தேன்கனிக்கோட்டை அருகே சாலை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக் கிராமங்கள்!


தேன்கனிக்கோட்டை அருகே மேலூரிலிருந்து தொழுவபெட்டா மலைக்கிராமத்துக்கு செல்லும் மண் சாலையில் இருசக்கர வாகனத்தை நகர்த்த போராடும் தந்தை, மகன்.

ஓசூர்: தேன்கனிகோட்டை அருகே சாலை வசதியில்லாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மக்களவைத் தேர்தலை புறக்கணித்தும் நடவடிக்கை இல்லை என மலைக் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட தொழுவபெட்டா, டி.பழையூர், கல்பண்டையூர், குல்லட்டி, கவுனூர், தொட்டதேவனஅள்ளி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்குச் செல்ல மேலூரிலிருந்து 9 கிமீ தூரத்துக்கு சாலை வசதியில்லை.

வனத்துறை அனுமதி மறுப்பு: இதனால், இக்கிராம மக்கள் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி வழியாக அச்சத்துடன் தினசரி பயணித்து வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கிமீ தூரம் சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால், இக்கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் 9 கிமீ தூரம் நடந்து சென்று பேருந்தில் 10 கிமீ தொலைவில் உள்ள உனிசெட்டி மற்றும் 24 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு உயர் கல்வி பயில வந்து செல்கின்றனர்.

பலர் இருசக்கர வாகனப் போக்குவரத்தை நம்பியிருந்தாலும், மண் சாலையில் பல நேரங்களில் இருசக்கர வாகனங்கள் பழுதாகி வழியில் நின்று விடுவதால், பெரும் துயரங்களைச் சந்திக்கும் நிலையுள்ளது. குறிப்பாக இரவு நேரப் பயணம் இவர்களுக்குச் சவாலாக இருந்து வருகிறது.

சேறும், சகதியுமாக.. பல ஆண்டுகளாகச் சாலை வசதி கோரியும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொழுவபெட்டா, குல்லட்டி கிராம மக்கம் புறக்கணித்தனர். இதனிடையே, தொழுப்பெட்டா, பழையூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் மட்டும் மண் கொட்டப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது.

தற்போது பெய்த மழைக்கு அந்த சாலையும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இடம்பெயர முடிவு: இதுதொடர்பாக மலைக் கிராம மக்கள் கூறியதாவது: தொழுவபெட்டாவைச் சுற்றிலும் உள்ள சிறிய மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேன்கனிக்கோட்டையிலிருந்து மேலூர் வரை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. மேலூரிலிருந்து தொழுப்பெட்டாவுக்கு 9 கிமீ சாலை வசதியில்லாததால், கல்வி, மருத்துவம், அத்தியாவசியத் தேவைக்குத் தினசரி அவதிப்படும் நிலை நீடித்து வருகிறது.

அரசு துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, வனத்துறையின் அனுமதியைப் பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும் தேர்தல் புறக்கணிப்பு வரை போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லை.

எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைக்கவில்லை என்றால், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அண்டை மாநிலத்துக்குக் குடி பெயர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.