பாரிஸ், ஒளி நகரம். அரசுக் கட்டிடங்கள், பாலங்கள், மற்றும் நினைவிடங்களில் விளக்குகள் இரவு முழுவதும் ஒளிர்கின்றன. ஈபிள் கோபுரத்தில் மட்டும் 20 ஆயிரம் விளக்குகள். நகரில் பூத்த நட்சத்திரங்களை வானுலக விழிகள் ரசிக்கின்றன. விழிகளைத் திறந்துகொண்டே மனித இனம் தூங்குகிறதோ என மிரள்கின்றன பறவைகள். மின்னி எரியும் விளக்குகள் உருளும் விழிகளை நினைவுபடுத்துகின்றன.
பாரிஸ், காதல் நகரமும்கூட. உள்ளத்தில் உதித்த காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தவும், உள்ளம் இணைந்த காதலை மோதிரம் மாற்றி உறுதிப்படுத்தவும் பாரிஸ் வருகிறார்கள் காதலர்கள். பால் நிலா கண்டு காதலித்தவர்கள் தேநிலா காணவும் பாரிஸைத் தேர்வு செய்கிறார்கள்.
கிரேவின் மெழுகு அருங்காட்சியகம்
ஒளியில் தவித்த இரவை இமைகளுக்குள் அடைத்து உறங்கினேன். கண் விழித்த எனக்கு பகலைக் காட்டிவிட்டு கலைந்தது இரவு. காலை உணவுக்குப் பிறகு, 1882-ல் தொடங்கப்பட்ட, கிரேவின் மெழுகு அருங்காட்சியகம் (Grevin wax Museum) சென்றோம். ஐரோப்பாவின் பழமையான மெழுகு அருங்காட்சியகம் இது. நுழைவுச்சீட்டு வாங்கி, படியேறி அடுத்த தளத்துக்குச் சென்றதும் விளக்குகள் அணைக்கப்பட்டன. தலைக்கு மேலே பலவண்ண (Kaleidoscope) காணொலிக் காட்சிகள் அரங்கேறின. 20-ம் நூற்றாண்டின் சில முக்கிய நிகழ்வுகளையும், பிரான்ஸ் நாட்டின் மத்திய காலத்திலிருந்து தற்போது வரையிலான வரலாறையும் அறிந்தேன்.
அருங்காட்சியகத்தின் ஒவ்வோர் அறையும், தளமும் யாவரையும் ஈர்க்கும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அரங்கில், மது பரிமாறும் காட்சி உள்ளது. மது ருசிக்கும் வாடிக்கையாளர்கள் நடன மாதுவை ரசிக்கிறார்கள். சிற்றுண்டி கடை ஒன்றில் சிறுமி ஒயிலாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அமர்ந்து நிழற்படம் எடுத்தேன். படப்பிடிப்பு தளம், ஐன்ஸ்டைன், நீல் ஆம்ஸ்ட்ராங், வானியல் அறிஞர்கள், அரசர்கள் இளவரசர்கள் மற்றும் உயர்குடி மக்கள், கடற் பயணங்கள், குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்கள், கார்ட்டூன் நாயகர்கள், சமையலறையும் சமையல் கலைஞர்களும், ஆயுதங்களும் கேடயங்களும் தாங்கிய போர் வீரர்கள், இசைக் குழுக்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. மல்யுத்தம், நீச்சல், கூடைப்பந்து, பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுக்கள், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிலியான் எம்பாம்பே லோத்தன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், ஆஞ்சலா மெர்க்கல், புதின், ராணி எலிசபெத், திருத்தந்தை பிரான்சிஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் சிலைகள் இருக்கின்றன.
