திண்டுக்கல்: மழை இல்லாததால் செடிகளில் பாதிப்பின்றி தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வரத்து அதிகரித்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி தற்போது பாதியாக குறைந்து ரூ.25-க்கு விற்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு பகுதிகளில் அதிக பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப் படுகிறது.
விளையும் தக்காளிகளை திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு நகரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த மாதம் இறுதி வரை தென்மேற்குப் பருவ மழையின் தொடக்கமாக சில நாட்கள் மழை பெய்தது. இதனால் தக்காளிச் செடிகளில் பாதிப்பு ஏற்பட்டு வரத்து குறைந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு மேல் விற்றது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து, கடந்த ஆண்டு போல் ஒரு கிலோ ரூ.100-ஐ எட்டும் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் பருவமழை அதிகம் பெய்யவில்லை. இதனால் செடிகளில் பாதிப்பின்றி விளைச்சல் அதிகரித்தது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தது.
இதன் விளைவாக கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு மேல் விற்ற நிலையில், தற்போது விலை குறைந்து விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு குறைந்த நிலையில், வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் விற்பனை யாகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், மழை பொழிவு அதிகரித்தால் மீண்டும் விலை அதிகரிக்கும் என்றனர்.