சிறகை விரி உலகை அறி - 65: மலைத்தீவும் மங்கா மனமும்


சந்தியாகோ தே கம்போஸ்தெல்லா கோயில்

தத்தித்தாவும் குருவிகள் கொத்தித் தின்னும் பேரழகை, மழை கழுவாத கோடைகால இலைகளின் சோர்வை, மேகம் மறைக்காத சூரியனின் புன்னகைச் சூட்டை ரசித்துக்கொண்டு பார்சிலோனா வீதிகளில் நடந்தேன். முடிவெட்ட கட்டணம் குறைவான கடை தேடினேன்.

கண் கண்ட கடைகளிலெல்லாம் பெண்களின் தலையலங்காரம் குறித்த விளம்பரங்களே விலைபேசின. ஆண்களுக்கான கடைதேடி பல்வேறு சாலைகளின் எல்லைவரை சென்று திரும்பினேன். பொறுமையிழந்து, பெண்களுக்கான விளம்பரம் உள்ள கடைக்குள் நுழைந்து, “ஆண்களுக்கு முடி வெட்டும் கடை எங்கே உள்ளது?” என்று கேட்டேன். “முதல் மாடிக்குச் செல்லுங்கள்” என்றனர். அங்கு ஆண்களுக்கான கடை இருந்தது. தலையில் மீதமிருக்கும் முடிகளை முடிந்தவரை அழகாக்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

தூண் மீது நின்ற நம்பிக்கை

பார்சிலோனாவில் இருந்து, சரகோசா (Zaragoza) புறப்பட்டேன். எப்ரோ நதியின் தென் கரையில் அமைந்துள்ள இந்நகரம் பரோக் (Baroque) கலைகளின் பொக்கிஷம் எனப்படுகிறது. ‘ஸ்பெயின் நாட்டுக்கு இயேசுவை அறிவிக்க வந்த, அவரது சீடர் யாக்கோபு, பெரிய அளவில் வெற்றி கிடைக்காததால், எப்ரோ நதிக்கரையில் சோர்ந்து அமர்ந்தார். அப்போது, அன்னை மரியாள் தூண் மீது நின்ற வடிவில் காட்சி கொடுத்து, ‘கவலைப்படாதே உன் உழைப்பு வீண் போகாது’ என்றார்’ என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. தூண் மாதா என்னும் பெயரில் மிகப் பிரம்மாண்டமான கோயில் இங்கே கட்டப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த எண்ணற்ற கலைப் பொக்கிஷங்கள் இக்கோயிலில் உள்ளன. தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நாட்களில், சரகோசா குறித்த நாட்டிய நாடகத்தில் நான் நடித்திருந்ததால், எதிர்பார்ப்புடன் கோயிலுக்குள் சென்றேன். பிரம்மாண்டத்தைக் கண்டேன். பீடத்தின் வலது ஓரத்தில், தான் காட்சி கொடுத்த தூண் மீது மரியாள் நிற்கும் சுரூபத்தைப் பார்த்தேன். வெளியில் வந்ததும், உச்சந்தலையில் படர்ந்த வெப்பம், உள்நாக்கின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சியது. பஃப்வே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

டொலேடோ நகரம்

மலைத்தீவு

தொடர்வண்டியில் ஏறி, குன்றின் மீது அமைந்துள்ள டொலேடோ (Toledo) சென்றேன். 529 மீட்டர் உயரத்தில், 232 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதியை ‘மலைத்தீவு’ என்றாலும் பிழையல்ல. யுனெஸ்கோ புராதனச் சின்னமாகவும் இந்நகரம் விளங்குகிறது.

டொலேடோ தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, பேருந்தில் ஏறி குன்றடியில் இறங்கினேன். நகரும் படிக்கட்டில் குன்றின் உச்சிக்குச் சென்றேன். அமைதியான இரவில், நிலவொளியின் துணையில் விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தேன்.

இலவச நடை சுற்றுலா

சுற்றுலாவின் வகைகளுள் மன்றொன்று, இலவச நடை சுற்றுலா (Free walking tour). இணைய வழியில் முன்பதிவு செய்ய வேண்டும். சுற்றுலாவின் கால அளவு, ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம். முக்கியமான பாதைகளில் அழைத்துச் சென்று, வெளியில் நின்றே அதனதன் வரலாறு சொல்லுவார் வழிகாட்டி. சுற்றுலாவின் நிறைவில் நாம் கொடுக்கும் நன்கொடைதான் அவருக்கான ஊதியம்.

ஸோகோடோவர் சதுக்கம்

ஸோகோடோவர் சதுக்கம்

காலையில், ஸோகோடோவர் (Zocodover) சதுக்கத்துக்குச் சென்றேன். 1566 முதல்1865 வரை மாட்டுச் சண்டை இச்சதுக்கத்தில் நடந்துள்ளது. இப்போது, சுற்றிலும் உணவு விடுகள் நிறைந்துள்ளன. இலவச சுற்றுலா இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஒவ்வொரு வழிகாட்டியும் வெவ்வேறு வண்ண குடைகளுடன் நின்றார்கள். என் வழிகாட்டியின் அடையாளம் ஆரஞ்சு நிறக் குடை.

