நவீன வேளாண் நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி: கோவையில் ஜூலை 11-ல் தொடக்கம்


கோவை: ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. மனிதர்களுக்கு வருவாய் ஈட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. ஆனால், உயிர் வாழத் தேவையான உணவை ஈட்ட விவசாயம் மட்டுமே உள்ளது.

விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய லாபத் தொகை கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், வேளாண் இடு பொருட்கள், விவசாய பயன்பாட்டுக்கான வாடகை இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. விவ சாயத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

அது தவிர, பல்வேறு தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், பண்ணைக் கருவிகள், சாகுபடி முறைகள் உள்ளிட்டவை குறித்து அறிய வேளாண் கண்காட்சிகளை நடத்துகின்றனர்.

அந்த வகையில் கோவை கொடிசியா அமைப்பின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘அக்ரி இன்டெக்ஸ்’ வேளாண் கண்காட்சி நவீன வேளாண் நடைமுறைகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் முக்கிய களமாக உள்ளது.

நடப்பாண்டுக்கான ‘அக்ரி இன்டெக்ஸ் 2024’ கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் 11-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

புதுடெல்லியில் உள்ள வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலத்துறை, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், அகில இந்திய வேளாண் இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

கோவையில் கடந்த ஆண்டு நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில்
இடம் பெற்றிருந்த அரங்குகள். (கோப்பு படம்)

இந்தக் கண்காட்சியின் சிறப்புகள் குறித்து, ‘அக்ரி இன்டெக்ஸ் 2024’ தலைவர் தினேஷ்குமார் கூறியதாவது: கண்காட்சியில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள், நீர் பாசன முறைகள், தானியங்கிகள், நுண்ணூட்டம் மற்றும் பயிர் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை, வேலிகள் மற்றும் நிழல் வலைகள் இடுதல், பசுமைக் குடில்கள், மாடித் தோட்டம், தூவல் பாசனம், நிதி நிறுவனங்கள், எடைக்கருவிகள் மற்றும் துறை சார்ந்த சோதனைக்கான கருவிகள், நீர் கரைசல், நிலம் மூடும் திரைகள், செடி வளர்ப்பு பைகள், எரு, உரங்கள், பூச்சிக் கொல்லிகள், விதைகள், நாற்றுப் பண்ணை மற்றும் நிலச்சீரமைப்பு முறைகள், விவசாயத்துக்கான டிராக்டர்கள் , தோட்டக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

முக்கியமாக, குறைந்த இடத்தில் செடிகளை வளர்க்கக்கூடிய ‘ஹைட்ரோ போனிக்ஸ்’ தொழில்நுட்பம் குறித்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் நெருக்கடி மிகுந்த இந்த நகரப் பகுதியில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் காய்கறிகளை வளர்க்க உதவும்.

அதேபோல், பல்வேறு பயன்பாடுகளை தரும் ட்ரோன்கள், வேளாண் பயன்பாட்டுக்கான மின்சார வாகனங்கள், வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும் வேளாண் இயந்திரங்கள், வேளாண் துறைக்கான இணையவழி பயன்பாடுகள் குறித்த புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் முக்கியமானதாக மின்சாரத்தில் இயங்கும் பவர் டில்லர் மற்றும் வீடர் ஆகியவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

கோவையில் கடந்த ஆண்டு நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில்
இடம் பெற்றிருந்த அரங்குகள். (கோப்பு படம்)

வேளாண் திட்டங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான வாய்ப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் ஊடு பயிரிடுதல் ஆகியவை குறித்த கருத்தரங்குகளும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் நடைபெற உள்ளன. முக்கியமாக, நம்நாட்டு இன காளைகளும், பசுக்களும் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படும்.

வேளாண் இயந்திரங்கள், நீர் பாசன தானியங்கி முறைகள், வேளாண் பயன்பாட்டுக்கான ட்ரோன்கள் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கமும் நடைபெற உள்ளது. உள்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது தயாரிப்புகளான விவசாய பயன்பாட்டு இயந்திரங்கள், நவீன தொழில்நுட்ப கருவிகளை காட்சிப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

x