மவுத் ஆர்கன், கூட்ஸ் வண்டி மற்றும் நிலவு தூங்கும் நேரம்!


பணமில்லாமல் திண்டாடுபவர்கள் இங்கே அதிகம். படிப்பு, வேலை, திருமணம், மருத்துவம் என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. பணமிருந்தால் வேலை கிடைக்கும் என்று நாயகன் காத்திருக்க, பெண்ணின் திருமணத்துக்காகப் பணத்தை வைத்திருந்தவர், அந்தப் பணத்தைத் தொலைத்துவிட, தொலைத்த பணம் நாயகனின் வேலைக்கு டெபாசிட் செய்ய உதவ... பின்னாளில் பணத்தைத் தொலைத்தவரையே நாயகன் சந்திக்க நேரிடுகிறது. இப்படிச் சொல்லும்போதே, அந்தப் படம் எது என்பதைக் கண்டறிய முடிகிறதா உங்களால்? இன்னொரு குறிப்பு இதோ... ’ஒரு பகவத் கீதைலயோ, ஒரு குர்-ஆன்லயோ, ஒரு பைபிள்லயோ இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கணும்னு இருந்தா, அதை மாத்த யாராலயும் முடியாது’ என்கிற வசனம் இடம்பெற்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறதா? நெற்றிப்பொட்டிலடித்தாற் போல் சட்டென்று நினைவுக்கு வரும் அந்தப் படத்தின் பெயர்... ‘குங்குமச்சிமிழ்’.

பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், டெல்லி கணேஷ் முதலானோர் நடித்திருக்கும் ‘குங்குமச்சிமிழ்’ படத்தை மறந்துவிடமுடியுமா என்ன?

கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குப் பேருந்தில் பயணமாகிறார் மோகன். அப்போது இளவரசியை யாரோ துரத்திக்கொண்டு வர, அந்தப் பேருந்தில் ஏறிக்கொள்கிறார். டிக்கெட் எடுக்கவும் பணமில்லை என்கிறார். பிறகு மோகனே டிக்கெட் கட்டணத்தைச் செலுத்துகிறார். ஆனாலும் இருவருக்கும் முட்டிக்கொள்கிறது. சண்டையிட்டுக்கொள்கிறார்கள். பிறகு ஒருவரையொருவர் அனுசரித்து ஓரிடத்தில் தங்குகிறார்கள். அந்த இடம்... ரயில்வே தண்டவாளத்தில் ஓடாமல் நிற்கும் கூட்ஸ் வண்டி.

டிகிரி முடித்தும் வேலை கிடைக்கவில்லை என்று மோகன் சொல்கிறார். இளவரசியின் கதையோ பகீர் ரகம். கோவை ஆஸ்பத்திரி ஒன்றில், நர்ஸாகப் பணிபுரிகிறார் இளவரசி.

அங்கே பெருந்தொழிலதிபரான வி.கோபாலகிருஷ்ணன், கண் ஆபரேஷனுக்காக வருகிறார். அப்பா அம்மா இல்லாத இளவரசிக்கு அவரின் சித்தப்பாதான் எல்லாமே. ஆனால் அந்தச் சித்தப்பா வி.கோபாலகிருஷ்ணனுக்கு பார்ட்னரும் கூட. கோபாலகிருஷ்ணன் கண்களில் கட்டுப்போட்டுக்கொண்டிருப்பதைப் பயன்படுத்தும் வகையில், வெற்றுப் பத்திரத்தில் சித்தப்பா கையெழுத்து வாங்க ப்ளான் பண்ணுகிறார். அதைப் பார்த்த இளவரசி, கோபாலகிருஷ்ணனிடம் விவரம் சொல்ல, சித்தியின் தம்பியும் அவனுடைய கூட்டாளிகளும் இளவரசியைக் கொல்ல முடிவு செய்து துரத்துகிறார்கள். அப்போதுதான் அங்கிருந்து தப்பித்து மோகன் பயணிக்கும் பேருந்தில் ஏறுகிறார் இளவரசி.

இருவருக்குமான அந்த நட்பு, கொஞ்சம்கொஞ்சமாக காதலாக மாறுகிறது. மோகனின் பெயர் ரவி. இளவரசியின் பெயர் பிலோமினா. ஒருகட்டத்தில் மோகனுக்கு வேலை கிடைக்கிறது.

ஆனால் டெபாசிட் தொகை கட்டச் சொல்கிறார்கள். மோகனுக்குப் பணம் கிடைக்கவில்லையே எனும் தவிப்பு, கவலை. அந்த சமயத்தில் சென்னையில் டவுன் பஸ்சில் பயணிக்கும் மோகனின் காலடியில் ஒரு கவர் கிடைக்க, அந்தக் கவரைத் திறந்தால், பணம். கட்டுக்கட்டாக பணம்.

