கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேப்பனப்பள்ளி ஊராட்சியை தரம் உயர்த்த கோரிக்கை


வேப்பனப்பள்ளியில் மழைநீர் வடிகால் வசதியில்லாத பேரிகை -கிருஷ்ணகிரி சாலை.

கிருஷ்ணகிரி: ஆந்திர, கர்நாடக மாநில எல்லையில் உள்ள வேப்பனப்பள்ளி ஊராட்சியைத் தரம் உயர்த்தி, மழைநீர் மற்றும் சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா்நாடக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி வேப்பனப்பள்ளி உள்ளது. சட்டப்பேரவை தொகுதி அந்தஸ்து இருந்தாலும், இன்று வரை ஊராட்சியாக உள்ளது. இங்கு 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராம மக்கள் வருகை: இந்த ஊராட்சியைச் சுற்றிலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கு வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட ஒ.என்.கொத்தூர், கொட்டமாக்கனப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்துக்கு உட்பட்ட கனுமானப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்களும் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு வேப்பனப்பள்ளிக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

நகரப் பகுதிக்கு இணையாக.. ஊராட்சி அந்தஸ்தில் வேப்பனப்பள்ளி இருந்தாலும், நகரப் பகுதிக்கு இணையாக இங்கு மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இருக்கும். மேலும், இக்கிராம பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் இருந்து வருகிறது. விவசாயம் சார்ந்த சந்தை மற்றும் வணிகத்துக்கு வேப்பனப்பள்ளியே மையமாக உள்ளது.

இதனால், வேப்பனப்பள்ளி எப்போதும் மக்கள் நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும். ஆனால், ஊராட்சி அந்தஸ்தில் இருப்பதால், மக்களின் அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லை.

இதனால், மழை நேரங்களில் மழை நீர் சாலைகளில் வெள்ளம்போல பெருக்கெடுத்து செல்கிறது. அதேபோல, தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதியில்லாததால், கழிவுநீர் தெருக்களில் வழிந் தோடும் நிலையால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

கூடுதல் கவனம் தேவை: இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: வேப்பனப்பள்ளி நகரப் பகுதிக்கு இணையாக வளர்ந்து வருகிறது. எனவே, வேப்பனப்பள்ளி ஊராட்சியைத் தரம் உயர்த்தி மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், இங்குள்ள காந்தி சிலை முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையான சாலையில் போக்குவரத்துக்குப் பிரதானமாக உள்ள நிலையில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் இல்லை. மேலும் மழை நேரங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதுடன்,இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் சூழ்ந்து வருகிறது.

மழைக்கு முன்னர்: இதேபோல, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கடை, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் முன்னர் சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கவும், ஊராட்சியைத் தரம் உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

x