‘கடை திறந்தும் விற்பார் இல்லை’ - விவசாயிகள் வராததால் ‘பலவீனமாகும்’ பெருந்துறை உழவர் சந்தை


பெருந்துறை உழவர் சந்தை முகப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை உழவர் சந்தைக்கு விவசாயிகள் வருகை குறைவால் ‘டல்’ அடித்து காணப்படுகிறது. உழவர் சந்தையின் பக்கம் விவசாயிகளை ஈர்க்க, தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்து லாபமடையவும், பொது மக்கள் நேரடியாக குறைந்த விலையில் இவற்றை வாங்கி பயனடையவும், திமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.

உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளை எடுத்து வர இலவச பேருந்து சேவையையும், உழவர் சந்தையில் எவ்வித கட்டணமும் இல்லாமல் தங்கள் காய்கறிகளை விற்பனை செய்ய இடமும் அரசு ஒதுக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, தாளவாடி ஆகிய ஆறு இடங்களில், வேளாண்மை விற்பனைத் துறை சார்பில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமான அளவு காய்கறிகள் விற்பனையாகி வருகின்றன.

பொதுவாக உழவர் சந்தையில் போதுமான காய்கறிகள் வரத்தாகவில்லை. விலை அதிகமாக உள்ளது என்பது போன்ற குறைகள் தான் பேசப்படும். ஆனால், பெருந்துறை உழவர் சந்தையில், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் வருவதில்லை என்பதே குறையாக மாறியுள்ளது.

பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையத்தில் செயல்படும் உழவர் சந்தைக்கு சீனாபுரம், பெத்தாம்பாளையம், திங்களூர், காஞ்சிகோயில், நல்லாம்பட்டி, கம்புளியம்பட்டி, விஜயமங்கலம், பெரிய வீர சங்கிலி, சின்ன வீர சங்கிலி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், அவர்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

பெருந்துறை உழவர் சந்தையில் 360-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் உழவர் சந்தைக்கு வராததால், உழவர் சந்தையின் செயல்பாடு ‘டல்’ அடித்துள்ளது.

தற்போதைய நிலையில் பெருந்துறை உழவர் சந்தைக்கு 40 விவசாயிகள் மட்டுமே காய்கறிகளை எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்துறையில் செயல்படும் காய்கறிச் சந்தையில், மொத்த விலைக்கு காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்வதும், தங்கள் நிலத்திற்கே தேடி வரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும், பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடும் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதையும் விவசாயிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

பெருந்துறை உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வருமாறு துண்டு
பிரசுரம் மூலம் விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்யும் வேளாண் துறையினர்.

இந்நிலையில், பெருந்துறை உழவர் சந்தைக்கு ‘உயிர்’ கொடுக்கும் வகையில், அதிக விவசாயிகளை ஈர்க்க, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை குழு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெருந்துறை உழவர் சந்தை நிர்வாக அதிகாரி பெ.ராமகிருஷ்ணன் தலைமையில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து, பெருந்துறை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பெ.ராமகிருஷ்ணன் கூறியதாவது: பெருந்துறை உழவர் சந்தையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகள், கீரை வகைகள், பழவகைகள், கிழங்கு, தேங்காய், இளநீர், மக்காசோளக் கதிர்கள் ஆகியவற்றை உழவர் சந்தையில் விற்பனை செய்ய வருமாறு அழைப்பு விடுத்து வருகிறோம்.

பெருந்துறையைச் சுற்றியுள்ள நிச்சாம் பாளையம், சீனாபுரம், திங்களூர், நல்லாம்பட்டி, பெத்தம்பாளையம் போன்ற பகுதிகளில், ஏற்கனவே உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெற்றுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வருகிறோம். உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபம் அடைகின்றனர்.

மேலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில், தரமான காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்கு போன்றவை கிடைக்கின்றன. எனவே பெருந்துறை உழவர் சந்தையை விவசாயிகளும் நுகர்வோரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உழவர் சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் வரத்தை அதிகரிப்பது தொடர்பான தங்களது ஆலோசனைகளை உழவர் சந்தையில் ஒட்டப்பட்டுள்ள கியூ ஆர் கோடு மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இப்பகுதியில், வேளாண்மை தொடர்பாக நடக்கும் கருத்தரங்குகள், அரசு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் உழவர் சந்தைக்கு வாங்க என்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். எங்களது முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x