ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தை உணராமல் தொட்டிப்பாலத்தில் நட(ன)மாடும் இளைஞர்கள்!


கூடலூர் அருகே தொட்டிப் பாலத்தின் மேல் ஆபத்தான முறையில் நடந்து வரும் இளைஞரை படம் பிடிக்கும் அவரது நண்பர்கள்.

கூடலூர்: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக கூடலூர் தொட்டிப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறி ஆபத்தான முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் போடி வட்டத்தில் முல்லை பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெறாத பகுதிகளுக்கு 18-ம் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக பெரியாறு அணையின் தலைமதகு பகுதியான லோயர்கேம்ப் அருகே இருந்து கூடலூர், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி வழியாக கூவலிங்கம் ஆறு வரை 55 கி.மீ. தூரம் கால்வாய் வழியே தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது. இக்கால்வாய் பள்ளமான பல இடங்களை கடந்து செல்வதால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டிப் பாலம் அமைத்து நீர் கொண்டு செல்லப்படுகிறது.

முதல் தொட்டிப்பாலம் கூடலூர் அருகே தம்மனம்பட்டி பகுதியில் 24 தூண்களுடன் 120 அடி நீளம், 60 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் நீளமான தொட்டிப் பாலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பலரும் இதை காண வருகின்றனர். ஆனால் ஆபத்தான இடம் என்பதால் போலீஸார் இங்கு வர தடை விதித்துள்ளனர்.

இருப்பினும் தடையை மீறி பலரும் தொட்டிப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஏறுகின்றனர். வீடியோ மற்றும் புகைப்படமும் எடுத்து வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக சில மணி நேரம் செலவிட்டு நடனமாடுவது, நடிப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகும். தற்போது குறைவாக நீர் வருவதால் பலரும் வருவதில்லை. இருப்பினும் சிலர் புகைப்படம், வீடியோ எடுக்க வருகின்றனர். ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

x