தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கழிப்பறைகள் திறப்பதில் தாமதம்: திறந்தவெளியை பயன்படுத்தும் மக்கள்


தாம்பரம் பக்தவச்சலம் தெருவில் ஆமைவேகத்தில் நடைபெறும் கழிப்பறை பணி. | படம் : எம். முத்துகணேஷ்

தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பக்தவச்சலம் தெருவில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி பல மாதங்களாக நடைபெறுவதால் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் உங்கள் குரல் பகுதிக்கு தொலைபேசி வாயிலாக தாம்பரத்தை சேர்ந்த முஜிபிர் ரஹ்மான் என்பவர் கூறியதாவது: மேற்கு தாம்பரம் பக்தவச்சலம் தெருவில் ஏற்கெனவே இருந்த பொதுக்கழிப்பறையை அகற்றிவிட்டனர். இதனால் தற்போது அந்த தெரு முழுவதுமே ஒரு திறந்தவெளி கழிப்பறையாக மாறிவிட்டது.

அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மக்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கழிப்பறை இல்லாததால் அவர்கள் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, பக்தவச்சலம் தெருவில் ஏற்கெனவே கழிப்பறை பயன்பாட்டில் இருந்தது. அது பழுதடைந்துவிட்டதால், தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் கழிப்பறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு வாரங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.

x