2022 நவம்பர் 8-ல் உலகின் மக்கள்தொகை 8 பில்லியனாகப் போகிறது. அதாவது இந்தப் பூமிப் பந்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 800 கோடியாக உயரப்போகிறது. 2030-ம் ஆண்டில் இது 850 கோடியாகியிருக்கும்; 2050-ல் 970 கோடியாகவும், 2100-ல் 1040 கோடியாகவும் பல்கிப் பெருகியிருக்கும். ஐநா வெளியிட்ட உலக மக்கள்தொகை கணிப்புகள் (டபிள்யூபிபி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தகவல்களுடன் இந்தியர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய இன்னொரு செய்தியும் அடங்கும்.
இன்றைக்கு மக்கள்தொகை அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, 2023-ல் இந்தியா அந்த இடத்தைப் பிடிக்கும் என்பதுதான் அந்தச் செய்தி. இந்த இடத்தை அடைய குறைந்தபட்சம் 4 ஆண்டுகளாகும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே அதை நோக்கி நகர்கிறது இந்தியா. இதன் சாதக பாதகங்கள் என்னென்ன? பார்க்கலாம்!
2050-ல் 166 கோடி
உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11-ல், ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (டிஇஎஸ்ஏ) மற்றும் மக்கள்தொகைப் பிரிவு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி 2022-ல் இந்தியாவின் மக்கள்தொகை 1,412 பில்லியன் (141.2 கோடி), சீனாவின் மக்கள்தொகை 1,426 பில்லியன் (142.6 கோடி). எனினும், அடுத்த ஆண்டில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும். 2050-ம் ஆண்டுவாக்கில் 166 கோடியாக இந்தியாவின் மக்கள்தொகை உயர்ந்திருக்கும். அப்போது சீனாவின் மக்கள்தொகை 131.7 கோடியாக இருக்கும் என்கிறது இந்த அறிக்கை.
உலக அளவில் மக்கள்தொகை உயர்ந்து வந்தாலும், அதன் வளர்ச்சி வேகம் குறைந்திருக்கிறது. 2020-ல் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகியிருக்கிறது. 1950-க்குப் பிறகு முதன்முறையாக இது சாத்தியமாகியிருக்கிறது. ஒரு நாட்டின் மொத்த பிறப்பு விகிதம் (Total fertility rate – அதாவது ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி விகிதம்) 2.1 என இருந்தால், அந்நாடு மக்கள்தொகை ஸ்திரத்தன்மையைக் கொண்டிருக்கும் என்கிறது யூஎன்பிடி. இந்தியாவின் மொத்த பிறப்பு விகிதம் அதற்கும் குறைவு (2 சதவீதம்) என்கிறது சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு. இந்த விகிதம் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடரும்பட்சத்தில் இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்பும் கட்டுக்குள் இருக்கும். எனினும், ஐநாவின் கணிப்பைப் பார்க்கும்போது விஷயம் இன்னும் சிக்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.
ஐநாவின் மக்கள்தொகை கணிப்பு அறிக்கைகள் நம்பகமானவைதான். அதேசமயம், 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் 2019-ல் தலைமைப் பதிவாளர் வெளியிட்ட கணிப்பின்படி, 2023-ல் இந்தியாவின் மக்கள்தொகை, டபிள்யூபிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதைவிட குறைவுதான். அதேசமயம், எப்படிப் பார்த்தாலும் சீனாவை ஓரிரு ஆண்டுகளில் இந்தியா முந்திவிடும் என்பதுதான் யாராலும் மறுக்க முடியாத உண்மை.
ஒப்பீடு சரியா?
மக்கள்தொகை அதிகரிப்பு என்பது ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் தொடங்கி, கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்துகொள்வதில் பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடியது. அதேசமயம், அதிக மக்கள்தொகை என்பது மனிதவளத்தின் அபார வளர்ச்சிக்கான அடையாளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
ஒருபுறம் மக்கள்தொகையைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது சீனா. மறுபுறம், மக்கள்தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ‘ஒரு குழந்தை’ திட்டத்தை அமல்படுத்தியது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக, அந்தத் திட்டத்தை மிகவும் கறாராக அமல்படுத்தியிருந்தது. ஒருகட்டத்தில் அதில் வெற்றி கிடைத்ததும் அதில் தளர்வை ஏற்படுத்தி, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என 2016-ல் சீன அரசு அறிவித்தது. இதன் பலனாக, சீனாவின் பிறப்பு விகிதம் எதிர்பார்த்ததைவிட குறைந்திருக்கிறது (1.16 சதவீதம்).
முன்பே சொன்னது போல், மிகவும் கடுமையான முறையில்தான் இதைச் சாதித்திருக்கிறது சீனா. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தில் இந்தியா அத்தனைக் கடுமை காட்டவில்லை. எனவே, இவ்விஷயத்தில் இந்தியாவையும் சீனாவையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து அளவிட முடியாது. 2020-லேயே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சீனா நடத்திவிட்டது. இந்தியாவில் 2021-லேயே கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் இந்த ஒப்புமையைச் செய்வது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...
அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனும் நிலையை அடையும் இந்தியா, அதை ஒரு தகுதியாக வைத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக முடியும் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. மக்கள்தொகை குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஐநா மக்கள்தொகைப் பிரிவின் இயக்குநர் ஜான் வில்மோத்தும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினராக வேண்டும் என இந்தியா பல ஆண்டுகளாக முயற்சித்துவருகிறது. கவுன்சில் சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் கோரிவருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முக்கியத்துவம் பெற்றவை எனும் அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றன. எனவே, மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவுக்கு அது சாத்தியமாகுமா என்பது விவாதத்துக்குரியது.
வீணாகும் மனித வளம்
இன்றைய நிலை நீடித்தால் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் 0-14 வயதினர், 15-24 வயதினரின் எண்ணிக்கை குறையும். 25-64 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது வேலை தேடும் வயதினரும், வயோதிகத்தால் நோய்மையடைந்து மருத்துவ வசதிகளை நாடும் வயதினரும் இந்தியாவில் அதிகரித்திருப்பார்கள். முதல் தரப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும், இரண்டாவது தரப்பினருக்கு சுகாதார வசதிகளையும் அதிகரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
அடுத்த 25 ஆண்டுகளில், வேலை செய்யும் வயதுடையவர்களில் உலக அளவில் ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பார் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது (அந்தக் காலகட்டத்தில் சீனாவிலும் முதியோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும்). எனினும், இந்தியாவின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதமா என்பது வேறு விஷயம். அந்த அளவுக்குப் பணித்திறன் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்களா என்பதும் விவாதத்துக்குரிய விஷயம்.
இதுதொடர்பாகக் கிடைக்கும் பல்வேறு புள்ளிவிவரங்கள், இந்தியாவின் நிலைமை சிலாக்கியமாக இல்லை என்பதையே உணர்த்துகின்றன. இந்தியாவில் 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், வேலை செய்யும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 11.5 கோடியாக உயர்ந்தது. ஆனால், தொழிலாளர்களின் எண்ணிக்கை 77 லட்சம் மட்டுமே அதிகரித்திருந்தது. இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் உரிய கல்வி, வேலைவாய்ப்பு, பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகள் அவசியம். அதிகரிக்கும் மக்கள்தொகையைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க காத்திரமான திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையும் முக்கியம்.
கசக்கும் உண்மைகள்
இவ்விஷயத்தில் சீனாவுடன் ஒப்பிட்டாலே, இந்தியாவின் நிலை பலவீனமாக இருப்பதை உணர முடியும். சீனாவின் தொழிலாளர்களில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 26 சதவீதம், இந்தியாவில் அது 5 சதவீதம் மட்டுமே. அதேபோல், உடனடியாக டிஜிட்டல் பயிற்சிக்காக 2.73 கோடி இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய வசதிகள் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 2017 நிலவரப்படி, பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பு வெறும் 28.5 சதவீதம்தான். பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கல்வி, பாலினச் சமத்துவம் ஆகிய விஷயங்களில் இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது.
இதோ சமீபத்தில் வெளியாகியிருக்கும் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டெண் பட்டியலில், மொத்தம் உள்ள 146 நாடுகளில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இடம் 135. பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்தப் பட்டியலில் வங்கதேசம் (71), நேபாளம் (96), இலங்கை (110), மாலத்தீவு (117), பூட்டான் (126) என நமது அண்டை நாடுகள் பல நம்மைவிட நல்ல நிலையில்தான் இருக்கின்றன.
அதுமட்டுமல்ல, மக்கள்தொகை அதிகம் கொண்ட 10 நாடுகளில், வளர்ச்சி அறிகுறிகளின் அடிப்படையில் இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது 8-வது இடம்தான். 9-வது இடத்தில் பாகிஸ்தானும், 10-வது இடத்தில் நைஜீரியாவும் உள்ளன. இதில் வங்கதேசம் சொல்லிக்கொள்ளும் விதத்தில் முன்னேறியிருக்கிறது. கடந்த அக்டோபரில் வெளியான உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில், 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தைப் பெற்றது.
மக்கள்தொகை அதிகரிப்பின் விளைவாக, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். புள்ளிவிவரங்கள், மதிப்பீடுகள், எதிர்பார்ப்புகள், கணிப்புகள் ஆகியவற்றுடன் தார்மிக விழுமியங்களையும் தர்க்கங்களையும் பொருத்திப் பார்க்கும்போது, அதிகரிக்கும் மனிதவளத்தை வைத்து நாட்டை முன்னேற்ற இன்னும் நிறைய திட்டங்கள் தேவை என்றே அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது!