத்தில், அரசர்களுக்குக் கடவுளின் சம்மதத்தைச் சொல்லியதுடன், அவர்களுக்காகக் கடவுளிடம் மன்றாடிய துறவிகள் வாழ்ந்த ஜெரோனிமஸ் துறவு மடத்துக்கு (Jeronimos Monastery) பவுலோ அழைத்துச் சென்றார். திறப்பதற்கு நேரம் இருந்தது. “மாலையில் கூட்டம் பயங்கரமாக இருக்கும். வாருங்கள், இப்போதே சாப்பிடுவோம்” என்று சொல்லி அருகிலிருந்த Pasteis de Belem பேக்கரிக்கு அழைத்தார்.

சாப்பிடும்போது, “நீங்கள் பார்க்கப்போகிற ஜெரோனிமஸ் துறவு மடத்தில், ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான துறவிகள் வாழ்ந்தார்கள். தங்கள் ஆடைகளை வெளுக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தினார்கள். மஞ்சள் கருவைப் பயன்படுத்தி சுவையான பேக்கரி பொருட்கள் செய்தார்கள். இவர்கள் செய்முறையில் தயாரான, Pasteis de Nata எனும் இனிப்புப் பண்டம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1820-ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பிறகு, துறவற சபைகள் போர்ச்சுக்கல்லில் தடை செய்யப்பட்டன. துறவு மடங்கள் பல மூடப்பட்டன. அவ்வாறு, 1834-ல் இந்த மடமும் மூடப்பட்டது. எனவே, Pasteis de Nata செய்முறையை சர்க்கரை சுத்திகரிப்பு முதலாளிக்கு விற்றார்கள். இவரது வாரிசுகள், பல தலைமுறைகளாக செய்முறையை ரகசியமாகப் பாதுகாக்கிறார்கள். ஆதலால், இந்தக் கடையில்தான் அசல் சுவையை ருசிக்க முடியும்” என்றார். உண்மைதான். அத்தனை தித்திப்பாக இருந்தது.

வாஸ்கோடகாமா கல்லறை

வெற்றியின் சின்னம்

தாகுஸ் நதிக்கரையில், லிஸ்பன் துறைமுகத்தின் நுழைவாயிலில் இளவரசரும் மாலுமியுமான ஹென்றி சிறிய கோயில் கட்டினார். இந்தியாவுக்குப் புறப்படும் முன்பாக வாஸ்கோடகாமாவும் அவரின் மாலுமிகளும் அந்தக் கோயிலில்தான் இரவெல்லாம் ஜெபித்தார்கள். வாஸ்கோடகாமா, இந்தியாவைக் கண்டுபிடித்தார். அதன் நினைவாக, சிறிய கோயிலை இடித்துவிட்டு, மிகப்பெரிய கோயிலும், துறவு மடமும் கட்ட அரசர் முதலாம் மனுவேல் 1501-ல் உத்தரவிட்டார். பிறகு, புனித ஜெரோனிமஸ் துறவற சபை துறவிகளை அந்த இடத்தில் தங்கவைத்தார். அரசருக்காக, அவரது குடும்பத்தினருக்காக, புதிய நாடுகளைத் தேடி லிஸ்பன் துறைமுகத்திலிருந்து புறப்படும் மாலுமிகளுக்காக ஜெபிக்க வேண்டியது துறவிகளின் கடமை.

ஜெரோனிமஸ் துறவுமட கோயில்

கட்டிடப் பணியின் காலம் 8 ஆண்டுகள்தான். ஆனால், தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் கிடைத்த செல்வமும், இறக்குமதியான நறுமணப் பொருட்களுக்குக் கிடைத்த வரி வருவாயும் ரசனைக்குத் தீனி போட்டன. ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு வேலை தொடர்ந்தது. நாடு பிடிக்கும் காலத்தின் சிறப்பைப் பறைசாற்றியபடி, தேசிய நினைவுச் சின்னமாக, போர்ச்சுக்கல்லின் 7 அதிசயங்களுள் ஒன்றாக, யுனெஸ்கோ புராதனச் சின்னமாக விளங்குகிறது ஜெரோனிமஸ் துறவுமடம்.

கவின்மிகு வாசல்

நுழைவுச் சீட்டு வாங்கச் சென்றபோது, மடத்தின் ஒரு பகுதியில், கலைநுட்பத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாயிலைப் பார்த்தேன். உயரம் 32 மீட்டர். அகலம் 12 மீட்டர். சென்று வர இரண்டு கதவுகள். கதவுகளுக்கு மேலே நடுவில் இளவரசர் ஹென்றியின் சிலை. சிலையைச் சுற்றி, சுவரில் 39 மனிதச் சிலைகள். வாயிலின் இரண்டு பக்கங்களிலும் கலை வேலைப்பாடு மிகுந்த மிகப்பெரிய ஜன்னல்கள். படமெடுத்துவிட்டு நடந்தேன். நுழைவுச்சீட்டு வாங்கி, சுற்றுலாப் பயணிகளுக்கான வாசல் வழியாக நுழைந்தேன்.

