என்னத்த ஸ்மார்ட் சிட்டியோ..? - திருச்சி மத்திய பேருந்து நிலைய அவலம்


திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் சிலாப்கள் திறந்தும், உடைந்தும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள், நகரப் பேருந்துகள் என தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், மத்திய பேருந்து நிலையத்தில் உறையூர், ரங்கம் செல்லும் நகரப் பேருந்துகள் நிற்கும் இடத்தில் கழிவுநீர் வடிகாலின் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டு, அதன் மீது நடைபாதையும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

இந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அண்மையில் மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதற்கென சில இடங்களில் கான்கிரீட் தளம் பெயர்க்கப்பட்டும், சில இடங்களில் கால்வாய் சிலாப்களை திறந்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இவை சரிவர மூடப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளன.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திறந்து சுகாதாரமற்று
கிடக்கும் கழிவு நீர் கால்வாய்.
படங்கள் : ர.செல்வமுத்துகுமார்

மேலும், சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் சிலாப்கள் உடைந்து காணப்படுகின்றன. அத்துடன், நகரப் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஹோட்டல் கழிவுகளால் அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உறையூரைச் சேர்ந்த அன்புச்செல்வன் கூறியது: மத்திய பேருந்து நிலைய பகுதியில் நடைபாதையில் சாக்கடை மூடி திறந்தே கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது. அத்துடன், இந்த நடைபாதை மீது நடந்து செல்லும் பயணிகள் தவறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள்
நிற்கும் பகுதியில் திறந்தும், உடைந்தும் கிடக்கும்
கழிவுநீர் கால்வாய் சிலாப்கள்.

மேலும், சாக்கடை அருகேயும், சாக்கடைக் கழிவுகள் அருகேயும் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சாக்கடையில் மொய்க்கும் ஈ மற்றும் கொசுக்கள் உணவுப் பண்டங்கள் மீது உட்காருவதால் தொற்று நோய் அபாயமும் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதாக கூறும் மாநகராட்சி நிர்வாகம், மத்திய பேருந்து நிலைய பகுதியில் சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

x