தேவனூர்புதூர் அரசுப் பள்ளியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் - மாணவிகள் கவலை


தேவனூர்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

உடுமலை: உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தேவனூர்புதூர் கிராமத்தில் நாச்சிமுத்து, பழனியம்மாள் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட 3 பிரிவுகளில், சுமார் 80 மாணவிகள் பயில்கின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கியது முதலே, மாணவ,மாணவிகளை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து பள்ளி ஆசிரியர்களும், நல்ல மதிப்பெண்கள் பெறும் நோக்கில் மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

ஆனால், தேவனூர்புதூர் அரசுப்பள்ளியில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகள் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவிகள் சிலர் கூறியதாவது: உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர்புதூர் மற்றும்சுற்றுவட்டாரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய கிராமங்கள் ஆகும். கல்விக்காக உடுமலை அல்லது பொள்ளாச்சி உள்ளிட்டபகுதிகளையே நாட வேண்டியுள்ளது.

தேவனூர்புதூர் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை நடத்த போதிய ஆசிரியர்கள்இல்லை. மாணவிகளே பாடங்களை படிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், என்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘இப்பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய ஆசிரியை ஒருவர் பணியிட மாறுதலிலும், மற்றொருவர் பணி ஓய்வும் பெற்றனர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாற்றுப் பணியில் வந்த ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளிக்கு சென்றுவிட்டார்.

ஆகவே 3 பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.