குமரியில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள், இறைச்சி விற்பனை: நடவடிக்கை கோரும் பொதுமக்கள்


கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் மீன்கள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள், இறைச்சி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், தென்னை, நெல் விவசாயத்தை போல் மீன்பிடித் தொழிலும் பிரதானமாக உள்ளது.

குமரி கிழக்கு, மேற்கு கடற்கரைகளில் உள்ள 4 மீன்பிடித் துறைமுகங்களில் 46 மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

மீன் வர்த்தகம் மூலம் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை குமரி மாவட்டம் ஈட்டுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் தரமுள்ள மீன்களை வர்த்தக ரீதியாக விஷத்தன்மை கொண்டதாக மாற்றி விற்பனை செய்யும் போக்கு நிலவுகிறது.

பார்மலின் கலப்பு: மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் ஏலக் கூடத்தில் ஏலம் விடப்படுகிறது. மீன்களை வாங்கும் பெரிய வியாபாரிகள் சிலர் பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக மீன்களின் மீது பார்மலினை கலக்கின்றனர். சிறிய மீன் சந்தைகளில் இருந்து வாங்கி நகர பகுதிகளில் உள்ள கடைகளில் இத்தகைய மீன்கள் விற்பனை செய்யப்படுவது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பார்மலின் இறந்தவர்களின் உடலை பல மாதங்கள் வரை கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த மருந்தாகும். இதை இறந்த விலங்குகளின் உடல்களில் ஊசி மூலம் செலுத்தி ஆண்டுக் கணக்கில் கெடாமல் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ரசாயன தன்மையுள்ள பார்மலின் கலந்த அசைவ உணவு சாப்பிடுவோருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல மாட்டு இறைச்சி கடைகள், மீன் கடைகளில் விற்பனையாகாமல் மிஞ்சிய மீன்கள், இறைச்சி மீது பார்மலினை கலப்பது தெரிய வந்துள்ளது.

சிறிய வகை மீன்கள் கெடாமல் இருப்பதற்கு அவற்றின் மீது பார்மலினை அதிக தண்ணீர் கலந்து தெளிப்பதாக புகார் எழுந்துள்ளது. சுறா, வெள மின், நெய் மீன், பாறை மீன் உட்பட பெரியரக மீன்களின் செவிள், வால் பகுதி போன்றவற்றில் ஊசி மூலம் பார்மலினை செலுத்துகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உட்பட பல பகுதிகளில் பார்மலின் கலந்த மீன்களை வாங்கி பயன்படுத்திய மக்கள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதியடைந்தது குறித்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் முறையாக ஆய்வு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால் இரு வாரம் கடந்த பின்னரும் இதுவரை குமரி மாவட்டத்தில் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் அசைவ உணவு பொருட்களை நம்பி வாங்கி பயன்படுத்த முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து நாகர்கோவில் ராணித்தோட்டத்தை சேர்ந்த சம்சுதீன் என்பவர் கூறியதாவது: கடற்கரை பகுதிகள் அதிகம் நிறைந்த குமரி மாவட்டத்தில் தரமான மீன்கள் கிடைப்பது இயல்பு. அதிக புரதம், வைட்டமின் சத்துகள் நிறைந்திருப்பதால் மீன்களை அடிக்கடி வாங்கி உண்கிறோம். இந்நிலையில் வர்த்தக ரீதியில் மீன்கள் மீது பார்மலின் கலந்து தரமற்றதாக மாற்றும்போக்கு தொடர்கிறது. பார்மலின் கலந்த மீன்கள் பிடித்து சிலமணி நேரமே ஆன கரைமடி மீன்கள் போன்று காட்சியளிக்கும்.

இதை வாங்கி சென்று உண்ணும்போது ப்ளீச்சிங் பவுடர் வாடை வீசுவதை வைத்தும், உடல் உபாதை ஏற்பட்ட பின்னரும் தான் அறியமுடிகிறது. பல இறைச்சி கடைகளிலும் இது போல் நடக்கிறது. பழங்கள் விற்பனை செய்யும் பல்வேறு கடைகளிலும் அவை கெடாமல் இருக்க பார்மலினை அதிக தண்ணீர் கலந்து ஸ்பிரே மூலம் தெளிக்கின்றனர்.

எனவே மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருட்கள் மற்றும் பழங்கள் கெடாமல் இருக்க ரசாயனங்களை கலப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரசாயனம் கலந்த சைவ, அசைவ உணவு பொருட்களை விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிப்பதுடன் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.