அந்தப் பணத்தை டெபாசிட் தொகையாகச் செலுத்துகிறார் மோகன். வேலையும் கிடைக்கிறது. இதற்கு நடுவே, வேலை கிடைக்காத மோகனுக்கு, டெபாசிட் தொகை வேண்டுமே என்று கலங்கும் மோகனுக்கு நாம் வேறு பாரமாக இருக்க வேண்டுமா என்று இளவரசி மோகனைவிட்டுப் பிரிகிறார்.

மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுக்கு மோகன் வேலைக்கு வருகிறார். அங்கே இருக்கிறார் டெல்லி கணேஷ். “என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று மோகனைப் பார்த்தமாத்திரத்தில் கேட்கிறார். மோகனிடம் மட்டுமல்ல... யாரைப் பார்த்தாலும் டெல்லி கணேஷ், “என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று கேட்பார். அவரின் மகள் ரேவதி. படத்தில் அவரின் பெயர் ருக்குமணி.

மோகன் வேலை பார்க்கும் எஸ்டேட்டில்தான் அவருக்கும் வேலை. மோகன் குடியிருக்கும் வீட்டைச் சுத்தப்படுகிற வேலையும் அவருக்கு வருகிறது. ஏதேனும் ஒரு பொருளைத் தவறுதலாக உடைப்பதுதான் அவரின் கேரக்டர். இப்படி பொருட்களை உடைத்ததற்காக மோகனிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருப்பார்.

இதனிடையே, இளவரசி வி.கோபாலகிருஷ்ணனை சந்திக்க நேரிடுகிறது. தன் சொத்தைக் காப்பாற்றியதற்காகவும் தன்னிடம் உண்மையாகவும் அன்புடனும் இருந்ததற்காகவும் இளவரசியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவரை மகளைப் போல் வளர்க்கிறார். இளவரசி, மோகனைப் பற்றி அவரிடம் சொல்ல இருவரும் சென்னையில் தேடுதேடு என தேடுகின்றனர். ஆனால் மோகன் கிடைக்கவில்லை. கோவைக்குத் திரும்புகின்றனர்.

டெல்லி கணேஷ், “என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று சந்திரசேகரிடமும் கேட்பார். அவர் ரேவதியைப் பார்த்துவிட்டு சம்மதம் சொல்வார்.

ஆனால் துரத்திவிடுவார் டெல்லி கணேஷ். ஒருகட்டத்தில், ரேவதியின் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை டெல்லி கணேஷ் பஸ்சில் தொலைத்துவிட்டார் எனும் உண்மை மோகனுக்குத் தெரியவர, கலங்கிப் போய்விடுவார் மோகன். அதற்குப் பிராயச்சித்தமாக ரேவதியையே திருமணம் செய்யும் முடிவுக்கும் வந்துவிடுவார். தன் காதலியும் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை; ரேவதியையே திருமணம் செய்துகொள்ளலாம் என்று பத்திரிகையெல்லாம் அடித்து, எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். சந்திரசேகரும் ரேவதியைத் திருமணம் செய்யும் எண்ணத்திலேயே இருப்பார்.

அப்போதுதான் இளவரசியிடம் இருந்து போன் வரும். வி.கோபாலகிருஷ்ணனின் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் மோகன் போனை எடுப்பார். பேச்சின் முடிவில், இளவரசி எப்போதும் சொல்லும் அந்த வசனத்தைச் சொல்லுவார்: “ஒரு பகவத் கீதைலயோ, ஒரு குர் ஆன்லயோ, ஒரு பைபிள்லயோ இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கணும்னுனு இருந்தா, அதை மாத்த யாராலயும் முடியாது”என்று!

அதைக் கேட்டு எதிர்முனையில் பேசுவது இளவரசிதான் என்பதை மோகன் அறிந்துகொள்வார். வி.கோபாலகிருஷ்ணனிடம் நடந்த அனைத்து உண்மைகளையெல்லாம் சொல்லி, திருமணத்துக்கு வராமல் இளவரசியைத் தடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்வார் மோகன். ஆனால், லைன் கிடைக்காது. இளவரசி திருமணத்துக்கு வருவார். வழியில், மோகனுக்குத்தான் திருமணம் என்பது தெரியவரும். பதற்றமாகி பரபரப்புடன் மண்டபத்துக்குச் செல்வார். அங்கே... மணமகளாக ரேவதி. மணமகனாக மோகன். ஆனால் ரேவதியை சந்திரசேகர் திருமணம் செய்துகொள்வார். இளவரசிக்காக மோகன் காத்திருப்பார். இருவருக்கும் திருமணம் நடக்கும்.

’ஒரு பகவத் கீதைலயோ, ஒரு குர் ஆன்லயோ, ஒரு பைபிள்லயோ இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கணும்னுனு இருந்தா, அதை மாத்த யாராலயும் முடியாது’ என்பதுடன் படம் நிறைவுறும்.