கட்டிடக் கலைகளின் சங்கமம்

மிகப் பிரம்மாண்டமான படிகளில் ஏறினேன். உலகினரின் தொந்தரவு இல்லாமல் அமைதியாக துறவிகள் வாழ்ந்த (Cloisters) பகுதிக்குச் சென்றேன். மனுவேலின் சிந்தனை, கற்பனை, இயற்கை வளங்கள், ஐரோப்பிய, கிழக்கத்திய, மூரிஸ் மற்றும் மறுமலர்ச்சி காலக் கட்டிடக் கலைகள் அனைத்தின் சங்கமமாக அமைந்திருக்கிறது இந்த மடம்.

சுண்ணாம்புக் கல்லில் Lioz என்றொரு வகை உண்டு. தங்க நிறத்தில் இருக்கும். உலகிலேயே, லிஸ்பன் பகுதியில் மட்டும்தான் கிடைக்கிறது. இதை, அரச கல் என்று சொல்கிறார்கள். போர்ச்சுக்கல் முழுவதும் அரண்மனைகள், பேராலயங்கள் மற்றும் முக்கியமான அரசுக் கட்டிடங்கள் இக்கல்லினால் கட்டப்பட்டுள்ளன. ஜெரோனிமஸ் துறவுமடமும் லயோஸ் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வனப்பையும், தூண்களின் கலைநுட்பத்தையும் ரசித்துக்கொண்டே, சதுரமான கட்டிடப் பகுதிக்குச் சென்றேன். துறவிகள் தங்கியிருந்த பகுதி அது. அதன் மஞ்சள் நிறம், மனதை ஒருமுகப்படுத்தியது. அவர்கள், உணவருந்திய மிக நீளமான உணவறைக்குள் சென்றேன். மேசை நாற்காலிகள் ஏதுமில்லை. 1517-1518-ல் கட்டப்பட்ட சுவர்களை, அசுலிஜோ டைல்ஸ்களால் 1780-1785-ம் ஆண்டுகளில் அழகுபடுத்தியுள்ளார்கள் உணவறைக்கு வெளியே, கை கழுவும் தொட்டி இருக்கிறது. தொட்டியின் நடுவில் சிங்கம் உள்ளது. தொட்டியில் அமர்ந்து படமெடுத்தேன்.

உணவறை

கோயில் மாடத்துக்குச் சென்றேன். பதிவு செய்யப்பட்ட பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. பல ஆண்டுகால தியான அறைக்குள் நுழையும்போது ஓர் உணர்வு ஏற்படுமே அப்படி இருந்தது. பாடல் மனதை அமைதியாக்கியது. கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடப்பதால் எல்லா நாட்களும் பயணிகளுக்கு அனுமதி இல்லை. நான் சென்றபோது, புனரமைப்பு நடந்தது.

நாயகர்கள் உறங்குகிறார்கள்

அரச குடும்பத்தினரின் கல்லறையாகவும் இந்தக் கோயில் திகழ்கிறது. இறந்தவர்களைக் கல்லறைத் தொட்டியில் வைத்து மூடியுள்ளார்கள். மைய பீடத்தில், அரசர் முதலாம் மனுவேல் மற்றும் அவரது மனைவி அரசி மரியாவின் கல்லறைகள் உள்ளன. அரசர் மூன்றாம் ஜான், அவரது பேரன் அரசர் முதலாம் செபாஸ்டின் ஆகியோரின் கல்லறைகள் பீடத்தைவிட்டு வெளியே இடதுபுறம் உள்ளன. வேறு பல கல்லறைத் தொட்டிகளும் இருக்கின்றன. அந்த இடமும், தனி கோயில் போல காட்சியளிக்கிறது. முதலாம் செபாஸ்டினின் கல்லறைத் தொட்டியை இரண்டு யானைகள் தங்கள் முதுகில் சுமந்திருக்கின்றன. கல்லறையில் உடல் இல்லை. அவர் உடல் கிடைக்கவில்லை. ஒருவேளை போரில் கொல்லப்பட்டிருக்கலாம். அவரது இறப்பு குறித்து பல்வேறு கதைகள் தற்போதுவரை உலவுகின்றன. அதில் ஒன்று, ‘முதலாம் செபாஸ்டின் மீட்பர் ஆவார். போர்ச்சுக்கல்லுக்கு ஆபத்து வரும்போது, காப்பாற்ற மறுபடியும் வருவார்’ எனும் கதை!