ஒலிவாங்கி மற்றும் சிறிய ஒலிபெருக்கியுடன் குழுவினரை வழிகாட்டி வரவேற்றார். கல் பதித்த நகர வீதிகளில், இயற்கையான நிறங்களுடன் காலம் கடந்து நிற்கும் கட்டிடங்களைக் காட்டிக்கொண்டே வரலாறு விவரித்தார்.

“இந்நகரை உரோமையர்கள் கி.மு.192-ல் கைப்பற்றினார்கள். எனினும், உரோமையர் வருவதற்கு முன்னரே யூதர்கள் இங்கு வாழ்ந்தார்கள். எப்போது குடியேறினார்கள் என்பதற்கு தரவுகள் இல்லை. கி.மு.586-ல் ஜெருசலேம் கோயில் முதல் முறை இடிக்கப்பட்டபோது அகதிகளாக இங்கு வந்திருக்கலாம் என்கிறது சில ஆய்வுகள்” என்று சொன்னவர், “அதோ தெரிகிறதே அதுதான் யூதக் குடியிருப்பு” என்று சுட்டிக் காட்டினார். “டொலேடோவை கி.பி.6-ம் நூற்றாண்டில் விசிகோத்ஸ் கைப்பற்றினார்கள். தங்கள் தலைநகரமாகவும் மாற்றினார்கள். காலப்போக்கில், அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். இதனால், மதம் தொடர்பாக விவாதிப்பதற்கு தேசிய அளவிலான கூட்டங்களும் டொலேடோவில் (Councils of Toledo) நடத்தப்பட்டுள்ளன” என்றார்.

மேற்கத்திய ஜெருசலேம்

தொடர்ந்து, “711-ல் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மூர் எனப்படும் இஸ்லாமியர்கள் ஸ்பெயினைக் கைப்பற்றினார்கள். டொலேடோ தலைநகராகத் தொடர்ந்தது. கட்டிடக்கலை, இலக்கியம், ஓவியம், இசை, வரலாறு, அழகியல், மருத்துவம் என இஸ்லாமியர்கள் பெரும் பங்களிப்பு நல்கினார்கள். மத சகிப்புத்தன்னையை நிலைநாட்டினார்கள். இதனால், மூன்று மதங்களின் நகரம் அல்லது மேற்கத்திய ஜெருசலேம் என்று டொலேடோ அழைக்கப்பட்டது.

1086-ல் கிறிஸ்தவ அரசர் ஆறாம் அல்போன்சோ மூர் அரசரை வென்றார். சகிப்புத்தன்மை தொடர்ந்தது. 12-ம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

ரத்தச் சதுக்கம்

ஆண்டுகள் கடந்தன. கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. பேரரசர் பெர்டினான்ட் மற்றும் இசபெல்லா இருவரும் 1492 மார்ச் 31-ல் புதிய சட்டம் இயற்றினார்கள். திருச்சபையின் ஆதரவும் இருந்தது. ஐரோப்பிய வரலாற்றில், அரசும் சமயமும் (State and Religion) பிரிக்க முடியாதவை. புதிய சட்டத்தின்படி, ‘யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும், அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.’ ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாகப் புலம் பெயர்ந்தார்கள். கிறிஸ்தவ மதத்தை ஏற்காதவர்கள், மாற்றுக் கருத்து சொன்னவர்கள், குறிப்பாக ஆயிரக்கணக்கான யூதர்கள் ஸோகோடோவர் சதுக்கத்தில் எரித்துக் கொல்லப்பட்டார்கள்” என்று சொல்லி வழிகாட்டி நிறுத்தினார். அமைதியானோம். சிறிது நேரம் கழித்து தொடர்ந்து சொன்னார்.

“இச்சட்டத்தை யூதர்கள் மீது தீவிரமாக நடைமுறைப்படுத்த மற்றுமொரு காரணமும் இருந்தது. கொலம்பஸ் இந்தியாவுக்கு கடல் வழி காண்பார். நிறைய செல்வங்கள் கொணர்வார் என அரசி இஸபெல்லா நம்பினார். இதற்காக, செல்வச் செழிப்புமிக்க யூதர்கள் பலரிடம் அதிகக் கடன் பெற்று கொலம்பஸை அனுப்பினார். கொலம்பஸ் இந்தியாவையும் காணவில்லை, செல்வங்களும் கொணரவில்லை. யூதர்களுக்குப் பணத்தை எப்படி திரும்பி கொடுப்பது? யூதர்களை ஒழித்துக்கட்ட மதம் பயன்பட்டது.

