சிறுவனின் கேள்வியும், மடாதிபதியின் பதிலும்... பல்லக்கு ‘சர்ச்சைக்கு’ இணையாக உலா வரும் திரைப்பட காட்சி


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்றாகும். கடந்த 16-ம் நூற்றாண்டு முதல் இந்த மடம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் மடத்தின் ஆதின குருவின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது வழக்கம். ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி மடத்தின் சீடர்கள் தூக்கிக் கொண்டு வீதி உலா செல்வது வழக்கம்.

இந்த மாத இறுதியில் தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்கிச் செல்லும் இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை ஆதீனம் மற்றும் பாஜக உள்பட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தருமபுர ஆதீன பல்லக்கை தானே தோளில் சுமப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மன்னார்குடி ஜீயர் இதற்கு ஒருபடி மேலே போய், இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் எந்த ஒரு அமைச்சரும் சாலையில் நடமாட முடியாது என எச்சரித்துள்ளார்.

அதேவேளையில் இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு எட்டப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே வரும் நாட்களில் இப்பிரச்சினை ‘பூதாகரமாகுமா’ அல்லது ‘புஷ்வானமாகுமா’ என்பது தெரியவரும்.

இது ஒருபுறம் இருக்க இப்பிரச்சினை வெடித்த சில மணி நேரத்தில் இருந்து வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்களில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான ‘வேதம்புதிது’ திரைப்படத்தில் வரும் ஆதீன மடாதிபதி தொடர்பான காட்சி ஒன்று உலா வருகிறது. அதில், ஆதீன மடாதிபதியிடம் ஆசி பெறும் சிறுவன் ஒருவர், மடாதிபதியிடம் எனக்கு ஒரு சந்தேகம். உங்களை ஏன் பல்லக்கில் தூக்கி வந்தார்கள் என கேட்பார். அதற்கு அருகில் இருக்கும் நபர் (சாருஹாசன்) நீண்ட பயணம் என்பதால் அவருக்கு கால் வலிக்கும். அதனால் பல்லக்கில் வந்தார் என பதில் அளிப்பார். அப்போது குறுக்கிடும் சிறுவன், அப்ப உங்களை பல்லக்கில் வைத்து தூக்கி வந்தவர்களுக்கு கால் வலிச்சா என எதிர் கேள்வி எழுப்புவார்.

அதற்கு பதில் அளிக்க முடியாத மடாதிபதி, சிவ சிவா எல்லா சுமைகளையும் இறக்கி வைத்துவிட்டதா நினைத்தேன். அது இல்லை என்பதை பகவான் குழந்தை வடிவில் சொல்லிவிட்டார். இனி மேல் எனக்கு பல்லக்கு வேண்டாம் என கூறி நடந்து செல்வார். இந்த திரைப்படக் காட்சி தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்றதால் தான் பட்டினப் பிரவேசத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அரசின் நடவடிக்கை மீது சைவ மடாதிபதிகள், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் எழுப்பும் சந்தேகங்கள் புறம் தள்ள முடியாது. எனினும், திரைப்பட காட்சியில் வரும் சிறுவன் கேட்கும் கேள்வியின் நியாயத்தை உணர்ந்து எனக்கு பல்லக்கு வேண்டாம் எனக் கூறும் மடாதிபதியை நிஜத்தில் காண்பது இன்றைய கால கட்டத்தில் சற்று அரிதுதான்.

x