அரசியல்வாதி, மருத்துவர், ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் எனும் பல்வேறு அடையாளங்களுடன் வாழ்ந்தவர் பிரான்ஸ் நாட்டின் மரட். தோல் வியாதியில் இருந்து சுகம்பெற வழக்கம்போல மருத்துவக் குளியல் எடுத்துக்கொண்டிருந்த இவரை, 1793 ஜுலை 13-ல் சார்லெட் கொடி கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலை செய்ததும், நீதி விசாரணைக்கு முன்பாக சார்லட் கொடி நிற்பதும் மெழுகுச் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாரா வரவேற்பு
ஒரு காட்சியைக் கற்பனை செய்யுங்களேன். விமான நிலையம். மிக முக்கியமான தலைவருக்காக எல்லாரும் காத்திருக்கிறோம். முகத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது. நிலையில்லாமல் தலையை இங்கும் அங்கும் அசைத்து பார்வையை வீசித் தேடுகிறோம். அந்நேரம், தலைவர் வருகிறார், உடனே, உள்ளம் மகிழ்ந்து கண்கள் விரிய கை தட்டுகிறோம். உதடுகள் புன்னகை பூச்சொரிய, வருகிறவரின் அழகு, ஆடை, நடை, கையில் வைத்திருக்கிற பொருள், அவரின் கடந்தகால சாதனை என எதையாவது அருகில் உள்ளவருடன் சொல்லிக்கொண்டே வரவேற்கிறோம்.
அந்நேரத்தில், நம் ஒவ்வாருவரின் முகபாவமும், சைகையும், புன்னகையும், நளினமும் நிச்சயம் வேறுபடும்தானே! அப்படி ஓர் அறை அருங்காட்சியகத்தில் உள்ளது. நாம் அனைவரும் மெழுகுச் சிலைகளைப் பார்த்துக்கொண்டே வரும்போது, நம்மை எதிர்பார்த்து பலரும் நிற்பது போலவும், நாம் வந்தவுடன் உற்சாகமாகக் கைதட்டி வரவேற்பது போலவும் கடைசி அறை உள்ளது.
ஈபிள் கோபுரம்
மாலையில் ஈபிள் கோபுரம் பார்க்கச் சென்றோம். தூரத்தில் நின்று நிழற்படம் எடுத்தோம். அப்போது ஒரு இனிமையான காட்சி. தான் நேசித்த பெண்ணுக்கு முன்பாகக் காதலர் ஒருவர் திடீரென மண்டியிட்டார்; காதலை முன்வைத்தார். நண்பர்கள் கைதட்ட, மலர் தூவ, நீர் திரையிட்ட விழிகளுடன் அப்பெண் காதலை ஏற்றுக்கொண்டார். திரைப்படங்களில் பார்த்த காட்சியை முதல் முறையாக நேரில் பார்த்தேன்.
கோபுரத்தின் அருகில் சென்றோம். நிமிர்ந்து பார்த்தேன். பிரமித்தேன். பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவும், நாட்டின் கட்டிடக் கலையை உலகுக்குக் காட்டவும் திட்டமிட்ட பிரான்ஸ் அரசு, ‘சர்வதேச கண்காட்சி-1889’ நடத்தியது. கண்காட்சிக்கான நினைவுச் சின்னம் எழுப்ப போட்டி அறிவித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகள் போட்டிக்கு வந்தன. அதில், பாலம் கட்டுவதில் புகழ் பெற்றிருந்த குஸ்தாவ் ஈபிள் என்னும் கட்டிடப் பொறியாளரின், ‘ஈபிள் கோபுர மாதிரி’ தேர்வானது.
125 மீட்டர் சதுரத்தில், பூமிக்கு மேலே 5 மீட்டர் உயர அடித்தளத்தில், 300 மீட்டர் உயரக் கோபுரம் நிற்கிறது. உச்சியில் அமைந்துள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி கோபுரங்களையும் சேர்த்தால், 324 மீட்டர் உயரம். குறைந்த பணியாளர்களுடன், காற்று புகக்கூடிய வகையில், எடை குறைவாக அதே நேரத்தில் வலுவாக இரண்டு ஆண்டுகளில் (1887-1889) கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 1889 மே 15-ல் திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், கண்காட்சியின் நுழைவாயிலாகவும் திகழ்ந்தது.
கோபுரத்தில் 3 தளங்கள் உள்ளன. மூன்றிலுமே மக்களுக்கு அனுமதி உண்டு. 2-ம் தளம் வரை மின்தூக்கி வழியாகவும், படியில் நடந்தும் செல்லலாம். 3-வது தளத்துக்கு மின்தூக்கி மட்டுமே. அதற்கு, 2-ம் தளத்திலிருந்து, மற்றொரு மின்தூக்கிக்கு மாற வேண்டும். முதல் தளத்தில்: சிறு திரையரங்கம், உணவகம், மற்றும் கடைகள் இருக்கின்றன. கோபுரம் குறித்த தகவல்கள் படங்கள், காணொலிகள் உண்டு. இரண்டாவது தளத்தில்: உணவகம், கடைகள், கோபுரத்தின் வரலாறு சொல்லும் கண்காட்சி உள்ளது. கண்ணாடி பெட்டிக்குள் நின்று, செங்குத்தான கோபுரத்துக்குள் சென்றால், 3-வது தளத்தில் இறங்கி ஜன்னல் கண்ணாடி வழியாக நகரின் அழகை ரசிக்கலாம்.