ஆர்.சுந்தர்ராஜனுக்கே உண்டான குசும்பு காமெடியும் காதல் யதார்த்தமும் தெளிந்த திரைக்கதையும் படத்துக்கு அழகு சேர்க்க, மோகன் தன் இயல்பான நடிப்பால், ரவி என்கிற கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருப்பார்.

இளவரசியும் தன் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். குறும்புக்கார ரேவதியின் நடிப்பைச் சொல்லவா வேண்டும்!சந்திரசேகர், எல்லாப் படங்களிலும் முத்திரை பதிப்பது போல இந்தப் படத்திலும் முத்திரையைப் பதித்திருப்பார். “என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்று முதலில் தயங்கி, அப்புறம் கெஞ்சி, பின்னர் அதட்டி, அதையடுத்து அழுதுகொண்டே கேட்டு... என வெளுத்து வாங்கியிருப்பார் டெல்லி கணேஷ். ராஜராஜனின் ஒளிப்பதிவில் படம் முழுக்க கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

படத்தின் இரண்டு கேரக்டர்களைச் சொல்ல வேண்டும். ஒன்று... அந்த கூட்ஸ் வண்டி. படத்தில் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். இன்னொன்று... மவுத் ஆர்கன். மோகனிடம் இருக்கும் இந்த மவுத் ஆர்கனும் படத்தில் முக்கிய அங்கம் வகித்திருக்கும்.

1985 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது ‘குங்குமச்சிமிழ்’. போரடிக்காத இந்தப் படத்தை, காதலையும் இசையையும் குழைத்து ராஜாங்கமே பண்ணியிருப்பார் இளையராஜா.

வாலியும் கங்கை அமரனும் பாடல்களை எழுதியிருப்பார்கள். ‘நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது’ என்ற பாடல் அன்றைக்குக் காதலர்களுக்கான பாடல். இன்றைக்கு நம் இரவுத் தூக்கத்துக்கான பாடல்.

‘கூட்ஸ் வண்டியிலே...’ என்ற பாடலின் முன்னிசையிலும் பாட்டு முழுவதும் வருகிற இசையிலும் திரையில், கூட்ஸ் வண்டி ஓடுகிற உணர்வை நமக்குள் ஏற்படுத்தியிருப்பார் இசைஞானி. ‘பூங்காற்றே தீண்டாதே’ என்கிற பாடல் காதலின் குதூகலத்தையும் சந்தோஷத்தையும் அப்படியே அள்ளியள்ளிக் கொடுக்கும்.

‘வைச்சாளாம் நெத்திப்பொட்டு’ நம்மைக் குதியாட்டம் போடவைக்கும். ’கைவலிக்குது கைவலிக்குது மாமா’ என்கிற பாடலும் இளவரசியின் நடிப்பும் மோகனின் துடிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகியம்மாவின் குரலும் என நம்மைக் கிறுகிறுக்க, கிளுகிளுக்க வைத்துவிடும்.

படத்தில் நிறைய பாடல்களை மலேசியாவுக்குக் கொடுத்திருப்பார் இளையராஜா. ‘நிலவு தூங்கும் நேரம்’ என்கிற ஒரே பாட்டில் மொத்தமாக நம்மைக் கபளீகரம் செய்துகொள்வார் எஸ்பிபி. மோகன் பல படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ரேவதி தன் அபார நடிப்பைப் பல படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சந்திரசேகரும் டெல்லி கணேஷும் வி.கோபாலகிருஷ்ணனும் கூட அப்படித்தான்! இளவரசியின் திரை வாழ்வில், ‘குங்குமச்சிமிழ்’ மிக முக்கியமான படம். ஆர்.சுந்தர்ராஜனை வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் இணைத்த ஹிட் படங்களில் இந்தப் படமும் இணைந்து மகுடத்தில் மயிலிறகு செருகியது.

கதைக்காகவே ஓடிய படம். காமெடி கலந்ததால் ஓடிய படம். மோகனுக்காகவும் ரேவதிக்காகவும் இளவரசிக்காகவும் ஓடிய படம். முக்கியமாக, அத்தனைப் பாடல்களுக்காகவும் ஓடிய படம் என்றெல்லாம் கொண்டாடித்தீர்த்தார்கள் ரசிகர்கள். திரையிட்ட பல தியேட்டர்களில், வெள்ளிவிழா கொண்டாடிய ‘குங்குமச்சிமிழ்’ படம் வெளியாகி, 37 வருடங்களாகிவிட்டாலும் அந்த மவுத் ஆர்கன் இசையையும் கூட்ஸ் வண்டியையும் ‘நிலவு தூங்கும் நேரத்தையும்’ நம்மால் மறந்துவிடவும் முடியாது; கடந்துவிடவும் முடியாது!

x