கல்வி உரிமைச் சட்ட சேர்க்கையில் தனியார் பள்ளிகளின் முரண்பாடுகளுக்கு முட்டுக்கொடுக்கும் அதிகாரிகள்!


கள்ளக்குறிச்சி: அனைவரும் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் கல்வி உரிமைச் சட்டம் 14 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. அரசு இதற்கான கட்டணத்தை ஏற்று வழி நடத்தினாலும், தனியார் பள்ளிகளில் இதை சரிவர நடைமுறைப்படுத்துவது இல்லை.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அவர்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் வகையில் இதற்கான சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் இயங்கும் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்து சேர்க்கலாம்.

‘இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது’ என்று சட்டம் சொல்கிறது. இவ்வாறு சேர்க்கை பெற விரும்புவோர், குறிப் பிட்ட பள்ளியில் இருந்து 1 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு வரை இந்த தொலைவு 5 கி.மீ என இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் இடங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 178 தனியார் பள்ளிகளில் 2,545 சேர்க்கை இட ஒதுக்கீடு உள்ளது. இந்தாண்டு 1,711 மாணவர் கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 834 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 1,711 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்றாலும், அதிலும் பல சிக்கல்கள் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து இச்சலுகையை பெற முடிவதில்லை.

தனியாருக்கு ஆதரவாக.. இதுபற்றி கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி ஆர்வலர்களிடம் கேட்டபோது, “அனைவருக்கும் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறுவதற்கான இருப்பிட தூரம் 1.கி.மீ என அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆளும்கட்சியின் எம்எல்ஏ-வின் உறவினர் ஒருவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தின் கீழ்சேர்க்கை வழங்கப்படுகிறது. அவ்வாறு சேர்க்கைபெறும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம், இதரசெலவுகள் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கின்றன.

தனியார் பள்ளிகளுக்கான வகுப்பு வாரியான கட்டண நிர்ணய பட்டியலையும் மாவட்டக் கல்வித்துறை வெளியிடாமல், அவரவர் விருப்பத்திற் கேற்ப கட்டணங்களை வசூலிக்க வழிவகை செய்து வருகிறது.

ஆர்டிஇ சட்டத்தின் மூலம் முதல் வகுப்பில் சேரும் ஒரு மாணவரிடம், சீருடை, புத்தகம், கல்விகற்றல் உபகரணங்கள், காலணிகள் உள்ளிட்ட வற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர். முதல் ஆண்டில் இதைச் செலுத்தி கல்வி பயிலும் மாணவர், அடுத்த ஆண்டு அந்தக் கட்டணத்தை செலுத்த முடியாமல் மீண்டும் அரசுப் பள்ளிக்கே திரும்பும் நிலை ஊரகப் பகுதிகளில் பரவலாக காண முடிகிறது.

சில இடங்களில் சில தனியார் பள்ளிகளும் அரசு கல்வித் துறையில் சில நபர்களும் சேர்ந்து இதுதொடர்பான மோசடியில் ஈடுபடுகின்றனர்.

உதாரணமாக, அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி ஒன்றில் முதல் வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவர், சில நெருக்கடிகளால் அடுத்த கல்வியாண்டில் அங்கிருந்து விலகி, அங்குள்ள பிற அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்.

அந்த மாணவருக்கான எமிஸ் எண்ணை (தமிழக பள்ளி கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்) உடனடியாக அந்த தனியார் பள்ளி நிர்வாகம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வழங்குவதில்லை. அரசு தரப்பிலும் அதை கேட்டுப் பெறுவதில்லை.

எமிஸ் எண்ணை மாற்றாமல் காலம் தாழ்த்தி,கல்வித்துறை அலுவலர்களும், தனியார் பள்ளி நிர்வாகமும் இணைந்து, அந்த மாணவர்தொடர்ந்து தனியார் பள்ளியில் பயில்வதாகவே கணக்கு காட்டி அரசிடம் இருந்து அந்த மாணவருக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் மோசடிகள் நடைபெறுகின்றன” என்று தெரிவிக்கின்றனர்

கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளிகளுக் கான மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜிடம் இதுபற்றி கேட்ட போது, “இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் அடுத்து எந்தப் பள்ளிக்கு மாறுகின்றனரோ, அங்கு எமிஸ் எண்ணை உடனுக்குடன் பெற்று பதிவு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

முதல் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல் வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, அப்பள்ளி நிர்வாகம் நுழைவுத் தேர்வு நடத்தியே, தேர்வு செய்கிறது. இதுபற்றி அப்பள்ளி முதல்வரிடம் கேட்டால், “நுழைவுத் தேர்வு எல்லாம் நடத்துவது இல்லை. குறிப்பிட்ட மாணவர்களுக்கு எழுத படிக்கத் தெரிகிறதா என்று அறிய சிறிய அளவில் ‘டெஸ்ட்’ வைக்கிறோம்” என்கிறார்.

இதுபோன்ற நெருக்கடிகளாலும் எளிய மக்கள் ஆர்டிஇ சட்டத்தின் மூலம், தனியார் பள்ளிகளில் அரசுதரும் கட்டணமில்லா கல்வியைப் பெற தயக்கம்காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்தச் செயல்பாடு குறித்து கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது, “இன்று (நேற்று) நடைபெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் அரசின் ஒப்புதல் பெற்ற கல்விக் கட்டணத்தை பெற்றோர் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும். மேலும், மழலையர்களுக்கு கண்டிப்பாக நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

பெற்றோரின் அச்சம்: அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திருப்பதி கூறுகையில், “ஆர்டிஇ சட்டம்தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு வழங்கப்படும் புத்தகம், சீருடை, பை, ஷூ, கல்வி கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவருக்கான கல்விக் கட்டணம் (Per Child Expenditure) ஆகியவை குறிப்பிட்ட அளவில் வழங்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தில் நிர்ணயம் செய்துள்ளது.

இதில், கல்விக் கட்டணம் மட்டும் தான் அரசு வழங்குகிறது என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கூறுவது தவறு. இதர கட்டணங்கள் என்று சொல்லி மாணவரிடம் பணம் கேட்பது மோசடி செயலாகும். தாங்கள் எந்த கட்டணமும் கட்ட வேண்டிய தில்லை என்று தெரிந்திருந்தும், பள்ளி நிர்வா கத்தை எதிர்த்தாலோ, இது குறித்து புகார் அளித்தாலோ தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைவரக்கூடும் என்ற அச்சத்தில் பெற்றோரும் பள்ளி நிர்வாகத்துக்கு பணிந்து போகும் நிலை தான் உள்ளது.

பெற்றோருக்கு ஆதரவாக செயல்படவேண்டிய கல்வித்துறை அதிகாரிகள், புகாரை மையப்படுத்தி, தனியார் பள்ளிகள் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காக ஆதரவாக செயல்படும், நிலை தான் உள்ளது” என்கிறார்.