ஓவியங்களை விரும்பும் விழிகளுடன், இசை கேட்கும் செவிகளுடன், எழுத்துக்களை வாசிக்கும் இதயங்களுடன், காட்சிகளைக் காதலிக்கும் மனங்களுடன் கலைஞர்கள் காலந்தோறும் உயிர்த்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் கூடுதல் சிறப்பாக, கட்டிடக் கலைஞர்களும் காலம் கடந்து வாழ்கிறார்கள். “இக்கட்டிடங்களைக் கட்டியது யார்?” என்று கேட்டால், யாருடைய காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்வதைவிட, அக்கட்டிடங்களை வடிவமைத்த கலைஞர்களின் (Architect) பெயர்களையே மக்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.
நடந்து பார்க்கலாம் வாங்க!
பார்சிலோனாவில், கட்டலோனியன் கட்டிடக்கலை வல்லுநர் அந்தோனி கவுடி (Antoni Gaudi) வடிவமைத்த கட்டிடங்களைப் பார்க்க, வாக்கிங் டூர் (Walking Tour) முன்பதிவு செய்திருந்தேன். பொதுவாக, சுற்றுலா நிறுவனங்கள் வாகனத்தில்தானே பயணிகளை அழைத்துச் செல்வார்கள்! வாக்கிங் டூரில், சுற்றுலா வழிகாட்டி நடந்தே முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்வார். அரைநாள், ஒருநாள், ஓரிடம் அல்லது பல்வேறு இடங்கள் என பல வகைமைகள் இச்சுற்றுலாவில் உண்டு. சுற்றுலா வழிகாட்டி ஒலிவாங்கியில் பேசுவதால் எளிதில் கேட்க முடியும். சத்தம் அதிகம் இருக்கும் இடமென்றால், பயணிகள் ஒவ்வொருவருக்கும் சில சுற்றுலா நிறுவனங்கள் வாக்மேன் கொடுப்பது உண்டு.
ஐந்து தலைமுறைகள்
முன்பதிவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்குக் காலையில் சென்றேன். கூடுதலாக சிலர் அங்கே காத்திருந்தார்கள். எங்கள் தகவல்களைச் சரிபார்த்த வழிகாட்டி, ஒவ்வொருவருக்கும் வாக்மேன் கொடுத்தார். அருகிலிருந்த கோயிலுக்கு முன்னால் அழைத்துச் சென்று, “இக்கோயிலின் பெயர், சாக்ரதா ஃபெமிலியா (Sagrada Familia). அதாவது, திருக்குடும்பம். 140 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. இக்கோயில் கட்டுமானத்தை 5 தலைமுறைகள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பின்னந்தலை முதுகில் சாய கோபுரத்தின் உயரத்தைப் பார்த்தேன்; வியந்தேன். ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்தில் நின்று நிழற்படம் எடுங்கள். மொத்த கோயிலும் தெரியும்” என்றார். படமெடுத்தோம். தீவிர சோதனைக்குப் பிறகு கோயில் படியேறி ஒரு சுவருக்கு அருகில் நின்றோம்.
புதுமை நிகழ்த்திய கலைஞன்
“கட்டலோன் மாகாணத்தின் அரசியல் மற்றும் கல்வி மையம், பார்சிலோனா நகரம். இந்நகரின் அடையாளங்களுள் மிக முக்கியமானது, சாக்ரதா ஃபெமிலியா. 1882, மார்ச் 19ல் அடிக்கல் நாட்டிய கிறிஸ்தவ மறைமாவட்ட நிர்வாகம், 31 வயதான அந்தோனி கவுடியிடம் கோயில் கட்டும் பொறுப்பை வழங்கியது. வேறு பல கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே, இக்கோயிலையும் கட்டத் தொடங்கிய கவுடி, 1910 முதல் 1926-ல் தான் இறக்கும்வரை இக்கோயில் உருவாக்கத்தில் மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
அக்காலத்தில் சிறப்புற்றிருந்த, ‘கோதிக்’ கட்டிடக்கலையில் தூண்கள் அருகருகே பெரிதாக இருக்கும்; காற்றும் வெளிச்சமும் போதுமான அளவு கட்டிடத்துக்குள் கிடைக்காது. இதனால், காற்றும், வெளிச்சமும் கோயிலுக்குள் வரும்படி புதிய கட்டிட வடிவத்தை உருவாக்கினார் கவுடி.
