பொலிவிழந்த சென்னை பெரியமேடு ‘மை லேடீஸ்’ பூங்காவில் தெருநாய்களின் அச்சுறுத்தல்


பொதுமக்கள் அமரும் இருக்கைகளில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் தெருநாய்கள்.

சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் சாலையில் செல்லும்இரு சக்கர வாகன ஓட்டிகளையும், நடைபாதையில் செல்லும் பாதசாரிகளையும் துரத்திச் சென்று அச்சுறுத்தி வந்த தெருநாய்கள், தற்போது கடித்து குதறி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் இவற்றால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பெரியமேடு, ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள மாநகராட்சியின் ‘மை லேடீஸ்’ பூங்காவிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் கீழ் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பெரியமேட்டில் அமைந்துள்ள ‘மை லேடீஸ்’ பூங்காவானது 17,552 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். இந்த பூங்காவுக்கு தினந்தோறும் குழந்தைகள் முதல் மகளிர், முதியோர் வரை 500-க்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர்.

நடைபயிற்சிக்கான நடைபாதை நீண்ட தூரம் இருப்பதாலும், இயற்கை எழில் மிகுந்து பூங்கா காட்சியளிப்பதாலும், அப்பகுதியை சுற்றியுள்ளமக்கள் பெரும்பாலும் இந்த பூங்காவுக்கு வந்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் பூங்காவின் நுழைவு வாயில் தொடங்கி நடைபாதை முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. நடைபாதையை ஒட்டியுள்ள மரங்களின் நிழல்களில் படுத்து உறங்கும் நாய்கள், ஓய்வெடுக்க பயன்படுத்தப்படும் இருக்கைகளையும் விட்டுவைப்பதில்லை. இதுதவிர காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளவரும் மக்களை பின் தொடர்வதும், சில நேரங்களில் துரத்தி விளையாடுவதும் உண்டு.

பெரியமேடு மை லேடீஸ் பூங்காவில் பொலிவிழந்த நிலையில் கழிவுநீர்
தேங்கியவாறு காட்சியளிக்கும் செயற்கை நீரூற்றுகள்.

அதேபோல இங்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வெகுவாககவர்ந்த செயற்கை நீரூற்றுகள் ஓராண்டாக பழுதடைந்து உள்ளன. அதில் பல மாதங்களாக தேங்கிக் கிடக்கும் தண்ணீர் அகற்றப்படாமல் பாசி படர்ந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.

பொலிவிழந்து காணப்படும் 4 செயற்கை நீருற்றுகளையும் பழையபடி சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெரியமேடு பகுதியை சேர்ந்த கணேஷ் கூறியதாவது: ‘மை லேடீஸ்’ பூங்காவின் எந்த பகுதிக்கு சென்றாலும், நாய்களை காணமுடிகிறது.

நடைபாதைகள், ஓய்வெடுக்கும் இருக்கைகள், மரங்களுக்கு அடியில் என அனைத்து இடங்களையும் தெருநாய்கள் ஆக்கிரமித்துள்ளன. சில நேரங்களில் அவை அமைதியாக இருப்பதாக தோன்றினாலும், நடைபாதையில் செல்லும்போது பின் தொடர்கின்றதா என்ற அச்சம் எழுவதை தடுக்க முடிவதில்லை.

அதேபோல சில சமயங்களில் அங்குள்ள நாய்களுக்கு இடையே சண்டையிட்டு கொள்வதையும் பார்க்க முடியும். இது குழந்தைகளிடையேயும், பெண்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பூங்கா சமீபகாலமாக போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து வருகிறது. இதன் நுழைவுவாயில் முதல் பூங்காவின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் நிறைந்துள்ளன.

இங்குள்ள மரம், செடி கொடிகளின் உதிர்ந்த இலைகள் அகற்றப்படாமல் காட்சியளிக்கின்றன. நடைபாதை குறுக்கே வளர்ந்துள்ள மரக்கிளைகள் வெட்டப்படாததால் நடைபயிற்சிக்கு இடையூறாகவும் இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துவதுடன், நீரூற்றை சரி செய்ய வேண்டும். முறையாக பூங்காவை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி கூறும்போது, “தெருநாய்களுக்கு உணவளிக்கும் பழக்கம் பெரும்பான்மையான மக்களிடையே இருந்து வருகிறது. பூங்காவின் உள்ளே சுற்றித்திரியும் நாய்களுக்கு தொடர்ந்து உணவு அளிக்கப்படுவதால் அவை அத்துமீறி நுழைந்து விடுகின்றன.

இதுதொடர்பாக வாரத்துக்கு ஒரு முறை மண்டலத்துக்குட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் ஆய்வு செய்து தெரு நாய்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல செயற்கை நீரூற்று செயல்படாமல் இருந்து வருவது குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சினையை விரைந்துகண்டறிந்து சரிசெய்யுமாறும் கூறப்பட்டுள்ளது” என்றார்.

x