கொடுமை என்னவென்றால், ஆரம்பத்தில், கிறிஸ்தவர்களாக மாறாதவர்களைக் கொன்றார்கள். அடுத்து, மாற்றுக் கருத்து (Heresy) கொண்டிருந்த கிறிஸ்தவர்களைக் கொன்றார்கள். நாளடைவில், கிறிஸ்தவ கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களையே சந்தேகத்தில் சிறையிலடைத்தார்கள் (உதாரணமாக, இஞ்ஞாசியார், சிலுவை யோவான், அவிலா தெரசா)” என்றார் வழிகாட்டி.

சுற்றுலா முடிந்ததும், பல்வேறு தெருக்களில் நடந்து நகரை ரசித்தேன். பழங்கால உலகை ஏதென்சில் அனுபவித்தது போல மத்தியகால அழகை டொலேடோவில் அனுபவித்தேன். சாலைகள், வீடுகள், கட்டிடங்கள், கோயில்கள், தொழுகைக்கூடங்கள், மசூதிகள், அரண்மனைகள், கடைகள், காட்சிகள் அனைத்தும் தனி உலகத்துக்குள் என்னை அழைத்துச் சென்றன.

என் பயணத்தின் காரணர்

மாட்ரிட் திரும்பினேன். சந்தியாகோ தே கம்போஸ்தெல்லா செல்ல தொடர்வண்டியில் ஏறினேன். ஒரு மாதம் நடந்து இந்த இடத்துக்கு செல்வதுதான், என் ஆரம்பகால திட்டம் (கட்டுரை எண் 27). பிறகு திட்டம் மாறியது. ஏதென்சில் நுழைந்து, 30 நாட்கள் கழித்து சந்தியாகோ சென்றேன். இறங்கும்போதே மழை. விடுதியில் உறங்கினேன். காலையில், குடைக்குள் நடந்தேன். யுனெஸ்கோ புராதன சின்னமாகத் திகழும் பழைய நகரின் கட்டிடங்களைப் பார்த்து வியந்தேன்.

புனித யாக்கோபுவின் கல்லறை

இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவரான புனித தோமையாரின் கல்லறை மீது சென்னையில் கோயில் (Santhome) கட்டப்பட்டுள்ளதல்லவா! அதேபோல, மற்றொரு சீடரான யாக்கோபுவின் கல்லறை மீது சந்தியாகோயில் கட்டப்பட்டுள்ளது.

தூபம் காட்டுவது இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும். மிகப்பெரிய தூபத்தை பீடத்துக்கு நடுவில் நிறுத்தி சாம்பிராணி போடுவார்கள். பலர் சேர்ந்து கயிறு இழுக்க, பீடத்தின் வலப்புறமும் இடப்புறமும் சாம்பிராணி புகையுடன் தூபம் கூரைவரை சென்றுவரும். நான் சென்றபோது, கோயில் புனரமைப்பு நடந்தது. கல்லறையைப் பார்த்துவிட்டு தொடர்வண்டி நிலையம் திரும்பினேன்.

பிரம்மாண்ட தூபம்

இடைநில்லா தொடர்வண்டியில் மாட்ரிட் பயணிக்க Eurail Pass இருந்தாலும், கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். வண்டி புறப்பட்டதும், சலுகை அட்டை இல்லாவிட்டால் எவ்வளவு கட்டணம் என்பதை அறிந்துகொள்ள, அருகில் இருந்த இளைஞரிடம், கேட்டேன். “தெரியவில்லை. அம்மாதான் பயணச்சீட்டு வாங்கினார்கள்” என்றார். ‘எல்லா ஊர்களிலும் 2K கிட்ஸ் ஒரே மாதிரிதானோ!’ என நினைத்தபடி இயற்கை நோக்கினேன். மாட்ரிட்டில் இறங்கியதும், போச்சுக்கல் செல்ல விமான நிலையம் சென்றேன்.

(பாதை விரியும்)

நற்கருணை கதிர் பாத்திரம்

நற்கருணை கதிர் பாத்திரம்

டொலேடோவில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்பாக பேராலயம் இருந்தது. சென்றேன். மிகப் பிரம்மாண்டமான பீடத்தையும், கோயிலின் வேலைப்பாடுகளையும் பார்த்து மலைத்தேன். அங்கே நற்கருணை கதிர் பாத்திரம் (Monstrance) ஒன்று உள்ளது. கதிர் பாத்திரத்தில் நற்கருணை நிறுவி பவனி போவது கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையாகும். எல்லா பங்கு ஆலயங்களிலும், சராசரி உயரத்தில் கதிர் பாத்திரங்கள் இருக்கும். இப்பேராலயத்தில், 10 அடி உயரம், 225 கிலோ எடையில் கதிர் பாத்திரம் இருக்கிறது. பார்த்ததும் பிரமித்தேன். மிகவும் சிக்கலான வேலைப்பாடுடைய இக்கதிர் பாத்திரத்தை, தனித்தனியாகப் பிரித்து மறுபடியும் மாட்ட முடியும். இப்போதும், ஆண்டுக்கு ஒருமுறை டொலேடோ நகரில் நற்கருனை சுமந்து செல்கிறது இக்கதிர் பாத்திரம்.

x