மேலும் இரண்டு முக்கியமான கல்லறைகள் இங்கு உள்ளன. ஒன்று, வாஸ்கோடகாமாவின் கல்லறை. மற்றொன்று, கவிஞர் லூயிஸ் தே கமோஸ் (1524-1580) கல்லறை. வாஸ்கோடகாமா, அட்லாண்டிக் கடலையும், இந்தியப் பெருங்கடலையும்; மேற்கையும் கிழக்கையும் இணைத்தவர். ‘உலகின் எல்லை இதுதான்’ என போர்ச்சுக்கல்லின் ரோக்கா முனையை ஐரோப்பியர்கள் சொன்னதை மாற்றி எழுதியவர். லூயிஸ் தே கமோஸ், போர்ச்சுக்கீசு மொழியின் மிகப்பெரும் கவிஞர். இவர் இறந்த தினம் போர்ச்சுக்கல் நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தொல்பொருள் கூடம்

அடுத்ததாக, துறவு மடத்தின் மேற்கு பக்கம் சென்றேன். துறவிகள் தூங்குவதற்குப் பயன்படுத்திய அப்பகுதியில் 1903-ல் மிகப்பெரிய தேசிய தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்துள்ளார்கள் போர்ச்சுக்கீசியர்களின் படையெடுப்புகள், அவர்களின் வெற்றிகள், கொண்டுவந்த பொருட்கள் என நிறைய வரலாற்றுத் தகவல்களுடன் அமைத்திருக்கிறார்கள். சில தகவல்களை மட்டும் வாசித்தபடி, போர்ச்சுக்கல் நாடு முழுவதும் தொல்பொருள் ஆய்வில் கிடைத்த முக்கியமான பொருட்கள்; நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலம், ரோமன், மற்றும் மத்திய கால கலைப் பொருட்கள்; 500-க்கும் மேற்பட்ட எகிப்திய தொல்பொருட்கள் மற்றும் இறந்தவர்களைப் புதைத்த மம்மிக்களைப் பார்த்தேன்.

எகிப்திய தொல்பொருட்கள் அறை

இங்குள்ள, ‘எகிப்திய தொல்பொருட்கள் அறை’யில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் (கி.மு. 6000 - 3000) காப்டிக் காலம் (கி.பி. 395 - 642) வரையிலான பொருட்கள் உள்ளன. எகிப்திய நாகரிகத்தின் மிக முக்கியமான காலத்தை இப்பொருட்கள் சொல்கின்றன. அனைத்தையும் 14 வகைமைகளில், கீழ்காணும் 5 பிரிவுகளாக ஒழுங்கு செய்துள்ளார்கள்: எகிப்து மற்றும் நைல் நதி, இறப்புச் சடங்கு பொருட்கள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், இறப்பு சடங்குகள், இறந்தவர்களை புதைக்கும் முறைகள், கிரேக்க – உரோமை - எகிப்து.

சுற்றிப் பார்த்துவிட்டு, என்றாவது ஒருநாள். எகிப்து செல்ல வேண்டும் என்கிற ஆசையுடன் வெளியில் வந்தேன்.

(பாதை விரியும்)

விலங்குகளுக்குப் பாதுகாப்பு

காலையில் வீட்டிலிருந்து வரும்போது, சான்ரா கேட்டார், “உங்களுக்கு நாய்கள் பிடிக்குமா?” “பிடிக்கும்” என்று பொய் சொன்னேன். “அதுதான்! வீட்டில் உள்ள நாய்கள் உங்களுடன் நன்றாக விளையாடுகின்றன. முன்பொருமுறை உறவினர் ஒருவர் வந்தார். அவருக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. அவரைக் கவனித்துக்கொள்வது சிக்கலாக இருந்தது” என்றார். “மனிதரைக் கொலை செய்யும் கொலையாளியை நாம் இப்போது எப்படி நடத்துகிறோமோ, அப்படி, விலங்குகளைக் கொலை செய்பவரை நடத்தும் ஒரு காலம் வரும்” என்று லியொனார்டோ டா வின்சி (1452) சொல்லியுள்ளதாக பவுலோ சொன்னார். மேலும், “அந்தக் காலம் வந்துவிட்டது. நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை சரியான காரணமின்றி தண்டிப்பது, கொலை செய்வது போன்றவை போர்ச்சுக்கல் நாட்டில் குற்றச் செயல்களாகக் கருதப்படுகின்றன. அவற்றுக்குத் தண்டனையும் அதிகம்” என்றார்.

x