வழக்கமாக, கோயில்கள் கட்டுவதற்கு மக்கள் நன்கொடை கொடுப்பார்கள். வேலை முடியும்வரை கட்டிடப் பகுதிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். திறப்புவிழா நாளில் மக்கள் பார்ப்பார்கள். ஆனால், ‘கோயில் கட்டுவதை மக்கள் பார்க்கட்டும். அதன் வளர்ச்சியை, கலைநுட்பத்தை ரசித்துப் பார்த்துவிட்டு மக்கள் நன்கொடை தரட்டும். அதை வைத்து தொடர்ந்து கட்டுவோம்’ என்றார் கவுடி. இன்றுவரையும் அப்படித்தான் கட்டுகிறார்கள்” என்று விவரித்த வழிகாட்டி, “ஒருநாள், கோயில் வழிபாட்டுக்கு நடந்து சென்றபோது, ட்ராம் வண்டியில் அடிபட்டு 75 வயது கவுடி இறந்துவிட்டார்” என்றார். அமைதியாக வழிகாட்டியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வழிகாட்டி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். “கவுடி இறந்த பிறகு அவரது சீடர் டோமினிக் (Domenec Sugranyes) கட்டிட வேலையை முன்னெடுத்தார். ஆனால், 1936-ல் உள்நாட்டு போர் நடந்தபோது கோயிலின் வரைபடங்கள், குறிப்புகள், தீக்கிரையாகின; பிளாஸ்டர் மாதிரிகள் (Plaster) நொறுக்கப்பட்டன. கவுடியின் அலுவலகத்தில் இருந்த மாதிரிகளையும் குறிப்புகளையும் தேடி எடுத்து, ஒழுங்கு செய்து, 1939-ல் மறுபடியும் கட்டத் தொடங்கினார்கள்” என்று சொல்விட்டு, “மேலே பாருங்கள்” என்றார். இயேசுவின் பிறப்பு மற்றும் அதையொட்டிய நிகழ்வுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருந்தன. “இதன் உச்சியில் மணிக்கூண்டு உள்ளது. பொதுவாக, ஒரு கட்டிடம் கட்டும்போது முழு கட்டிடத்துக்குமான அடித்தளம் அமைப்பதுதானே வழக்கம். ஆனால், இந்த ஒரு பகுதிக்கு மட்டும் அடித்தளம் அமைத்து, முழு கோபுரமும் எழுப்பினார் கவுடி. அவர் இறந்தபோது, இக்கோபுரம் மட்டும்தான் முழுமையாக முடிந்திருந்தது. எல்லா கோபுரங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை இதன் வழியாக கவுடி சொல்லிச் சொன்றுவிட்டார். இக்கோபுரத்தை புராதன சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது” என்றார்.
நவீன அருள்கூடம்
கோயிலுக்குள் நுழைந்தோம். நவீன வண்ணங்களும், கலை நுட்பங்களும் மிளிர்ந்தன. “நாம் ‘இயேசுவின் பிறப்பு கோபுரம்’ வழியாக நுழைந்தாலும் இது தலைவாசல் அல்ல” என்றார் வழிகாட்டி. எல்லாருமே வியப்புடன் பார்த்தோம். ஏனென்றால், இதுவே கோயில் முகப்புபோல பிரம்மாண்டமாக இருந்தது. “சிலுவை வடிவில் கோயில் அமைந்துள்ளது. சிலுவையில் குறுக்கு கம்பு இருக்கும்தானே! அதன் வலதுபக்கம் வழியாக நுழைந்துள்ளோம். இது கிழக்கு திசை. அப்படியே, கிழக்குச் சுவரில் உள்ள கண்ணாடிகளைப் பாருங்கள்” என்றார். பார்த்தோம். இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் ஜன்னல் கண்ணாடிகளாக இருந்தன. “கிழக்கில் சூரியன் உதிக்கும்போது, இக்கண்ணாடிகள் வழியாக மகிழ்ச்சியைக் குறிக்கும் வண்ணங்கள் கோயிலுக்குள் விழும்” என்றார்.
பிறகு, மேற்கு திசைக்கு அழைத்துச் சென்றார். கோயிலின் வெளிப்புறத்தில், இயேசுவை யூதாஸ் முத்தமிட்டு காட்டிக்கொடுப்பது உள்ளிட்ட, இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பினைக் குறிக்கும் சிலைகள் வெறுமையுடன் இருந்தன. சிலைகளின் வடிவமைப்பு, நவீன ஓவிய மாதிரியைக் கொண்டிருந்தன. மீண்டும் உள்ளே வந்து, மேற்கு திசையில் உள்ள கண்ணாடிகளைக் காட்டி, “இயேசு இறந்த துயரத்தைக் குறிப்பதற்காக, சூரியன் மறையும்போது இக்கண்ணாடியில் பட்டு சிவப்பு நிறத்தில் வெளிச்சம் விழும்” என்றார். கோயிலின் தலைவாசலுக்கு அழைத்துச் சென்று, ‘மகிமையின் காட்சிகள்’ - இயேசுவின் உயிர்ப்பு மற்றும் அதையொட்டிய நிகழ்வுகள் சிலைகளாக அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.
