அச்சிலிருந்து குரலாக... 10 லட்சம் பக்கங்களை மாற்றிய பார்வை மாற்றுத் திறன் ஆசிரியர்!


புதுக்கோட்டை: தமிழகத்தில் பார்வை குறைபாடு உடையோர் படிப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் அச்சு நூல்களில் உள்ள 10 லட்சம் பக்கங்களை மின்னூலாக மாற்றிக் கொடுத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பார்வை மாற்றுத் திறன் ஆசிரியர் பொன்.சக்திவேல். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கத்தக்குறிச்சி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர். அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக உள்ளார்.

முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள மற்றும் தேர்வுகளுக்கு தயாராகும் பார்வை குறைபாடுடையோருக்காக அச்சுப் புத்தகங்களை இலவசமாக மின்னூலாக மாற்றிக் கொடுத்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்கங்களை மின்னூலாக மாற்றிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பொன்.சக்திவேல் கூறியதாவது: 2019-ல் பி.எச்டி படிக்கும்போது நிறைய அச்சுப் புத்தகங்களை யாராவது வாசித்துக்காட்ட வேண்டிய சூழல் இருந்தது. அந்த அளவுக்கு யாரையும் நியமித்துக்கொள்ள முடியாததால் அப்போதே அச்சு புத்தகங்களை குரல் வடிவில் கேட்கும் மின்னூலாக்கும் பணியை தொடங்கினேன்.

அதன்படி, வாசிக்க வேண்டிய புத்தகங்கள் கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து, யுனிகோடு எழுத்து வடிவில் மின்னூலாக மாற்றம் செய்யப்படும். அதில், இருந்து எழுத்துகளை வாசிக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி படிப்பது எளிது. தேவைப்பட்டால் அதில் இருந்து பிரெய்லி எழுத்து வடிவிலும் மாற்றிக்கொள்ளலாம்.

அதன் அடிப்படையில், கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர், அரசு மற்றும் தனியாரில் பணிபுரிவோர், பொழுதுபோக்குக்காக புத்தகங்கள்படிப்போர் என பல தரப்பட்டோருக்கும் மின்னூல் மாற்றிக் கொடுத்து வருகிறேன்.

இதுவரை சுமார் 700 புத்தகங்களில் உள்ள சுமார் 10 லட்சம் பக்கங்களை மாற்றி உள்ளேன். தவிர, 36 பார்வை மாற்றுத் திறனாளிகள் சேர்ந்து விரல் மொழியர் நூல் திரட்டு எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிகமான புத்தகங்களை மாற்றுத் திறனாளிகளால் வாசிக்க முடிகிறது. தற்போதைய மானியக் கோரிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை நூலகத்திலும் மின்னூலாக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக அரசு அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

x