சித்ரா: என்றென்றும் சிறகடிக்கும் சின்னக்குயில்!


பாடல்களுக்கு வயது ஏற ஏற, மவுசு கூடிக்கொண்டே போகும் என்பார்கள். இது பாடுவோருக்கும் பொருந்தும். இரண்டரை மணி நேரம் தரக்கூடிய தாக்கத்தையோ அல்லது குதூகலத்தையோ நான்கு நிமிடப் பாடல் நமக்குத் தந்துவிடுகிறது. அந்தப் பாடகரோ பாடகியோ படத்தைக் கடந்து, படத்தின் கதாபாத்திர சூழல்களையெல்லாம் கடந்து, நம்முள்ளே தனியிடம் பிடித்து அமர்ந்திருப்பார்கள். குரல் செய்யும் செப்படி வித்தை இது. அப்படியாக, குரல் வழியாக நமக்குள் குதூகலத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிற பாடகியாக இன்றளவும் வலம் வருகிறார் பின்னணிப் பாடகி சித்ரா!

கேரளம்தான் பூர்விகம். மலையாளம்தான் தாய்மொழி. இளம் வயதிலிருந்தே முறைப்படி சங்கீதம் பயின்றவர். தேசிய அளவிலான கல்வி உதவித் தொகையைப் பெற்று இளங்கலைப் படிப்பையும் முதுகலைப் படிப்பையும் படித்தவர்.

படித்துக்கொண்டிருக்கும்போதே, மலையாளப் படங்களில் (1979-ம் ஆண்டில்) பாடினார் சித்ரா. எண்பதுகளில் பாடல்கள் நிறையவே கிடைத்தன. அந்தச் சமயத்தில், கே.ஜே.யேசுதாஸுடன் மேடைகளிலும் பாடி வந்தார். சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்ட யேசுதாஸ், சென்னைக்கு வரச் சொன்னார். அந்த இசையமைப்பாளரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இசையமைப்பாளரும் சித்ராவைப் பாடச் சொல்லிக் கேட்டார். குரல் பிடித்துப்போனது. குரலின் குழைவும் தமிழ் உச்சரிப்பும் பிடித்துப்போனது. அன்றைக்கே பாடல் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக இன்னொரு பாடலும் கொடுத்து பதிவு செய்யப்பட்டது.

அந்த இசையமைப்பாளர்... இசைஞானி இளையராஜா. ’நீதானா அந்தக் குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தானே பூத்தது’ எனும் அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பாட்டிக்கும் பேத்திக்குமான உறவைச் சொன்ன ‘பூவே பூச்சூடவா’ படத்தில், ‘சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதா’ என்ற பாடலைக் கேட்டவர்கள், ‘யாரிவர்’ என்று கேட்டுக்கொண்டார்கள். ‘நிலா’ப் பாட்டு பாடிய எஸ்பிபி-க்கு பின்னொரு காலத்தில் ‘பாடும் நிலா’ எனும் அடைமொழி கொடுக்கப்பட்டது போல, நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய பிறகு, ‘சின்னக்குயில்’ என்கிற அடைமொழி கொடுத்தார்கள் ரசிகர்கள். ‘சின்னக்குயில்’ சித்ரா என்று கொண்டாடப்பட்டார்; இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.

டிஎம்எஸ். என்றால் சுசீலா, எஸ்பிபி என்றால் ஜானகி என்பது போல், மனோ என்றால் சித்ரா என்கிற ஜோடி இசையுலகில் உருவானது. எவருடன் பாடினாலும் தனக்கென தனித்த அடையாளத்துடனும் தமிழ் உச்சரிப்பு பிசகாத வசீகரக் குரலுடனும் ஈர்த்தார் சித்ரா.

‘சிந்துபைரவி’யின் ‘பாடறியேன் படிப்பறியேன்’ பாட்டு. பாட முடியாத சூழ்நிலை. பரீட்சை. போயாக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். ‘பரீட்சை எப்ப வேணா எழுதிக்கலாம்; இந்தப் பாட்டைப் பாடு. உனக்கு விருது காத்திருக்கு’ என்று இளையராஜாவும் ஒற்றைக்காலில் நின்றபடி, அவரைப் பாடச் சொல்கிறார். சித்ரா பாடினார். அந்தப் பாட்டு, செம ஹிட்டடித்தது. இளையராஜா சொன்னது போல் விருதும் கிடைத்தது.

‘நானொரு சிந்து காவடிச் சிந்து’ என்றொரு பாடல் (சிந்து பைரவி), ’என்னை மறந்தபொழுதும் நான் உன்னை மறக்கவில்லையே’ (பாண்டித்துரை) என்றொரு பாட்டு. ’குடகுமலைக் காற்றில் ஒரு பாட்டு கேக்குதா’ என்று ’கரகாட்டக்காரன்’ பாடல்... என சித்ராவின் குரலில் ஒலித்த கானங்களை இன்றும் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.

’ஒன் மனசுல பாட்டுத்தான் இருக்குது; என் மனசதைக் கேட்டுத்தான் தவிக்குது’ என்றொரு பாடல், ‘உன் பார்வையில் ஓராயிரம்’ எனும் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ பாட்டு, ’கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா’, ‘என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’, ’இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை’, ’சொல்லாமலே யார் பார்த்தது’, ’கண்ணாளனே’... என்று எத்தனையெத்தனையோ பாடல்கள். ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள். சித்ரா பாடிய ’ஒவ்வொரு பூக்களுமே’ நம்பிக்கைக்கான தேசியகீதமாகவே ஆகிப்போனது. விருதும் கிடைத்தது.

இசைக்கு மொழியில்லை என்பார்கள். அதேபோல், பாடகர்களுக்கும் மொழி அவசியமில்லை போலும். இசையாலேயே மொழி கற்றுக்கொள்ளும் விந்தை இருக்கிறதோ என்னவோ. ஏகப்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறார் சித்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிகப் பாடல்களைப் பாடிய பாடகி சித்ராவாகத்தான் இருக்கும்.

மாநில அரசு விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். ஃபிலிம்பேர் விருதுகளுக்கும் சொந்தக்காரராகத் திகழ்ந்திருக்கிறார். தேசிய விருதுகளை அதிக முறை பெற்ற பாடகியாக சாதனை படைத்திருக்கிறார். அத்தனைக்குப் பின்னரும் அதே நாணச் சிரிப்பும் அமைதியுமாகத் திகழும் சித்ரா, இப்போதும் எப்போதும் சின்னக்குயில்தான்!

x