அடிபம்பு குழாய் கைப்பிடிக்கு சிமென்ட் பூச்சு: ஓசூர் அருகே ‘பேவர் பிளாக்’ சாலை பணியில் அலட்சியம்


ஓசூர் அருகே கோரிப்பள்ளி ஊராட்சி கோடட்டியில் சாலை அமைக்கும் பணியின்போது, மக்கள் பயன்படுத்த முடியாதபடி சாலையோடு சேர்ந்து சிமென்டால் பூசப்பட்ட அடிபம்பு குழாயின் கைப்பிடி.

ஓசூர்: ஓசூர் அருகே பேவர் பிளாக் சாலை பணியின்போது, அப்பகுதியில் இருந்த அடிபம்பு குழாயின் கைப்பிடி சிமென்டால் பூசப்பட்டதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் தேவைக்காக பல்வேறு திட்டங்களின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் ஆழ்த்துளைக் கிணறுடன் கூடிய அடிபம்பு குழாய் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

அடிபம்புகள் மறுசீரமைப்பு: இதனிடையே, உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் திட்டங்கள் மூலம் மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகம் சீராக இருந்ததால், அடிபம்பு குழாய்களை மக்கள் பயன்படுத்துவது குறைந்தது. இதனால், பல இடங்களில் அமைக்கப்பட்ட அடிபம்பு குழாய்கள் பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் காட்சிப் பொருளாக மாறின.

இந்நிலையில், நிகழாண்டில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அடிபம்புகளை மறு சீரமைப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சீர் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஓசூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் உள்ள அடிபம்பு குழாய்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பயன்படுத்த முடியாத நிலை: இதனிடையே, ஓசூர் அருகே கோரிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோடட்டி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட அடிபம்பு குழாய் மூலம் அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி வந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கனிமங்களும்-குவாரிகளும் திட்டத்தின் கீழ் கோரிப்பள்ளியில் பிடீ சாலை முதல் முனிசந்திரப்பா வீடுவரை நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.

அப்போது, அந்த சாலையோரம் இருந்த அடிபம்பு குழாயின் தண்ணீர் உந்தும் கைப்பிடியையும் சேர்த்து சாலையில் சிமென்டால் பூசி விட்டனர். மேலும், அடிபம்பு குழாயைச் சுற்றி மண் நிரப்பப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அடிபம்பு குழாயைச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்: இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய அடிபம்பு குழாய் அமைக்கப்பட்டது. பின்னர் போதிய பராமரிப்பின்றி அடிபம்பு குழாய் பழுதானது.

இந்நிலையில், இப்பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, அடிபம்பு குழாயின் கைப்பிடியை சாலையோடு சேர்ந்து பூசி விட்டனர். இதனால், அடிபம்பு குழாயைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அலட்சியமாக சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

தற்போது, எங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண, இந்த ஆழ்துளைக் கிணற்றின் அடிபம்பு குழாயைச் சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x