போன வாரம் ஆயிரம் `தாமரை’ மொட்டுகளே; இந்த வாரம் நான் ஆளான `தாமரை’


கடந்த சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியதாக தகவல் வெளியானது. அந்த முன்னுரையில் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதியது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக ஊடங்களில் கருத்துகளும், மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது ஓய்வதற்குள் சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசியதுடன், பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் எனவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்தப் பேச்சு வெளியான சில மணி நேரங்களில் இயக்குநர் பாக்யராஜ் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தனது பேச்சுக்கு இயக்குநர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டபோதும் சமூக ஊடங்களில் எழும் ஆதரவு, கண்டன குரல்கள் ஓய்ந்தபாடில்லை.

இது ஒருபுறம் இருக்க பாக்யராஜ், இளையராஜா படங்களை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்களும் வலம் வந்த வண்ணம் உள்ளது. இவை ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போர் மட்டுமின்றி பார்ப்போர் அனைவருக்கும் ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கிறது. இளையராஜா படத்தை போட்டு போன வார பாட்டு என்ற தலைப்பில் ஆயிரம் ‘தாமரை’ மொட்டுகளே என இளையராஜாவின் பாடல் வரிகளை எழுதி ஒருபுறமும், மற்றொருபுறம் பாக்யராஜ் படத்தை வைத்து இந்த வார பாட்டு என்ற தலைப்பில் அவரது படத்தில் வரும் நான் ஆளான ‘தாமரை’ பாடலை என குறிப்பிட்டு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

அதுபோல் வசூல் ராஜா எம்பிஎஸ் திரைப்படத்தில் நடிகர் கமல், டேய் அதையெல்லாம் மாத்துங்கடா என பேசுவார். அந்த வசனத்தை எழுதி இளையராஜா படத்தை எடுத்துட்டு பாக்யராஜ் படத்தை வைங்க என குறிப்பிடுவது போல் மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. தவிர, பாக்யராஜ் மகன் சாந்தனு மற்றும் அவரது மருமகள், யுவன்சங்கர்ராஜா ஆகியோர் இந்திக்கு எதிராக எழுதிய டீசர்ட்டுகளை போட்டுள்ள போட்டோவை வெளியிட்டு, இவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்களா என கேள்வி எழுப்பி மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இளையராஜா, பாக்யராஜின் எழுத்தும், பேச்சும் சும்மா இருக்கும் அரசியல் கட்சியினரின் வாய்க்கு அவுள் கிடைத்தது போல் என்றால், அவர்கள் குறித்த மீம்ஸ்கள் சமூக ஊடங்களில் உலவும் அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாதோருக்கு சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

x