மறுபடியும் கோயிலுக்குள் சென்றோம். “மொத்தம் 18 கோபுரங்கள் இங்குள்ளன. இயேசுவின் சீடர்களைக் குறிக்க 12, இயேசுவின் வாழ்வை எழுதிய நற்செய்தியாளர்களைக் குறிக்க 4, மற்றும் மரியாளுக்கும், இயேசுவுக்கும் தனித்தனி கோபுரங்கள். கோயில் கட்டி முடியும்போது இயேசுவின் கோபுரம் 172 மீட்டர் உயரத்தில், உலகிலேயே உயரமான கோயில் கோபுரமாக இருக்கும்” என்றார் வழிகாட்டி.
மிலா வீடு
மதிய உணவுக்குப் பிறகு, பாசெய்க் தே கிராசியா தெருவுக்குச் சென்றோம். “1900-களில் இந்த வீதியில் வீடுகட்ட வசதியானவர்கள் பலரும் போட்டிபோட்டார்கள். பெரே மிலா மற்றும் ரோசர் செஜிமேன் தம்பதியினரும், 1,835 சதுர மீட்டர் இடம் வாங்கி, வீடு (Casa Mila) கட்டும் பொறுப்பை கவுடியிடம் கொடுத்தார்கள். வேலை நடக்கும்போதே கட்டிடத்தின் வடிவத்தைப் பல முறை மாற்றி, பல்வேறு நுட்பங்களைப் புகுத்தினார் கவுடி. பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த வீடு, 1984-ல் யுனெஸ்கோ புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட பிறகு, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது” என்றார்.
8 மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு தளமாக ஏறி, அறைகளின் அழகையும், பிரம்மாண்டத்தையும், மிலா தம்பதியினர் வாழ்ந்த செல்வ வளமிக்க வாழ்வையும் பார்த்தோம். இயற்கையான வெளிச்சம் கட்டிடம் முழுவதையும் அழகூட்டியது. மொட்டை மாடிக்குச் செல்ல 6 வழிகள் உள்ளன. படியேறிச் சென்றோம். கடைசியில் தலைக்கு மேலே உள்ள பகுதியை (Head room) மனித உருவமாகவே உருவாக்கியுள்ளார்; அதில் நான்கில் உடைந்த டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. புகைபோக்கிகளை மனித தலைபோல அமைத்துள்ளார்; காற்று போவதற்கான கோபுரங்களும் உள்ளன.
கவுடி வடிவமைத்த கட்டிடங்களுள் 7 கட்டிடங்கள், யுனெஸ்கோ புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டினை பார்த்த மகிழ்ச்சியில் அறைக்குத் திரும்பினேன்.
(பாதை விரியும்)
பெட்டிச் செய்தி:
மொழிப்போரும் சுயமரியாதையும்!
சாக்ரதா ஃபெமிலியாவிலிருந்து நகருக்குள் நடந்தபோது, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக மடிக்கப்பட்ட சிவப்பு நாடா போல, மஞ்சள் நாடா குத்தி சிலர் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். பல்வேறு கட்டிடங்களிலும் மஞ்சள் நாடா இருந்தது. ‘என்ன அர்த்தம்?’ என்று கேட்டேன்.
“நாம் ஸ்பெயினின் வடகிழக்கே நிற்கிறோம். இப்பகுதி கட்டலோனியா எனப்படுகிறது. கட்டலோனியாவின் தலைநகர் பார்சிலோனா. கட்டலோன் என்பது இவர்களின் மொழி. இவர்களுக்கென்று புகழ்மிக்க வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், கலை, பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீதம் இவர்களின் பங்களிப்புதான். ஆனால், ஸ்பெயின் அரசாங்கம், ஸ்பானிய மொழிக்கும், தலைநகரான மாட்ரிட் நகருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எல்லா திட்டங்களும் மாட்ரிட்டை மையப்படுத்தியே திட்டமிடப்படுகின்றன. தாங்கள் புறக்கணிக்கப்படுவதால், தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாகப் போராடுகிறார்கள். 2017-ல் வாக்கெடுப்பு நடத்தினார்கள். அந்நாளில், ஸ்பெயினின் விமானப்படையும், கடற்படையும் இந்நகரை, சொந்த மக்களைச் சுற்றி வளைத்திருந்தன. 90 விழுக்காட்டினர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும், ‘சட்டத்துக்கு புறம்பான வாக்கெடுப்பு’ என்று சொல்லி கட்டலோன் தலைவர்களைச் சிறையில் வைத்துள்ளது ஸ்பெயின். கட்டலோன் தனிநாடு கேட்டு, மஞ்சள் நாடா ஒட்டி அமைதியாக, தொடர்ந்து மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.