கண்காணிப்பு கேமராவுக்கு வெளியே!
கோபுரத்துக்குள் செல்ல, நாங்கள் நீண்ட வரிசையில் நின்றபோது மேகம் முகம் கழுவத் தொடங்கியது. சிதறிய துளிகளை ரசித்தோம். சிறிது நேரத்தில், குளிக்கத் தொடங்கியது மேகம். நனையாமல் இருக்க, அருகில் இருந்த சிறிய கடைக்குள் சென்றோம். பயங்கரக் கூட்டம். எல்லா திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. பொருட்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தேன். அருகில் நின்ற ஒருவர் அவருக்குப் பிடித்ததை எடுத்தார், தன் பையில் மறைத்தார். ஒன்றுமே நடக்காதது போல நடந்து வெளியேறினார். களங்கமற்ற அவரின் கண்களைப் பார்த்துவிட்டு, நண்பரும் நானும் புன்னகையைப் பகிர்ந்தோம்.
எடை குறைவான பொருளை நான் தேடியபோது, “எடையை யோசிக்காதீர்கள். பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள்” என்றார் டிலானி. வெற்றியின் வளைவு, ஈபிள் கோபுரம், நோட்ரடாம் கோயில் மூன்றும் ஒரு பளிங்கு கல்லில் இருப்பதைத் தேர்வு செய்தேன். “இது எங்களின் நினைவுப் பரிசு” என்று சொல்லி அவரே பணம் செலுத்தினார்.
மழை இரவு
மேகக் குளியலில் நகரமே குளித்துக்கொண்டிருந்த வேளையில், நாங்களும் நனைந்து பல்வேறு சாலைகளைக் கடந்தோம். எப்போதும் போலவே, ‘மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம் / ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம் / இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம் / நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம் / அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் / நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய் / நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் சொர்க்கம் மீறுவாய்’ எனும் கவிஞர் வைரமுத்துவின் கவிதையை என் உதடுகள் முணுமுணுத்தன. கடந்த 20 ஆண்டுகளில், இக்கவிதையை எனக்கு நினைவுபடுத்தாத மழையே இல்லை.
ஈழபாரதியின் சகோதரர் வீட்டுக்குச் சென்றபோது, ஷூ முழுதும் நனைந்து தண்ணீர் வடிந்தது. காலுறை மற்றும் ஷூ இரண்டையும் கழுவி, தலைமுடி உலர்த்தும் ஹீட்டரில் காய வைத்துவிட்டு, இரவு உணவுக்கு அமர்ந்தேன்.
(பாதை விரியும்)
பெட்டிச் செய்தி:
அகிம்சையும் அமைதியும்!
கிரேவின் மெழுகு அருங்காட்சியகத்தில், காந்தி மற்றும் மண்டேலாவின் மெழுகுச் சிலைகள் உள்ள அறையில் இப்படி எழுதப்பட்டுள்ளது, ‘மோகன்தாஸ் கரம்சந் காந்தி எனப்படும் மகாத்மா காந்தி (1869-1948) அகிம்சை மூலம், ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பை முன்னிலைப்படுத்தினார். இவரது இயக்கம் வன்முறையற்ற ஒத்துழையாமை முறையை முன்மொழிந்தது, 1947-ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தது. நெல்சன் மண்டேலா, (1918-2013) தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி மற்றும் இனப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார். தென் ஆப்பிரிக்க குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல இனங்களை உள்ளடக்கிய ஜனநாயகபூர்வமான ‘வானவில் தேசம்’ (rainbow nation) நிறுவினார். உத்வேகம் தரக்கூடிய இந்த இரண்டு தலைவர்களும், அமைதியின் தேவையை உலகுக்கு அறிவிக்கும் வழிமுறைகளைக் கண்டடைய மற்ற அரசியல் மற்றும் மதத் தலைவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தார்கள்’.